Narendra Modi: நேற்று: என் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தன் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளளார்.

M.K. STALIN: எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும் எங்கள் காதுகள் பாவமில்லையா..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு… இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

இதில் இரண்டு கூறுகள் உள்ளன:

1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!

2) ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?

இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,

ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,

சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று,

ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!

தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு.

எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா! என மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, மறுக்கப்பட்ட கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரம் இதையெல்லாம் போராடிப் பெற்ற இயக்கம், திராவிட இயக்கம்! பிற்படுத்தப்பட்ட மக்கள் – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் – ஆதிதிராவிட மக்கள் குறிப்பாக, அருந்ததியின மக்கள்- சிறுபான்மையின மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதியின் ஒளிவிளக்காகத் திகழும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி!

ஆனால், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பா.ஜ.க.வுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி! இந்தியா விடுதலை பெற்றபோது, பல நாடுகள் என்ன சொன்னார்கள்? ”பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு, அமைதியாக இருக்காது – பெற்ற சுதந்திரத்தை இவர்கள் ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்” என்று பல நாடுகள் கூறினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான்!

மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்! அதனால்தான் சொல்கிறோம். மோடி ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து! ஜனநாயகத்திற்கு ஆபத்து! ஒட்டுமொத்த நாட்டிற்கே பேராபத்து! ஏன் என்றால், பத்தாண்டுகாலமாக பா.ஜ.க. ஆட்சியைப் பார்த்துவிட்டோம்!

நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது! பெட்ரோல் – டீசல், கேஸ் – சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது! எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி வீழ்ந்துடுச்சு! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது! மோடி மறுபடியும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்! நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்! கலவரம் செய்வது என்பது பா.ஜ.க.வின் D.N.A.-விலேயே ஊறியது.

நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க.வினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள்! இதுதான் பா.ஜ.க. மக்களை மதிக்கும் இலட்சணம்! இதுதான் பா.ஜ.க பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு! மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பா.ஜ.கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு! என மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின்: “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்..!”

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, திராவிட இயக்கம் கருவான ஊர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் இட்ட ஊர் இந்தத் திருப்பூர்! வந்தாரை வாழ வைக்கும், திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர்வீழ்ச்சியின் எழுச்சியாகவும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கும் நீலகிரி தொகுதியை உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடும், ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்! திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர் – பேச்சாளர் – சிந்தனையாளர்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் “தகத்தகாய சூரியன்” என்றுப் பாராட்டப்பட்டவர்தான், ஆ.இராசா அவர்கள்! பாசிச பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் துணிச்சலாக நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் சிறந்த நாடாளுமன்றவாதி! வாதத்திறமையில் யாராலும் வீழ்த்த முடியாத தலைசிறந்த கொள்கையாளர்! எனது பாசமிகு சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு, நீலகிரி நாடாளுமன்ற மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு சுப்பராயன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக எந்தப் பொறுப்பு வகித்தாலும், பாட்டாளிகளின் தோழராக இருக்கக்கூடியவர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் நிறைந்திருக்கும், இந்தப் பகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, சுப்பராயன் அவர்கள்தான் சரியான போராளி! அண்ணன் முத்தரசன் அவர்களின் ஆதரவைப் பெற்ற, தொழிலாளர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, திருப்பூர் மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இருவரும் அவர்கள் போட்டியிட்ட தேர்தல்களிலேயே, அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? மாபெரும் வெற்றி உறுதி, வேட்பாளர்கள் உட்காருங்கள்!

சுப்பராயன் அவர்கள் தெரிவித்ததைப் போல, இது மிக மிக முக்கியமான தேர்தல்! இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல்! சமத்துவம் நிலைக்க – சகோதரத்துவம் தழைக்க – மதநல்லிணக்கம் செழிக்க – சமூகநீதி கிடைக்க – இந்தியா கூட்டணியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமையவேண்டும்!

