தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த மாயன். அதே பகுதியைச் சேர்ந்த BE சிவில் இன்ஜினியர் முடித்துவிட்டு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் ராகுல் மற்றும் இவரது நண்பர்கள் சிலரிடம் மாயன் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14.50 லட்சம் வசூல் செய்துள்ளார். தொடர்ந்து அவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று, அரசுத் துறைகளின் பெயரில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.
ஆனால் பணம் கொடுத்து மாதங்கள் கடந்த பின்னரும் கூட வேலை கிடைக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பணம் மோசடியில் ஈடுபட்ட மாயன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர் ராகுலை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராகுல் கூறுகையில், நான் BE சிவில் இன்ஜினியர் முடித்துவிட்டு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். மாயன் என்பவர் என்னிடமும், என் நண்பர்களிடமும் ரூ.14.50 லட்சம் வாங்கிட்டு, போலி பணி நியமன ஆர்டரைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார். நாங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்.

இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு தகவல் சென்றதுமே, அவர் எங்களை தீர்த்துக் கட்டுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார். நேற்று காலை நான் வேலைக்குச் செல்லும் வழியில், என் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். அங்கிருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் என்னை மீட்டனர். அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.