சொன்னதை செய்த கனிமொழி..! 7ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் நெகிழ்ச்சி..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் – சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, கடந்த 27-ம் தேதி அன்று ஆய்வு செய்தார்.

அப்போது , கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும்ம் அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி இன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார்.

மேலும், கனிமொழி எம்.பியும் சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

நிர்மலா சீத்தாராமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி…! தமிழகம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 29 பைசா..!

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. 2014 – 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி கொடுத்து வருகிறோம்.

இன்னொன்று, மத்திய அரசு செஸ் வரியை வசூலித்து தமிழகத்துக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்கிறார்கள். பல முறை சொல்லிவிட்டேன். செஸ் வரியை கொண்டு பள்ளிக்கூடம் கட்டுவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. அப்படியாக, தமிழகத்துக்கு மொத்தமாக செஸ் வரி மூலமாக 2014-15 முதல் இன்றுவரை 57,557 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37,965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11,116 கோடி ரூபாயும், கிராமங்களில் வீடுகள் கட்டுவதற்காக 4,839 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம், கிராமங்களில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு 3,637 கோடி ரூபாய் என செஸ் வரியாக வசூல் செய்ததை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி குறித்து எப்போதும் கேள்வி கேட்கப்படுகிறது. தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தமிழகத்துக்கு கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மை இல்லை. மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி முழுமையாக மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. எஸ்.ஜி.எஸ்.டி எனப்படும் ஸ்டேட் ஜி.எஸ்.டி வரி நூறு சதவீதம் மாநிலங்களுக்கே செல்கிறது.

ஐ.ஜி.எஸ்.டியில் 50 சதவீதம் மாநிலத்துக்கும் 50 சதவீதம் பிரித்து வழங்கப்படும். உதாரணத்துக்கு, 2022 -23 மார்ச் 31 வரை தமிழகத்துக்கு எஸ்.ஜி.எஸ்.டி வரியில் 36,353 கோடி ரூபாயும், ஐ.ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு 32,611 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதே ஐ.ஜி.எஸ்.டி வரியில் மத்திய அரசுக்கே 27,360 கோடி ரூபாய்தான். ஆக, மத்திய அரசை விட மாநில அரசுக்கே நிதி அதிகம் கிடைக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இதே நிலைமைதான்.

வரிகளில் இருந்து எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது நிதி ஆணையம்தான். தமிழ்நாட்டின் மேல் விரோத மனப்பான்மை உடன் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்தது இல்லை. ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி சரியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதுதவிர சில மாதங்களில் முன்கூட்டியே நிதி ஒதுக்கப்படுகிறது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஒரு விழாவில் பேசிய கருத்துக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டியில், மத்திய அரசு 2024-15 ல் இருந்து 2022-23 வரை ஏறத்தாழ 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி வசூலித்துள்ளது.

மறைமுக வரி வருவாய் குறித்து எந்த தகவலும் அவர்கள் நம்மிடம் பகிர்நது கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் சொன்னதைபோல, நம்மிடத்தில் இருந்து செல்லக்கூடிய ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் அவர்களிடத்தில் பெறுவது 29 பைசாதான் திரும்ப பெறுகிறோம். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் 2014-2015ல் இருந்து 2022-23 வரை ரூ.2.23 லட்சம் கோடிதான் மத்திய அரசுக்கு வரி வருவாய் மூலம் கொடுக்கிறார்கள் என்றால், மத்திய அரசிடம் இருந்து அவர்களுக்கு வரக்கூடிய பணம் ரூ.15.35 லட்சம் கோடியாகத்தான் சில மாநிலங்களில் இருக்கிறது.

உதாரணமாக உத்தரபிரதேசத்தை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என்பதை 12-வது முதல் 15-வது நிதிக்குழுவின் புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் இந்திய அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 6.124 சதவீதம் வைத்திருக்கும் மாநிலத்திற்கு நிதித்துறையில் இருந்து வெறும் 4.79 சதவீதமாக மட்டுமே கிடைக்கிறது. செஸ், சர்சார்ஜ் மூலம் மாநில நிதியை மத்திய அரசு அபகரிக்கிறது. 2011-12ல் மத்திய அரசின் மொத்த வருவாயில் செஸ், சர்சார்ஜின் பங்கு 10.4 சதவீதமாக இருந்தது.

