திருநெல்வேலி சந்திப்பில் பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா முன்பு திடீரென, கையில் பெட்ரோல் கேனுடன் ஒரு பெண் தன் குடும்பத்தினருடன் நுழைந்து என் அனுமதியில்லாமல், என் காசோலையைப் பயன்படுத்தி, றொரு பெண்ணை பயன்படுத்தி வங்கியும் புரோக்கரும் சேர்ந்து என் பணத்தை ஆட்டையப் போட்டுட்டாங்க என்று கதறி வங்கியில் நடந்த மெகா காசோலை மோசடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார். இவரது மனைவி அங்கன்வாடி பணியாளர் பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகனும், மூணாறில் திருமணமான ஒரு மகளும் உள்ளனர். வசந்தகுமார் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவரின் மருத்துவச் செலவுகாக, தங்களின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 6 லட்சம் கடன் பெற ஒரு தனியார் வங்கியை அணுகியுள்ளனர். இதற்காக, குமார் என்ற லோன் புரோக்கர் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடனுக்காக ஆறு காசோலைகளும் , வீட்டுப் பத்திரமும் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, “பத்திரத்தில் சிறிய சேதம் இருக்கிறது” என்று மழுப்பிய புரோக்கர் குமார், பாதுகாப்புக்காக என்று கூறி பத்மாவதியிடம் கூடுதலாக ஒரு கையெழுத்திட்ட காசோலையையும் வாங்கியுள்ளார்.
கடன் வந்தவுடன், வசந்தகுமார் தனது கணக்கிலிருந்து ரூ. 4.5 லட்சத்தை திருநெல்வேலி சந்திப்பில் பகுதியில் உள்ள பத்மாவதியின் பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) கணக்கிற்கு மாற்றியுள்ளார். பணம் கணக்கிற்கு வந்ததை எப்படியோ மோப்பம் பிடித்த வள்ளி, புரோக்கர் குமாரின் துணையோடு வங்கிக்குக் கிளம்பினார்.
புரோக்கர் குமாரிடம் பத்மாவதி கூடுதலாகக் கொடுத்திருந்த அந்தக் காசோலை இருந்தது. அவர்கள் நேராகப் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குள் சென்றனர். அங்கு வள்ளி, “நான்தான் பத்மாவதி” என்று போலி அடையாளம் காட்டி, ஆள்மாறாட்டம் செய்து, அந்தக் காசோலையைப் பயன்படுத்தி கணக்கில் இருந்த ரூ. 4.5 லட்சம் முழுவதையும் அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆனார்.

தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து பத்மாவதி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டபோது, “விசாரிக்கிறோம்” என்று கூறி நாட்களைக் கடத்தியுள்ளனர். வங்கி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ஆத்திரமடைந்த பத்மாவதி, நேற்று தனது குடும்பத்தினருடன் பெட்ரோல் கேன் ஏந்தி வங்கிக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்து பணம் எடுக்கப்பட்டது உண்மை எனத் தெரியவந்தது. தற்போது காவல்துறையினர் பத்மாவதியிடம் எழுத்துப்பூர்வப் புகார் பெற்று விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.