இந்தியா தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 3 ஆணையர்கள். ஒருவர் தலைமை ஆணையர். அவர்தான் ஞானேஷ் குமார். இது தவிர 2 ஆணையர்கள் இருக்கின்றனர். ஒருவர் விவேக் ஜோஷி இன்னொருவர் சுக்பீர் சிங் சாந்து. என்னதான் தலைமை ஆணையராக இருந்தாலும்.. ஞானேஷ் குமார் தனியாக முடிவெடுக்க முடியாது. ஆனால், SIR விஷயத்தில் ஞானேஷ் குமார் தனியாக முடிவெடுத்திருக்கிறார். இதை எதிர்த்து 2 ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை வெடித்து வருகிறது. இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி மும்பை சிவாஜி பூங்காவில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் குதித்துள்ளது. இதில் மிக பெரியளவு கூட்டம் திரண்டது.
இதற்கிடையே போராட்டத்தில் மக்களிடையே பேசி அபிஜித் தீப்கே, “நான் இந்த போராட்ட களத்திற்கு வரக்கூடாது என்றே காவல்துறையினர் நினைத்தனர். இதன் காரணமாகவே நேற்றிரவு என்னை தடுப்பு காவலில் அழைத்து சென்றனர். என்னை முதலில் இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டும் என்று தான் காவல்துறையினர் நினைத்தார்கள்.
ஆனால், பின்னர் எனக்கு டீ கொடுத்து, இங்கிருந்து செல்லுமாறு கூறினார்கள். அது மட்டுமல்ல, நான் செய்து கொண்டிருப்பது சரிதான் என்றும் கூட காவல்துறையினரே என்னிடம் தெரிவித்தார்கள். இன்று நாம் இங்கு எதற்காக கூடியிருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தனிநபருக்கு எதிரான போராட்டம் அல்ல. தேர்தல் தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்பதற்காக தான் நாம் வீதிக்கு வந்திருக்கிறோம். அரசு முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.
அதனால் தான் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றுகிறதா என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் எங்களுடைய கோரிக்கை தெளிவானது. தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். 2025-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை முடக்க வேண்டும்.
எஸ்ஐஆர் தொடர்பான கேள்விகளுக்கும் முறையான பதில் வேண்டும். அமித் ஷா, சச்சின் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்தும் நாம் கேள்விகளை எழுப்புகிறோம். காந்தி ஜெயந்தி நாளில் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. காந்தியின் வழியில் நியாயத்துக்காக குரல் கொடுப்பதே எங்களுடைய நோக்கம்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸுக்கு நான் சவால் விடுக்கிறேன். இங்கு திரண்டிருக்கும் போராட்டக்காரர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் அனுப்புங்கள். நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும். எங்களுடைய முழக்கம் ஒன்றுதான்.. ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் பின்வாங்கப் போவதில்லை” என அபிஜித் தீப்கே தெரிவித்தார்.