2021-22 ல் மத்திய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் மூலம் கிடைக்கும் வருவாய் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. செஸ், சர்சார்ஜ் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க தேவையில்லை என்பதால் மொத்த தொகையும் மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தொகை வரவில்லை என்று புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. நிதி ஆளுமையை மாநில அரசுகள் இழந்துள்ளன. எனவே இந்த நிதி நெருக்கடியிலும்கூட மக்கள் நலம் காக்கும் ஒரு அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் மத்திய அரசின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.72 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் கொடுப்பதைவிட இரட்டிப்பான தொகையை தமிழ்நாடு கொடுக்கிறது. நகர்ப்புற வாழ்விட பகுதிகளில் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் கொடுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் அதிக நிதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

சென்னை மெட்ரோ-2 ரயில் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை ரூ.63,246 கோடி. இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் 50 சதவீதம் நிதி வழங்க வேண்டும். 2021-22 ல் மத்திய நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டியபோதும் சொன்னார். ஆனால் இன்று வரை அதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.28.493 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் ரூ.17,532 கோடி ஒதுக்கியுள்ளது.

டெல்லி-உத்தரபிரதேசத்தில் ரூ.16,189 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ.13,109 கோடி, குஜராத்தில் ரூ.12,167 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ.11,565 கோடி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.3,273 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் இருந்தே எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கோடி, தமிழ்நாட்டிற்கு ஏன் இவ்வளவு குறைவு என்பதை புரிந்துகொள்ள முடியும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு உறுதி அளித்தபடி இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோன்று ரயில்வே திட்டங்களுக்கும் 2.5 சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ரயில்வே திட்டத்திற்கான கடைசி 5 வருடத்தில் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பி திருப்பி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டு மடங்காக பணம் கொடுத்திருக்கிறோம் என்கிறார். பண மதிப்பையும், விலைவாசி மதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தால், பணத்தின் மதிப்பு இன்று எந்தளவுக்கு குறைந்திருக்கிறது என்று தெரியும். இப்போதும் நமது முதலமைச்சர், வெள்ள நிவாரண உதவி கோரி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும். மிக்ஜாம் புயலுக்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.1,486 கோடியும், தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.541 கோடி என இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரண நிதியாக மக்களுக்கு பணமாக வழங்கி இருக்கிறோம் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்கள்.. நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் !

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தத்தளித்தன. தமிழக அரசு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. அதேசமயம், தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியதால் ஏராளமானோர் தொடர்பு கொண்டு அரசின் உதவிகளைப் பெற முடியவில்லை. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வலர்கள் ஏராளமானோர், மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தனர்.

மேலும், உதவி கோரி வரும் கோரிக்கைகளை, அதிகாரிகள், அமைச்சர்கள், தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உதவிகளைப் பெற்றுத் தரவும் ஏராளமானோர் செயலாற்றினர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னார்வலர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. அத்தகைய பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அத்தகையப் பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்த போது, களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும்! மனிதநேயம் தழைக்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதலவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் பத்து வார்டுகளுக்கு முதற்கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் மின்சாரத்துறை ,பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் வட்டார வளர்ச்சித்துறை, குடிநீர் வழங்கல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் இணைப்பு ,பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த சிறப்பு கவுண்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகாமிற்கு வரும் பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஆன்லைனில் பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நகர செயலாளர் தன தமிழ் செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி..!? வரும்… ஆனா வராது…’

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது, ‘எக்ஸ்’ தளத்தில், நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014-15-ல் இருந்து 2022-23 வரை வராக்கடன் என அறிவிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ.10.42 லட்சம் கோடி என்று பதில் அளித்துள்ள அமைச்சர், இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே என்று பதில் தந்துள்ளார்.

எப்போது வராக்கடன் பற்றி பேசினாலும் வராக்கடன் (Written off) என்றால் வராமலே போகிற கடன் (Waive off) அல்ல. அதற்கு பின்னரும் வசூலிக்கப்படும் என்று நீண்ட விளக்கத்தை நிதியமைச்சர் தருவார். எல்லோருக்கும் ஏதோ இந்த வராக்கடன் ரூ.10.42 லட்சம் கோடியையும், விரட்டி விரட்டி மத்திய அரசும், வங்கிகளும் வசூலித்து விடும் என்ற எண்ணத்தை நிதியமைச்சர் உருவாக்குவார். இதைப் பற்றி பேசுபவர்களுக்கு ஏதோ பொருளாதாரமே தெரியாது என்ற எள்ளல் நடையிலும் பேசுவார்.

ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் வராக்கடன் ரூ.10.42 லட்சம் கோடி. ஆனால் இதே காலத்தில் வசூலான வராக்கடன் ரூ.1.61 லட்சம் கோடி என அமைச்சர் பதில் அளித்துள்ளார் என்றால் நமக்கு எழும் கேள்வி இதுதான். நிதியமைச்சரே… வசூலுக்கும், வராக்கடனுக்கும் இடையே இவ்வளவு வித்தியாசம் உள்ளதே? இதற்கு பெயர் என்ன? வரும்… ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன? இவ்வாறு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம்…! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு தரமான பதிலடி..!

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோக்கும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.

சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நியாயவிலை அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நன்றாக வேலை பார்த்துள்ளீர்கள். கடந்த மழை வெள்ளத்தை விட இந்த முறை சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மத்தியக்குழு ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கிகளில் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறுகின்றனர். கோவிட் பாதிப்பின் போது வழங்கப்பட்ட நிவாரண தொகை ரூ.2000 அனைவருக்கும் முழுமையாக சென்றடைந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைப்போன்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தான் தலைவர் முடிவு எடுத்து ரூ.6000 ரொக்கமாக கொடுக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் நிவாரண தொகையை நியாயவிலை கடைகள் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிமைத்தொகை போல வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தலாமே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், “உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது முதல் மாதம் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால், வங்கியில் பணம் போட்டதை ஏராளமானோருக்கு பிடித்தம் செய்யப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் விடுபட்டு விடாமல் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலே ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பணம் வழங்கப்பட்டது போல இப்போது வெள்ள நிவாரணம் நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

அப்போது ஒரு நிருபர், மத்திய அமைச்சர் இது என்ன ஏடிஎம்மா? கேட்ட உடன் பணத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ‘‘நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமல் கொடுக்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு மேற்படிப்பிற்கு உயர்கல்வித் தொகை வழங்கல்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆபாசமாக திட்டி ஆடியோ வெளியிட்ட பாஜக முன்னாள் கவுன்சிலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சேர்ந்த பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை. பாஜக சிறுபான்மை அணி முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் சாத்தான்குளத்தில் எட்வர்ட் அன் கோ என்ற பெயரில் சமூக வலைதள குழு நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் சாத்தான்குளம் திமுக நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறை 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், நிந்தித்தல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரை என்பவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான காவல்துறைய எட்வர்ட் ராஜதுரை கைது செய்தனர்.

கப்பலோட்டிய தமிழன் நினைவு நாள்… செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர் தூவி அஞ்சலி

வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 02.09.1872- ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். வ.உ.சிதம்பரனார் அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894 -ம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். மேலும், வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வ.உ.சிதம்பரனார் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.

வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். இதன் காரணமாக 1908-ம் ஆண்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி, தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார்.

வ.உ.சிதம்பரனாரும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். வ.உ.சிதம்பரனார் சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் மறைந்தார்.

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோயம்புத்தூர் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைதொடர்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.42 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வணிகவரி துறையின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், வணிகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

இதில் பெரும்பான்மை வழக்குகள் தமிழ்நாடு வணிகவரி சட்டம், மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் நிலுவையில் உள்ளவை. இந்த சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஏற்கெனவே வழக்கில் இருந்த வரிச்சட்டங்களின்கீழ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன.

நிலுவையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு முடிவு காண வணிகர்கள் நீண்ட நாளாக முன்வருகின்றனர். இதைகவனமாக பரிசீலித்து, நிலுவை தொகையை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோல கடந்த காலங்களில் பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50 ஆயிரத்துக்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அரசின் இந்த முடிவால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடியால் பயனடைவார்கள். இவர்களை தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த 4 வரம்புகளில், முதலில் உள்ளவர்கள் மொத்த நிலுவையில் 20 சதவீதம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி, அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி, வழக்கில் இருந்து வெளிவரலாம். இதர 3 வரம்புகளில் உள்ள வணிகர்கள் நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டினால் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவை தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரைஅவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இந்த சமாதான திட்டம் அக்.16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 4 மாதங்களுக்கு, அதாவது 2024 பிப்.15-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசின் முயற்சியை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். நேற்றே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.