ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள சனந்தாஜ் நகரைச் சேர்ந்த ஹெலியா பட்டாஹி. இளைஞர் ஒருவருடன் பழகியதன் மூலம் இரண்டு மாத கர்ப்பிணியானார். கடந்த வாரம் இந்தத் தகவலை ஹெலியா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் அவரது தந்தை வோரியா பட்டாஹி மற்றும் தாய் லீலா வெயிஸ் ஆத்திரமடைந்தனர்.
கடந்த 21-ந் தேதி சனிக்கிழமை இருவரும் நீதிமன்றம் சென்று மகள் மீது புகார் அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் சுமார் 30 வலிப்பு மாத்திரைகளை மகளை வலுக்கட்டாயமாக விழுங்கச் செய்தனர். தொடர்ந்து மகளைக் கொடூரமாகத் தாக்கிய அவர்கள், அவர் உயிரோடு இருப்பதை அறிந்து தலையணையால் மூச்சை நிறுத்தி கொலை செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குர்திஸ்தான் மாகாண காவல்துறையினர், பெற்றோர் இருவரையும் கைது தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மகளைக் கொலை செய்ததை பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இந்த ‘ஆணவக் கொலை’ குறித்து ஹெங்காவ் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், ஈரானில் பெண்களைக் குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாக்கக் கடுமையான சட்டங்கள் இல்லாததே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் எனக் கண்டனம் தெரிவித்துள்ளன.