“சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு அணிக்குத் தாவுவது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம். பதவி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு உயிர் போய்விடுமா?” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “தேர்தல் நேரங்களில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஒரு தேர்தலில் ஒரு கூட்டணியில் இருப்பவர்கள், அடுத்த தேர்தலில் வேறு கூட்டணிக்கு மாறுவார்கள். ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. ஒரு கட்சியில் அல்லது ஒரு அணியில் வெற்றி பெற்றவர்கள், மற்றொரு அணிக்கு மாறுவது, அவர்களை இழுப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, தமிழகத்தில் இதுவரை ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆறோடு நிற்குமா? அல்லது 16 ஆகுமா, 60 ஆகுமா, 100 ஆகுமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தினமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கு மாறுகிறார், இன்னும் 6 பேர், 10 பேர் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
எந்த அளவிற்கு ஒரு நாகரீகமான அரசியலுக்குச் சொந்தக்கார மாநிலமாகத் தமிழ்நாடு இருந்ததோ, அந்தத் தமிழ்நாடு இன்று அண்டை மாநிலங்களாலும், இந்திய அளவிலும், ஏன் உலக அளவிலும் ஒரு கேலிக்கூத்தாகப் பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரத்தின் மூலமாக இழுக்கக்கூடிய செயல்கள் நடைபெறுவதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சுயநலப் பதவிகளுக்காகவும், சில காரணங்களுக்காகவும் வேறு அணிக்குத் தாவுவது தார்மீக விதிகளுக்கு எதிரானது. வாக்களித்த மக்களுக்குச் செய்யும் அசிங்கமான துரோகம். பதவி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு உயிர் போய்விடுமா? இத்தகைய அநாகரிகச் செயல்களால் தமிழ்நாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகி, தமிழக அரசியல் உலகளவில் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எண்ணங்களையும், மனதையும் மாற்றுவது என்பது அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இதுபோன்ற தவறுகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யக்கூடாது. அதேபோல, தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ அல்லது நிலைநிறுத்துவதற்காகவோ மற்றவர்களை ஆசை வார்த்தைகள் காட்டி இழுக்கும் செயல்களில் பிறரும் ஈடுபடக்கூடாது.” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.