ராகுல் காந்தி: ஜம்மு-காஷ்மீரில் ‘மன்னராட்சி’ நடக்கிறது..!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துள்ளோம். இண்டியா கூட்டணி அவருக்கு முன் நின்றது. அதன் காரணமாக அவரது முழு நம்பிக்கையும் மறைந்துவிட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று பாஜக முதலில் கூறியது. ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்புதான் சரியானது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடி நியமனம் கூடாது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் எழுப்பியது. நேரடி நியமன முறை இருக்காது என பாஜக தற்போது கூறியுள்ளது. இப்போது நரேந்திர மோடி, இந்திய மக்களைப் பார்த்து பயப்படுகிறார். காங்கிரஸ் கட்சி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நாட்டில் 3-4 பேர் மட்டுமே அனைத்து வணிக வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். அமித் ஷாவின் மகன் கிரிக்கெட் மட்டையை எடுத்தில்லை, ஆனால் கிரிக்கெட்டின் பொறுப்பாளராகிவிட்டார். நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். பாஜக அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும். வழங்காவிட்டால், இண்டியா கூட்டணி அரசு வந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதே அதன் முதல் பணியாக இருக்கும்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எனக்கும் இருப்பது அரசியல் உறவு அல்ல; ரத்த உறவு. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என இந்த உறவு மிகவும் பழமையானது. உங்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்புகிறேன். என்னிடமிருந்து நீங்கள் எதை விரும்பினாலும் என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். எனது காஷ்மீரி பண்டிட் சகோதரர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். பாஜக தனக்கு சாதகமாக உங்களைப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால், உங்களுக்கு உதவவில்லை. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நமது அரசு வரும்போது அது ​​உங்களை உடன் அழைத்துச் செல்லும்.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்களை நடத்துகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு இருந்த மாநில உரிமையைப் பறித்துவிட்டனர். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. துணைநிலை ஆளுநர்தான் ஜம்மு காஷ்மீரை இயக்குகிறார் என்று இங்கே கூறப்படுகிறது. துணைநிலை ஆளுநர் என்ற வார்த்தை தவறானது. அவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் மன்னர்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள்.

இன்று ஜம்மு-காஷ்மீர், வெளியில் இருந்து ‘மன்னராட்சி’யால் நடத்தப்படுகிறது. இங்குள்ள செல்வம், வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் காஷ்மீரிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, வெளியாட்களுக்கே வழங்கப்படுகிறது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும். மாநில அந்தஸ்து கோரிக்கையை அது முழு பலத்துடன் தெருக்களில் இருந்து சட்டமன்றம் வரை, சட்டமன்றத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை எழுப்பும்” என ராகுல் காந்தி உரையாற்றினார்.

Omar Abdullah: கட்சி பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் திரும்பப்பெற்ற பின், மீண்டும் பட்டியலை வெளியிட்டதை பார்த்ததே இல்லை..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள தொகுதிகளுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன. அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இது தொடர்பாக உமர் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில், பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது.

ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

ஆபரேஷன் தாமரை ரூ.100 கோடிக்கு பேரம்..! கர்நாடக அரசியலில் பரபரப்பு .. !

கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவி பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிதரும் பணத்தை வைத்து தங்கள் கட்சியில் இணைக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்துப் ரவிக்குமார் பேசுகையில், “கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க தலா ரூ.50 கோடி முதல் ரூ100 கோடி வரை பாஜக தரப்பு பேரம் பேசி வருகிறது. இதன் மூலம் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆபரேஷன் தாமரையை பாஜக கையில் எடுத்துள்ளது.

என்னையும் தொலைபேசியில் அழைத்து பேரம் பேசினார்கள். ஆனால், ரூ100 கோடியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன். என்னைப் போலவே பாஜகவின் இந்த பேரத்தை ஏற்க எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் 136 எம்.எல்.ஏக்களும் பாறை போல முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பின்னால் ஆதரவாக நிற்கிறோம்”என ரவிக்குமார் கூறியுள்ளார்.

