தேடுகிறேன்.. தேடுகிறேன்.. தேடிக் கொண்டே இருக்கிறேன். தேடுவது எனக்காக அல்ல.. மக்களுக்காக.. மாற்றம் இல்லை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே..” நல்லதும் மாற்றம் தான்; கெட்டதும் மாற்றம் தான். மொத்தத்தில் தமிழ்நாடு பெற்றிருப்பது ஏமாற்றம் தான் என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. இன்று முதல் உறுப்பினராக ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, இந்த அரசு ஏற்படுத்தி இருக்கும் சூழல் வித்தியாசத்திலும் வித்தியாசமானது. செய்வதை மட்டுமே சொல்வோம் என்று அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை தாங்களும் மறந்து, மக்களும் மறந்திருப்பார்கள் என்று எண்ணி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
அதிலும் பெயர் மாற்றப் பட்டியல் போல் வெளியான இந்த நிதிநிலை அறிக்கை, தேர்தலின் போது சொன்ன கஜானா காலி என்ற பிரச்சாரத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டது. இதனை பார்த்த ஆச்சரியக் குறிகள் கூட விக்கித்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளுக்கான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகின. அதற்கு வெற்றித் தமிழக திட்டம் என்று அலங்கார வார்த்தைகள் வைக்கப்பட்டு அறிக்கையாக வெளியாகின.

ஆனால் பட்ஜெட் ஏமாற்றத்தின் வடிவமாக உள்ளது. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் புது உருவம் கொண்டு ஜொலிக்கின்றன. இதில் புதிய அரசு கொண்டு வந்த திட்டங்களை தேடி கொண்டே இருக்கிறேன். தேடுவது எனக்காக அல்ல.. மக்களுக்காக.. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள், மாணவர்களுக்கான ரூ.15 ஆயிரம் நிதியுதவி, விடியல் பயணம் விரிவாக்கம் என்று எந்த அறிவிப்பும் வரவில்லை.. நல்லதும் மாற்றம் தான்.. கெட்டதும் மாற்றம் தான்.. வாக்களித்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம்தான் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், 5 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமோ, அதனை நிறைவேற்றுவோம். நீங்கள் சொல்வதை போல் 3 மாதங்களில் சரித்திரம் படைக்க இயலாது.. நீங்கள் சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு ஓபிஎஸ், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை முன்னோடி திட்டமாக கூட சட்டசபையில் அறிவித்திருக்கலாம். அதனை கூட அறிவிக்கவில்லை. அதுதான் எங்களின் வாதம் என்று தெரிவித்தார்.
மீண்டும் குறுக்கிட்ட செங்கோட்டையன், நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள்.. பரவாயில்லை.. அதற்காக துதிபாட வேண்டிய அவசியமில்லை என்றார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம், அந்த இடத்தை முதலில் மாற்றியவர் செங்கோட்டையன் தான் என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், இடத்தை மாற்றிய போதும் மனதிற்கு அருகில் இருக்கும் நிழற்படத்தை மாற்ற வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்.. ஆனால் ஓபிஎஸ்ஸின் பாக்கெட்டில் இடமும் மாறி இருக்கிறது. இதயமும் மாறி இருக்கிறது என்று தோன்றுவதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், எங்களின் இதயத்தின் நிலையாக வைத்திருக்கிறோம். ஜெயலலிதா என் இதயத்தில் இருக்கிறார். படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.