நேற்று சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கோவைக்கு வந்திருந்தார்! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்? பார்த்தீர்களா? எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று, பிரமாண்டமாக இருந்ததே? “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்!” சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும்!.

அது மட்டுமா! இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும் – தமிழ்நாட்டு வரலாறும் – தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி – தந்தை பெரியார் – பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். “நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர்” என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

சமூகநீதியை நிலைநாட்டும் நமக்கும் – சமூகப் பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.க.வுக்கும் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதே கருத்துதான் இப்போது சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சிலும் எதிரொலித்திருக்கிறது! திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான், ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 100 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த நாம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்! என மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின்: சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனிசாமி “சிம்பிளி வேஸ்ட்”

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, பத்தாண்டுகள் தமிழ்நாட்டைச் சீரழித்த பழனிசாமி! நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணிதான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம்! ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல் யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனிசாமி, பா.ஜ.க.வின் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொன்னார். சரி ஏன் எதிர்த்து பேசவில்லை என்று நாங்கள் கேட்டால், பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச முடியாது அது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார்! இப்படிப்பட்டவர்களைப் பற்றி, நாங்கள் என்ன பேசுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “சிம்பிளி வேஸ்ட்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .

மு.க.ஸ்டாலின்: “யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை..!”

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, பிரதமர் மோடி அவர்கள்! எப்போதும் வெளிநாட்டு டூர்-இல் இருக்கிறவர், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்று உள்நாட்டு டூர்-இல் இருக்கிறார். கூட்டங்களில் பேசுகிறாரே! அதில் எங்கேயாவது தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்று எதையாவது பேசுகிறாரா? இல்லை! அவர் பேசுவதெல்லாம், இந்தியா கூட்டணி கட்சிகளை வசைப் பாடுகிறது! அதிலும், ஒரே பல்லவி! குடும்பக் கட்சி! ஊழல் கட்சி! இதற்கெல்லாம் நான் எத்தனையோ முறை பதில் சொல்லிவிட்டேன்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாருக்கும் நேராகப் பதவி வருவதில்லை. தேர்தலில் நின்று மக்களைச் சந்தித்து மக்களும் அவர்களுடன் செயல்பாடுகளை எடைபோட்டு வாக்களித்தால்தான், பதவிக்கு வர முடியும்! பிரதமர் மோடி அவர்கள், குடும்ப அரசியல் என்று எங்களை மட்டும் அவமதிக்கவில்லை! எங்களைத் தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களையும் அவர் அவமதிக்கிறார்!

அதே போன்று, ஊழலைப் பற்றி பேசுவதற்கு, பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டாமா? ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்க உங்களுக்குத்தான் அத்தனை தகுதியும் இருக்கிறது! தேர்தல் பத்திரம் என்று ஒரு நடைமுறையைக் கொண்டுவந்து ஊழலைச் சட்டப்பூர்வமாக்கியது யார், நீங்கள்தானே? மற்ற கட்சிகளும் அதில் நிதி வாங்கி இருக்கிறோம் என்றால், நீங்கள் அந்த நடைமுறையைக் கொண்டு வந்ததுதான் காரணம். ஆனால், நீங்கள் எப்படி நிதி வாங்கினீர்கள்?

E.D – I.T – C.B.I என்று உங்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக, ரெய்டு விட்டு மிரட்டி தேர்தல் பத்திரங்கள் பெற்றுப் பணம் பறித்தது பா.ஜ.க.! பா.ஜ.க.விற்கு பணம் கொடுத்த கம்பெனிகள் மேல் எப்போது ரெய்டு விட்டீர்கள்! உடனே அவர்கள் என்றைக்குப் பணம் கொடுத்தார்கள் என்று எல்லாத் தகவலும் இப்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறதே!

