போதைக்கு எதிராகப் பேசுபவர்கள் முதலில் அந்தப் பழக்கத்தில் முற்றிலும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கடந்த ஜூன் 26 -ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது நல்ல முயற்சிதான்.
ஆனால், போதைக்கு எதிராகப் பேசுபவர்கள் முதலில் அந்தப் பழக்கத்தில் முற்றிலும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். போதை என்பது வெறும் நாள்காட்டி சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் அசுர ஆபத்தாக மது விளங்குகிறது.
தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அரசு கூறுவது வெறும் கண் துடைப்பு மட்டுமே, இதனால் மது விற்பனை எங்கும் குறையவில்லை. எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரப்போகிறீர்கள் என்பதற்கான கால நிர்ணயத்தை அரசு உடனடியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.