கேப் டிரைவருடன் பயணித்து குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி..!

மக்கள் பணியே மகேசன் பணி” என பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த நெறியில் ராகுல் காந்தி அன்பு, நீதி மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய செய்திக்கு லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தங்கள் ஆதரவைக் காட்டிய யாத்ரா மாபெரும் வெற்றியை பெற்றவர். பொது வெளியில் நாடு மக்களுடன் சகஜமாக ராகுல் காந்தி பழகக்கூடியவர்.

அதன் வரிசையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், உபெர் பயணத்தின் போது சுனில் உபாத்யாய் உடன் கலந்துரையாடினேன். நாட்டில் உள்ள கேப் டிரைவர்கள் மற்றும் டெலிவரி ஏஜென்டுகள் போன்ற கிக் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.

கைக்குக் கிடைக்கும் வருமானத்தில் சேமிப்பு இல்லாமலும், குடும்பத்தின் எதிர்காலத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் அவர்கள் போராடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் உறுதியான கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் நீதியை நிலைநாட்டும்” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் 11 நிமிட வீடியோவில், சுனில் உபாத்யாய் என்ற அந்த டிரைவரின் காரில் ஏறிய ராகுல் காந்தி, கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகம் ஒன்றில் சுனில் உபாத்யாய் குடும்பத்தினருடன் சாப்பிட்டு கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Uddhav Thackeray: ‘காங்கிரஸ்., என்சிபி அறிவிக்கும் மகா விகாஸ் அகாதி முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு..!’

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல என உத்தவ் தாக்கரே பேசினார்.

பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற குஷ்பு ‘தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரா..!?’

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக இணைந்து பணியாற்றினார். 2014- ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான , தேசிய மகளிர், இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். அதற்கான கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜினாமா குறித்து குஷ்பு பேசுகையில், அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பாஜக வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.

அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என குஷ்பூ தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர, வரும் 28- ஆம் தேதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டன் செல்லும்பட்சத்தில் தமிழக பாஜக தலைவர் பதவி வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பதவியை கைப்பற்ற குஷ்பு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

காமராஜர் தேசியக் கொடி இடத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்கள்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் காங்கிரஸின் பகுதி தலைவர் ஜெ.வாசுதேசன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இது தொடர்பாகச் சிவ.ராஜசேகரன் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தியமூர்த்தி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவாயிலில் சுதந்திர கொடியை ஏற்றிய பிறகு தான் பொதுக்கூட்டங்களுக்கோ, போராட்டங்களுக்கோ செல்வார். நாடு சுதந்திரம் அடையும்போது அவர் உயிரோடு இல்லை. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் பிறக்கும்போது, இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட அந்த கொடிக் கம்பத்தில் அன்று நள்ளிரவில் 12 மணிக்குப் பெருந்தலைவர் காமராஜர் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் பிறக்கும்போது, நள்ளிரவு 12 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருப்பவர் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அவ்வாறு இன்று நான் கொடியேற்றி இருக்கிறேன். 8-வது முறையாக இங்கு நான் கொடியேற்றி இருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என சிவ.ராஜசேகரன் தெரிவித்தார்.

Rahul gandhi: நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது..!

இந்திய மக்கள் ரயில் பயணத்தின்போது படும் இன்னல்களை ராகுல் காந்தி தனது “எக்ஸ்” பக்கத்தில், சாமானியர்களின் ரயில்களில் இருந்து பொதுப் பெட்டிகளைக் குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் ஒவ்வொரு வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் கூட மக்கள் தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாமல் தரையிலும், கழிப்பறையிலும் மறைந்திருந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மோடி அரசாங்கம் ரயில்வேயை தனது கொள்கைகளால் பலவீனப்படுத்துவதன் மூலம் தன்னை ‘திறமையற்றவர்’ என்று நிரூபிக்க விரும்புகிறது, இதனால் அதை தனது நண்பர்களுக்கு விற்க ஒரு சாக்கு கிடைக்கும்.