அடுத்து, பி.எம். கேர்ஸ் நிதி! இதில் வசூல் செய்த தொகையைப் பற்றி கேள்வி கேட்டால், அது தனி அறக்கட்டளை என்று சொல்கிறீர்கள்! அப்படி என்றால், அதை ஏன் பிரதமர் பெயரில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான கோடிகளை நிதியாகப் பெற்றீர்கள்? இதற்கும் பதில் இல்லை!

அடுத்து, உங்கள் ஆட்சிக்கு சி.ஏ.ஜி கொடுத்த சர்ட்டிபிகேட் என்ன? ”Seven Schemes – Seven lakh crore rupees – Mega Scam” – இதைப் பற்றி ஏன் வாயைத் திறக்கமாற்றீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிட மாற்றம் செய்த மர்மம் என்ன?

அடுத்து, ரஃபேல் ஊழல்! காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்திற்கு 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டார்கள் என்றால், பா.ஜ.க. ஆட்சியில் 1670 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள்! இதனால் பயனடைந்தது யார் என்று, காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரை பிரதமர் பதில் சொல்லவில்லை! கார்ப்பரேட்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கடன்களைத் தள்ளுபடி செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று, சகோதரர் ராகுல் நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லாமல், தனிநபர் தாக்குதல் செய்தீர்கள்! அதுமட்டுமா!, அவரின் எம்.பி பதவியையே பறித்தீர்கள்!

பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் ஊழல் பற்றிப் பேசலாமா? அதுமட்டுமா!, இப்போத ஊழல்வாதிகளுக்கு கேரண்டி கொடுக்கும் “மேட் இன் பி.ஜே.பி.” வாஷிங் மெஷின் வைத்து, ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்துகிறீர்களே! இனியும் நீங்கள் ஊழலைப் பற்றி பேசினால், கிராமத்தில் சொல்வார்களே, “யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை”என்று அப்படித்தான் மக்கள் சொல்வார்கள்! பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும், சாதனைகள் என்று தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறு செய்யும் பிரதமர் ஒருபக்கம் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Rahul Gandhi: தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவு..!

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “இந்தியாவில் சிந்தாந்தப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. அதனால் மோடி அரசு இப்போது வீட்டிற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோடி அரசு என்று சொன்னாலும், உண்மையில் இது அதானியின் அரசு. காரணம் மோடி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு தந்துவிட்டார்.

அதானி விரும்பியதால் மும்பை விமான நிலையத்தை வேறு ஒருவரிடம் இருந்து பறித்து அதானிக்கு கொடுத்துவிட்டார். அதானி எதை விரும்பினாலும், மோடி அவருக்கு அதை எளிதாக வாங்கி கொடுத்துவிடுவார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எனது எம்.பி பதவி, நான் தங்கி இருந்த வீடு என அனைத்தையும் பறித்தார்கள். அந்த வீடு போனது பற்றிக் கவலை இல்லை. காரணம், நாடு முழுவதும் எனக்கு உங்கள் இதயங்களில் இடம் இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் எனக்காக வீட்டுக் கதவை திறந்து வைப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவாகும்.

ஏன் தமிழ் மொழி, பண்பாடு, வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற, பல நிறுவனங்களை ED, IT போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி, பணம் பெற்றுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மோடிதான் இதனை செய்கிறார். மேலும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒப்பந்ததைக் கொடுத்து, ரூ.1,000 கோடி அளவிற்கு மிகப்பெரிய நன்கொடையை பாஜக பெறுகிறது. மோடி செய்த ஊழலில் இது சிறு பகுதிதான். இந்த ஊழலை செய்துவிட்டு மோடி தன்னை சுத்தமானவர் என்று அழைத்துக் கொள்கிறார்.

மோடி ஆட்சியில், 22 பெரும் பணக்காரர்கள் 70 கோடி மக்களின் பணத்தை வைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தை வைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளுக்கு ஊதியம் தந்திருக்கலாம்.

கல்வி வழங்கும் பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக, அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில், தேர்தல் ஆணையத்தில், நீதித்துறையில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று, மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனை உடனடியாக தடுத்தாக வேண்டும்.

