நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் என மொத்தம் 850 தொகுதிகளாக மறுவரையறை மூலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்திய பின் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டது.
இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா 2026, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. மக்கள்தொகை அடிப்படையிலான இந்த தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசினர்.

தமிழகம் தழுவிய கருப்புக்கொடிப் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று காலை நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதிக்கு அவர் வருகை தந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களுடன் இணைந்து, கருப்பு சட்டை அணிந்தபடி அவர் கருப்புக்கொடியை ஏற்றிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தின் போது ஆவேசமாகப் பேசிய மு.க. ஸ்டாலின் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவானது தமிழகத்தின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனக் குறிப்பிட்டார். பின்னர், அந்த மசோதாவின் நகலை தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த அதிரடி நடவடிக்கை அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்திற்குப் பரிசு வழங்குவதற்குப் பதிலாக, நாடாளுமன்ற இடங்களைக் குறைத்து தண்டனை வழங்க மத்திய அரசு துடிக்கிறது. இந்த அநீதியைத் தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்று அவர் முழக்கமிட்டார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இதேபோல் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 528 எம்.பி.க்கள் பங்கேற்ற நிலையில் மசோதாக்களுக்கு 298 பேர் ஆதரவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மசோதா வெற்றிபெற 3-ல் 2 பங்கு ஆதரவு அதாவது 352 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 298 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர்.
இதனால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. மேலும், திண்டுக்கல்லில் ரோடு ஷோ சென்ற மு.க. ஸ்டாலின் வெள்ளைச் சட்டை அணிந்து தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். மேலும், மு.க. ஸ்டாலின் ரோடு ஷோவில், கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.