அரசு அலுவலகங்களில் முதல்வரின் போட்டோ வைக்கப்பட்ட விவகாரத்தில், கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும், மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகவும் புகார்கள் வட்டமடித்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறையில் மிகப்பெரியப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக ஸ்ரீராகவ் பாலாஜி பொறுப்பு வகித்து வரும் நிலையில் இவரது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய நெட்வொர்க் இயங்கி வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பண்டகச்சாலை நகர வங்கி, கூட்டுறவு மார்க்கெட்டிங் சங்கங்கள், கூட்டுறவு ஆசிரியர்கள் சங்கம், சத்துணவு பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடைகள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை பணியாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களும் அலுவலகங்களும் மண்டல இணைப்பதிவாளரின் கீழ் மட்டுமே இயங்கி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக முதல்வரின் போட்டோவை முறையாக சுவரில் மாட்ட வேண்டும் என்று செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அத்தனை கூட்டுறவு நிறுவனங்களிலும் உடனடியாக முதல்வர் படம் பொருத்தப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
ஆனால், வெளிச்சந்தையில் எங்கு வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான முறையில் போட்டோக்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக, கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான “அபிராமி ஸ்டோர் என்ற குறிப்பிட்ட கடையில் மட்டுமே கட்டாயமாக போட்டோ வாங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவுகள் பறந்ததாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி, நிர்பந்தத்திற்கு ஆளான மாவட்டத்திலுள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும், அந்தக் கடைக்கு சென்று தலா 800 ரூபாய் கொடுத்து முதல்வர் போட்டோக்களை வாங்கியிருக்கிறார்கள். அதற்கான பில் தொகையும் நிர்வாகிகளிடம் உடனடியாக வழங்கப்பட்டது.
ஆனால், மற்ற இடங்களில் இந்த போட்டோவை வாங்கினால் வெறும் 300 ரூபாய் கூட மதிப்பு வராதாம். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் 300 ரூபாய் தந்து, இந்த போடடோவை வாங்கி கொள்ளலாம். ஆனால், அபிராமி ஸ்டோரில் ரூ.800 என பலமடங்கு கூடுதல் விலை நிர்ணயித்து விற்பனை செய்திருப்பதாகவும், சாதாரண கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் சங்கங்களை ஏமாற்றி மிகப்பெரிய அளவில் நிதிமோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. அடிமட்ட பணியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் வசூல் வேட்டை திண்டுக்கல் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பையும் உண்டு பண்ணியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர், இதுதொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையான வழக்கைத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்வர் படம் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தஸ்தில் உள்ள உயமட்ட அதிகாரிகளை இதற்காக நேரில் நியமித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.