சமூக நீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்குவோம். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக எடுப்போம். இந்தியாவில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அந்த பணியிடங்களை நிரப்பி, வேலைவாய்ப்பின்மையை முற்றிலும் நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொள்வோம்! கோவையில் வீசும் காற்று, விரைவில் புயலாக மாறும். அந்தபுயல் அதானிகளை, மோடிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எரியும்!” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: இந்த “எலக்‌ஷனின் ஹீரோ”காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான்..!”

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்திருக்கிறேன். தலைவர் கலைஞரை வளர்த்த அன்பான மக்கள் வாழும் கொங்கு மண்ணிற்கு வந்திருக்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியையும் உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். கோவை, பொள்ளாச்சி, கரூர், ஈரோடு ஆகிய தொகுதி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ள இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன் என் அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

கோவை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்! கோவையின் வணக்கத்திற்குரிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர். அதற்கு முன்னால் பதினைந்தாண்டு காலம் கவுன்சிலராகவும் இருந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தவர். அதோடு, பத்திரிகைத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை மக்கள் விரும்பும் அமைதிக் குணம் மிக்கவர் கணபதி ராஜ்குமார்! இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கோவையின் அனைத்துத் தேவைகளையும் எடுத்துச் சொல்லிப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர கணபதி ராஜ்குமார் அவர்களை கோவை நாடாளுமன்ற தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து, வெற்றி பெற வைக்கவேண்டும்.

பொள்ளாச்சி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் ஈஸ்வரசாமி அவர்கள், கல்விப் பணியையும் சமூக சேவையையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடியவர். கடந்த பத்து ஆண்டுகளாக கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியையும் ஆற்றி வந்திருக்கிறார். அத்தகைய மக்கள் தொண்டர் ஈஸ்வரசாமி அவர்களை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க, உதயசூரியன் சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு அருமைச் சகோதரி ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். மார்ச் 22-ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடுகளைப் போல் நடந்துக்கொண்டு இருக்கிறது! அந்த வரிசையில் இந்தக் கோவை – பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றி விழா மாநாட்டை போல் ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர்கள், ஆற்றல்மிகு செயல்வீரர் முத்துசாமி அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி வரும் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், பொள்ளாச்சிக்கு பொறுப்பேற்று இருக்கும் சக்கரபாணி அவர்களுக்கும், சாமிநாதன் அவர்களுக்கும், கரூரின் செயல்வீரர் நம்முடைய அன்புக்கினிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! பாராட்டுகள்!

மாநாடு போல நடந்துகொண்டிருக்கும் இந்தக் கோவை கூட்டத்திற்கு மகுடம் வைத்ததைப் போல், இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வருகை தந்திருக்கிறார்! நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, தி.மு.க. தோளோடு தோள் நிற்கிறது! தி.மு.க. எப்போதும், சோதனைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கும் கூட்டணிக் கட்சி! எப்போதும் வெல்லும் கூட்டணி, நம்முடைய கூட்டணி! அன்னை சோனியா காந்தி மீதும் சகோதரர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தணியாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்! அப்படிப்பட்ட ராகுல் அவர்களை, நம்முடைய ஸ்டைலில் வரவேற்க வேண்டும் என்றால் ராகுல் அவர்களே வருக… புதிய இந்தியாவிற்கு விடியல் தருக என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறேன்.

சகோதரர் ராகுல் அவர்களின் நடைப்பயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தேன். மும்பையில் நடந்த நிறைவு கூட்டத்திலும் பங்கெடுத்தேன். ”மக்களிடம் செல்! மக்களிடம் இருந்து கற்றுக்கொள்!” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், சகோதரர் ராகுல், தன்னுடைய நடைப்பயணத்தில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். இந்த “எலக்‌ஷனின் ஹீரோ”காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான். தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. முக்கியமான சில வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்!

பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

நீட் தேர்வு விலக்கு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றிய அரசின் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த, சட்டத்திருத்தம்!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு!

SC, ST, OBC பிரிவினர்களுக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவாதம்!

முக்கியமாக, இந்தக் கோவை – திருப்பூர் மண்டலத்தைக் கடுமையாக பாதித்திருக்கும் ஜி.எஸ்.டி. சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டம்!

இங்கு வேளாண் பெருங்குடி மக்கள் வந்திருக்கிறீர்கள். வேளாண் இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது! விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்!

இப்படி மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின்: பாஜக தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள்..!

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தேனி தொகுதியில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பாஜகவைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? பாஜக கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா? என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி. அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார்.

டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பாஜக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பாஜக, என்று சொன்னவர்தான் இந்த தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா?

நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். “மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமெரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பாஜக கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.

1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழகத்தில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பாஜகவுக்குச் சென்றார் என்று.

அதுமட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர் தினகரன். கடைசியாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்! தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓபிஎஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த அவரை மிரட்டி ராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பாஜக தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

Narendra Modi: சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக….!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி, நீலகிரி பாஜக வேட்பாளர் முருகன், பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் கே.வசந்த ராஜன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, “திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்தத் திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் அத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் நிறைந்திருக்கிறது.

ஆனால், திமுக அரசு இங்கு மிகுந்திருக்கும் மனித சக்தியையும், ஆற்றலையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது. கோவை பகுதியில் ஜவுளித் தொழில் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டிய திமுக அரசு, அத்தொழிலை முடக்கும் வகையில், மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. அதனால், வரக்கூடிய இழப்புகளை எல்லாம் மக்கள் மீது திணிக்கிறார்கள்.

நம்முடைய நாடு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முதலீடுகளை எல்லாம் வரவிடாமல் முடக்கி வருகிறது திமுக அரசு. திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக அரசுதான், தமிழகத்தில், இந்த கோவைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு முனையத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனால், மிகப் பெரிய வளர்ச்சியும், மிகப்பெரிய லாபமும் இந்தப் பகுதிக்கு கிடைக்கவுள்ளது. ஆனால், இண்டியா கூட்டணி இதுபற்றி சிந்திக்கவோ, செய்ய நினைக்கவோ மாட்டார்கள்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களை எல்லாம் அவர்கள் எப்படி பார்த்தனர் என்று தெரியுமா? அந்த மாநிலத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்பதை வைத்தே மாநிலங்களின் நலன்கள் தீர்மானிக்கப்பட்டன. ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. எந்த மாநிலத்தில் யார் ஆட்சி செய்தாலும், அந்த மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு உதவுகிறது. வளர்ந்த இந்தியாவுக்காக, வளர்ந்த தமிழகம்தான் உதவ முடியும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால்தான், இந்த தேசம் உயரும் என்று பாஜக அரசு நம்புகிறது. அதனால்தான், தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல லட்சம் கோடிகளை வழங்கியிருக்கிறது.

கோவை உட்பட தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களில், மல்டிமாடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகப் பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கோவை பகுதிக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் இண்டியா கூட்டணி, பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுகவும் அந்த விளையாட்டை விளையாடுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்த திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இந்த கோவைப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான், குடிக்க தண்ணீர் கிடைக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

திமுக எப்போதுமே ஒரு வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறது. திமுகவின் கவனம் எப்போதுமே தமிழகத்தின் வளர்ச்சி மீது இருந்தது இல்லை. ஆனால், நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். என்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து செயல்படும்போது, இந்த கொங்கு மண்டலம், நீலகிரியின் வளர்ச்சிக்காக இன்னும் வேகம்காட்டி வேகமாக செயல்படுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

