6 சிலிண்டர், ரூ.2,500, தங்க மோதிரம் என வாக்குறுதிகளை தவெக அள்ளி வீசியது ஆட்சி புதிதாக கல்யாணம் ஆன புதுப்பொண்ணு போல..போக, போகத்தான் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில்நகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, ‘தவெகவிற்கு செல்வீர்களா?’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘எம்ஜிஆரை கையில் பச்சை குத்தியவன். இப்போது போல அப்போது டாட்டூ கிடையாது. நான் எங்கும் செல்லமாட்டேன். நான் டவுசர் போட்ட காலத்திலேயே எம்ஜிஆர் மன்ற உறுப்பினர். அதிமுகவில் கடைசி வரை தொண்டனாக இருப்பேன்’’ என செல்லூர் ராஜூ தெரிவித்தார். மேலும் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘திமுக, அதிமுக இணையும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளாரே?’ என்றதும், ‘‘அமைச்சர் ரொம்பப் பேசுகிறார். சின்ன பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடந்திடக்கூடாது.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, ‘‘புதிதாக கல்யாணம் ஆன புதுப்பொண்ணு போல இப்போதைய ஆட்சி உள்ளது. போக, போகத்தான் தெரியும். 6 சிலிண்டர், ரூ.2,500, தங்க மோதிரம் என வாக்குறுதிகளை தவெக அள்ளி வீசியது. அப்பாடா எவ்வளவு வாக்குறுதி என நம்பி, தங்கள் பிள்ளைங்க சொன்னதுக்காக தவெகவிற்கு ஓட்டு போட்டுடாங்க’’ என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
கடைசியாக ‘திரிஷாவிற்கு பதவி கிடைக்குமா?’ என்ற கேள்விக்கு, ‘நோ கமெண்ட்ஸ். பெண்களை இழிவுபடுத்தக்கூடாது. அவர்கள் ஏதும் செய்வார்கள். அந்த முதலமைச்சர் செய்தால் ஏற்கத்தான் வேண்டும். அப்புறம்தான் குத்துதே குடையுதேனு சொல்வாங்க. பின்னர் மாற்றம் வரும்’’ என செல்லூர் ராஜூ நகைச்சுவையாக பேசினார்.