மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விலங்கியல் மற்றும் வனவிலங்கு துறை சார்பாக போராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து உலக நீர் நாய்கள் தினம் கொண்டாடினார்கள். இந்த நிகழ்வின் போது அரிதாக பார்க்க கூடிய வகையில் இருக்கின்ற நீர் நாய்களை ஆற்றுகரை பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாணவர்கள் அதனுடைய வாழிடம், கால் தடங்கள் மற்றும் கழிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் சுமார் ஐந்து முதல் ஏழு வரையிலான நீர் நாய்களை பார்த்ததாகவும் அதனுடைய கால் தடங்கள், கழிவுகளை கண்காணித்து அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர். மறைமுகமாக கிடைத்த அதனுடைய தடங்கள் மூலம் டெல்டா பகுதியில் செல்லும் ஆறுகளில் நீர் நாய்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து ஆற்றுக் கரையோரம் இருக்கின்ற கிராம மக்கள் மற்றும் ஆற்றில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கு நீர் நாய்கள் பற்றிய விழிப்புணர்வும் அவைகளால் நிலத்தடி நீருக்கு ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நீர் நாய்கள் அழிந்து வருவதன் காரணத்தையும் , அவற்றின் வாழ்விடத்தை சிதைக்கும் மனித சட்ட விரோதமான செயல்பாடுகளையும் பற்றி ஆராயப்பட்டு நீர் நாய்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் அருகில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்வில் துறை தலைவர் எம்.பாஸ்கரன் துறை பேராசிரியர்கள் மூர்த்தி, நீர் நாய்கள் கள ஆராய்ச்சியாளர் அருண்ராஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.