சென்னை அரும்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை விலைக்கு வாங்கியுள்ளார். அவற்றை பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக சார்-பதிவாளர் சங்கரை அணுகினாராம் . அப்போது, பத்திரத்தை வழங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சார்-பதிவாளர் சங்கர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத நடராஜன், பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலர் சங்கருக்கு பாடம் புகட்ட நினைத்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆடி அமாவாசையையொட்டி பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.
அப்போது நடராஜன் லஞ்சமாக கொடுத்த ரூ.15 ஆயிரத்தை சார்-பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் எழுத்தரின் உதவியாளர் நித்தியா ஆகியோர் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.