கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவிலுள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் மூலச்சல் பகுதியை சேர்ந்த இன்னொரு மாணவி விலவூர் பகுதியை சேர்ந்த இவரது தோழி கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக இளைஞரணியில் முக்கிய பொறுப்பில் உள்ள கல்லூரி மாணவியுடன் ஒன்றாக படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மாணவி, தோழியான தவெக நிர்வாகியுடன் கொட்டுமலை பகுதியில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவெக கன்னியாகுமரி மத்திய மாவட்ட அளவிலான பொறுப்பில் இருக்கும் கிறிஸ்டோபர் என்பவர் சொகுசு காரில் வந்துள்ளார். தவெக பெண் நிர்வாகியான மாணவியை கண்ட தவெக கிறிஸ்டோபர், அவரிடம், நானும் ஊருக்குத்தான் செல்கிறேன். எனது காரில் வாருங்கள். நான் உங்கள் வீடுகளில் விடுகிறேன் எனக்கூறி, மாணவிகள் இருவரையும் காரில் ஏற சொல்லி உள்ளார். தங்களுக்காக தவெக நிர்வாகி உதவுவதாக சொல்லவும், 2 பெண்களும் காரில் ஏறியிருக்கிறார்கள். மூலச்சல் பகுதியில் தவெக நிர்வாகியான மாணவியை இறக்கி விட்டுவிட்டு, உடன் வந்த குலசேகரத்தை சேர்ந்த மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

இடையில் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நின்றதாக தெரிகிறது. அப்போது பயங்கரமான மழை பெய்துகொண்டிருந்தது.. அந்த நேரத்தில் திடீரென காரை நிறுத்திய கிறிஸ்டோபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டு காரில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். பிறகு கோபத்தில் மாணவி அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து தவெக நிர்வாகி, மாணவியிடம் மன்னிப்பு கேட்டதுடன், சமாதானப்படுத்தியுள்ளார். பிறகு அவரை வீட்டின் முன்பு இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாராம்..
ஆனால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத மாணவி, நடந்த சம்பவத்தை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக கொற்றிக்கோடு காவல் நிலையத்துக்கு சென்று கிறிஸ்டோபர் மீது புகார் தந்தனர். ஆனால், காவல்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காமல் சமாதனம் செய்து அனுப்பி வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியது. இதனை தொடர்ந்து மாணவியின் புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த வழக்கை தக்கலை காவல் நிலையத்துக்கு மாற்றினர்.

இதைத்தொடர்ந்து கிறிஸ்டோபர் மீது பாரதிய நியாயச் சட்டத்தின் 75 மற்றும் 76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் கிறிஸ்டோபர் தலைமறைவாகி விட்ட அவரை பிடிக்க காவல்துறையினர் தேடி கொண்டிருக்கிறார்கள். ஏற்கனேவ ராணிப்பேட்டை அரக்கோணத்தில் தவெக நிர்வாகியால், ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் அதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை இல்லை.. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். ஒரு தர்ணா போராட்டமும் நடத்தினார். இதுவரை அந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. “இது என்ன வெற்றி பாலியல் திட்டமா? எந்த மூஞ்சியை வைத்து கெண்டு பெண்களுக்கு ஒன்று என்றால் வந்து நிற்பேன்” என்று பேசுகிறீர்கள் விஜய்” என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பி வரும் சூழ்நிலையில் இப்போது மீண்டும் ஒரு பாலியல் புகார், கன்னியாகுமரியில் வெடித்துள்ளது.