திமுக அரசும், இண்டியா கூட்டணியும் எதிர்ப்பு அரசியல், வெறுப்பு அரசியலைத் தவிர உருப்படியாக எதையுமே செய்தது இல்லை. கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால், அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய மாநில அரசு, தீவிரவாதிகளை காப்பாற்றவும், பாதுகாக்கவும் வேண்டிய வேலைகளை செய்கிறது.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலின் திறப்பை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது. தமிழகத்தில் ராமர் கோயில் தொடர்புடைய நிறைய புண்ணிய தலங்கள் இருக்கிறது. அங்கெல்லாம் நானும் சென்று வந்தேன். ஆனால், அப்படிப்பட்ட புண்ணிய தலங்களுக்குச் செல்வதுகூட, இங்கு ஆட்சியில் உள்ள திமுகவுக்கு மிகவும் சிரமமானதாக இருக்கிறது. காரணம், அவர்கள் சனாதன தர்மத்தையே ஒழிக்கப்போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிறுவுவதற்காக செங்கோலை நிறுவும் ஒரு மிகப் பெரிய பணியை மேற்கொண்டபோது, அதை தமிழகத்தைச் சேர்ந்த திமுகவும் புறக்கணித்தது. சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக. இன்று இந்தியா 5ஜி என்ற உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால், திமுக 2ஜியில் ஊழல் செய்து நமது நாட்டையே அவமானப்படுத்தியது. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக – காங்கிரஸ் கட்சிகளின் முக்கியமான குறிக்கோள். அதற்குதான் அவர்கள் முன்வருவார்கள். நான் சொல்கிறேன். ஊழலை ஒழிப்போம். ஊழல்வாதிகளை தண்டிப்போம். ஆனால், அவர்கள், ஊழல் செய்வோம், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம் என்று கூறி வருகின்றனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு நான் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம். காங்கிரஸும், திமுகவும் எப்படி ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தமிழகத்துக்கு இழைத்த அந்த துரோகம். இண்டியா கூட்டணியினர் இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். திமுகவும், காங்கிரசும் செய்த இந்து துரோகத்துக்காக, வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

திமுக எப்போதும் அதிகார ஆணவத்தில் மூழ்கிக் கிடக்கும் கட்சி. பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து திமுக தலைவர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கின்றனர். அவர் யார் இந்த அண்ணாமலை என்று கேட்கிறார். அந்தளவுக்கு ஆணவம் அவர்களது கண்களை மறைக்கிறது. இந்த ஆணவத்தை தமிழகம் என்றும் அனுமதிக்காது. திமுகவின் ஆணவம், தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, காவல் துறையில் இருந்த வந்த அந்த இளைஞர் களத்தில் வீரம் காட்டி வருகிறார். அவரை தெரியவில்லை என்று கூறுகின்றனர். இதுதான் அவர்களுடைய உண்மையான குணம். குடும்ப அரசியல் செய்து வரும் அவர்களுக்கு ஓர் இளைஞன் சாதாரண குடும்பத்தில் இருந்து முன்னேறி வருவது பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

திமுக தலைவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு, இந்தத் தேர்தல் மோடியை இந்தியாவை விட்டு வெளியேறும் தேர்தல் என்று பேசுகிறார்.அவருக்கும் அவரது கட்சிக்கும் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நன்றாக காதை திறந்து கேட்டுக் கொள்ளவும். இந்த தேர்தல் ஊழலை இந்தியாவைவிட்டே அகற்றும் தேர்தல். திமுகவின் குடும்ப அரசியலை இந்தியாவை விட்டே வெளியேற்றுகிற தேர்தல். போதைப் பொருட்களை நாட்டில் இருந்து அகற்றுகிற தேர்தல். திமுக பொத்திப் பொத்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கிற தேசியத்துக்கு எதிரான போக்கை நாட்டை விட்டே வெளியேற்றுகின்ற தேர்தல்.

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, மற்றும் திருப்பூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் வெற்றி, தமிழகத்துக்கான புதிய பாதையை திறக்கப் போகிறது. இது மோடியின் உத்தரவாதம். என்னுடைய இந்த செய்தியை தமிழக மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.