குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி தினம் தினம் சித்ரவதை செய்த கணவனை ஆத்திரத்தில் மனைவி, கத்தியை எடுத்து குத்தி கொன்ற சம்பவம் பெங்களூரை திடுக்கிட வைத்துள்ளது. பெங்களூர் லட்சுமிபுரா பகுதியில் வசித்து வரும் ராஜசேகர். இவர் ஒரு தனியார் வங்கியில் ‘லோன் ஏஜென்ட்’ ஆக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி மாலாஸ்ரீ . இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. லட்சுமிபுரா வீட்டின் தரைதளத்தில் ராஜசேகரின் பெற்றோரும் முதல் மாடியில் ராஜசேகர் – மாலாஸ்ரீ தம்பதியினரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவில் ராஜசேகர் – மாலாஸ்ரீ இடையே தகராறு ஏற்பட்ட இருவரும் வாக்குவாதம் செய்தனர். அதன்பிறகு திடீரென்று சத்தம் எதுவும் கேட்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வந்தது.
இதற்கிடையே மாலாஸ்ரீ தனது குடும்பத்துக்கு போன் செய்து சண்டையில் கத்தியால் ராஜசேகரை குத்திவிட்டதாக கூறி அழுதார். உடனடியாக ராஜசேகரின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அங்கு ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள் ராஜசேகரை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவலறிந்த கெம்பேகவுடா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜசேகரின் மனைவி மாலாஸ்ரீ , ”எனக்கும், ராஜசேகருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. என்னுடைய கணவர் என்னை பகலில் நன்றாக பார்த்து கொள்வார்.
ஆனால் இரவில் சித்ரவதை செய்வார். குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி இரவில் மதுபானம் குடித்து வந்து அடித்து உதைப்பார். நேற்று முன்தினமும் எங்களுக்குள் சண்டை வந்தது. ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்தினேன். அவர் இறந்துவிட்டார்” என ராஜசேகரின் மனைவி மாலாஸ்ரீ தெரிவித்தார். குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி சித்ரவதை செய்த கணவனை குத்தி கொன்ற சம்பவம் பெங்களூரை திடுக்கிட வைத்துள்ளது.