சாமானியர்களின் எண்ணிக்கையை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

‘வெற்றுச் சொம்பு மோடி’ – கர்நாடகாவில் களைகட்டும் காங்கிரஸ் பிரச்சாரம் !

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தபோது, அங்கு பாஜக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மேலும், பாஜக அரசு அனைத்து ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்கிறது என்பதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்தது.

அதன்படி அங்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அனைத்து டெண்டர்களிலும் 40% கமிஷன் வாங்கும் பாஜகவினரை கிண்டல் செய்யும் விதமாக ‘PayCM – பே சிஎம்’ என்ற ‘க்யூ ஆர் கோடு’ ஒன்றை உருவாக்கி அதனை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். அந்த க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தால் பாஜகவினர் ஊழல்கள் வெளியாகும் வண்ணம் அதனை வடிவமைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகா வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ”என்னை 91 முறை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியுள்ளது என அழாத குறையாக பேசியிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ‘CryPM’ என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற பிரச்சாரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெற்றுச் சொம்பு என மோடியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

தமிழ்நாட்டை போல கர்நாடக மாநிலத்துக்கும் மத்திய பாஜக அரசு ஏதும் செய்யாமல் இருந்து வருகிறது. அதனைக் குறிப்பிடும் வகையில், ‘வெற்றுச் சொம்பு மோடி’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்த பிரச்சாரம் கர்நாடக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Siddaramaiah: ’24×7′ படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி முதலீட்டுக்கு எதிரானது, தொழில்முனைவோருக்கு எதிரானது, தனியார் துறைக்கு எதிரானது, வரி செலுத்துபவர்களுக்கு எதிரானது, செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு எதிரானது.

இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் மையமாக மாற்றுவேன். ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியினரும் மோடியை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள். இதேபோல் 5ஜிக்கு பிறகு 6ஜியை தொடங்குவோம் என்று நான் உத்தரவாதமாக கூறினால் அவர்கள் மோடியை அகற்றுவோம் என்றே பேசுகிறார்கள்.

கர்நாடக மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றிணைந்துள்ளது. உங்கள் கனவுகள் தான் எனது தீர்மானம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனது வாழ்க்கை உங்களுக்கும் நாட்டுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047க்கு 24X7 உறுதியளிக்கிறேன். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எனது இலக்கு.

டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெங்களூரு பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே பெங்களூருவை வேகமாக முன்னேற்றி வருகின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வளர்க்கும் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தம் மிகவும் ஆபத்தானது. பெண்கள் தாக்கப்படுகிறார்கள். சந்தைகளில் குண்டுகள் வெடிக்கிறார்கள். மதப் பாடல்களைக் கேட்டதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை அல்ல. சகோதர சகோதரிகளே காங்கிரஸைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, முதலமைச்சர் சித்தராமையா, “மக்களுக்காக 24×7 நேரமும் உழைக்கிறேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ஆனால் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியின் போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?. அப்படியானால், இந்த ’24×7′ படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி உண்மையிலேயே விவசாயிகளின் நலனை விரும்புகிறாரா? என்பதை தனது மனசாட்சியிடமே அவர் கேட்டுகொள்ள வேண்டும். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு இன்னும் தயாராக இல்லை. விதைகள் மற்றும் உரங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது மத்திய அரசு.

பாஜக ஆரம்பத்திலிருந்தே விவசாயிகளுக்கு எதிரானது. முதலாளிகள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் கட்சி பாஜக. இந்த கட்சியின் டிஎன்ஏவில் விவசாயிகளுக்கு எதிரான விஷம் உள்ளது. நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடக விவசாயிகளுக்கு என்ன கொடுத்தது?.

கர்நாடக விவசாயிகள் தங்களின் நலம் விரும்பி யார் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள். விவசாயிகளுக்கு எதிரான சக்திகளுக்கு தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள்.” என சித்தராமையா தெரிவித்தார்.