இவ்வளவும் பண்ணிட்டு ஜாலியாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்துட்டு இருக்காங்க.. மனசாட்சி இல்லையா.. அவர்களின் உறவினர்கள் இறந்து போனால், இப்படிதான் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பார்களா? என உயிரிழந்த அருணாச்சலத்தின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம். இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்பாகம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த அவர், 18-ந் தேதி அதிகாலையில் திடீரென மயங்கி விழுந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருணாச்சலத்தை சேர்த்தனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் நேற்று அதிகாலை உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கியதால்தான் அருணாச்சலம் இறந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே காவல் நிலையத்தில் அருணாச்சலத்தை காவல்துறையினர் தலையில் தாக்கியதாக பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவியது.
இதனிடையே லாக் அப் மரணம் தொடர்பாக தவெக சார்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தவெக ஆட்சி அமைத்த 5 வாரங்களில் 4 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறிய நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இதன்பின்னர் அருணாச்சலத்தின் தாய் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவ்வளவும் பண்ணிட்டு ஜாலியாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்துட்டு இருக்காங்க.. விசில் அடிச்சு படம் பார்த்துட்டு இருக்காங்க.. இப்படியெல்லாம் செய்யலாமா.. மனசாட்சி இல்லையா.. அவர்களின் உறவினர்கள் இறந்து போனால், இப்படிதான் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.