விஜய் அவர்களை நம்பி வந்த மக்களுக்கு விஜய் என்ன பாதுகாப்பு கொடுத்தார்? விஜய் ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல அவர் பேருந்துக்குள் புகுந்து கொள்கிறார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்னும் தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், , “வெளி நாட்டுக்கு சென்று என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தீர்கள், எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்கினீர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு இந்த அரசு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
கர்நாடகாவின் கழிவு நீர் கே.ஆர்.பி அணையில் கலப்பதை நிறுத்த உறுதி செய்ய வேண்டும். கரூரில் பாதுகாப்பு கொடுக்க தெரியாமல் 41 உயிர்களை பலி கொடுத்து இருக்கிறார்கள். 9 நாட்கள் ஆகிறது. மாநில, தேசிய நெடுஞ்சாலையில் மக்களை சந்திக்க கூடாது என தடை விதிக்கிறார்கள். மக்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தான் சென்று சந்திக்கும் யாரோ செய்த தவறுக்கு ஏன் தேமுதிகவை வஞ்சிக்கிறீர்கள். இன்று இருப்பவர்கள் பேசுவது சினிமா வசனம். அன்று விமானம் பிடித்து வீட்டுக்கு சென்றவர் இன்று வரை வெளியில் வரவில்லை.

விஜய் மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும். அவர் அறிவித்த பணத்தை நேரில் சென்று வழங்க வேண்டும். புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு என சொல்கிறார்கள். ஏன் மறைய வேண்டும், தூக்கிலா போட்டு விடுவார்கள், தலையை வாங்கி விடுவார்களா? எதையும் எதிர்கொள்ள தைரியம் வேண்டும்.
குறித்த நேரத்தில் விஜய் வரவில்லை. உங்களை பார்க்கத்தானே குழந்தைகளை வைத்துக் கொண்டு தாய்மார்கள் உட்பட அனைவரும் காலை முதல் சாலையில் நிற்கிறார்கள். அந்த பொறுப்பு வேண்டாமா? 7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தே தனி விமானத்தில்தான் வருகிறீர்கள்.
விஜயகாந்த் 150 படங்கள் நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு அவர்தான் மேக்கப் உடன் முதல் ஆளாக வந்து நிற்பார். இந்த கடமை உணர்வை தவற விட்டிருக்கிறார் விஜய். அவர் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவார். ஆனால் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது காவல்துறை சப்போர்ட் கிடையாது. ஆனால் நாங்கள் அமைத்த தொண்டர் படை தான் மக்களை பாதுகாத்தது.
ஏன் அரசாங்கத்தையும், காவல்துறையும் நம்பி நீங்கள் போகிறீர்கள்? உங்களை நம்பி வந்த மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்? நம்பி வந்தவர்களுக்கு, தண்ணீர், சாப்பாடு, பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல அவர் பேருந்துக்குள் புகுந்து கொள்கிறார். 4 மணி நேரம் நின்று வரவேண்டியது தானே விஜய்.
விஜயகாந்த்தை அண்ணன் என கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யை நம்பி வந்த அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று வரை வெளியில் வராதது தவறு. கைது செய்தால் கைது செய்து கொள்ளட்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.