பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்..! அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் நச்சுனு பதிலடி..!

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்: கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது..!

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மக்களவை தேர்தல் பணியை துவக்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோற்கடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதைபோல் 300, 400 இடங்களை பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்க முடியாது.

மேலும் சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்டபோது தமிழக அரசு கேட்ட ரூ.37,000 கோடி நிவாரண நிதிக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. தமிழகத்தில் 3 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி ஆறுதல், உதவி செய்யவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். யாராவது வருவார்களா என்று அதிமுகவினர் கடைவிரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது’ என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ..! நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதலில் நோட்டாவை வெல்லட்டும்..!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழு, மண்டலம…மண்டலம் வாரியாக சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்கிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் புறவழிச்சாலையில் உள்ள ஏ.என்.பி., திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, பொன்னையன், ஜெயராமன், சண்முகம், மணியன், மற்றும் வைகைச்செல்வன் பங்கேற்கின்றனர். அப்போது செய்தியாளார்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இலவு காத்த கிளியாக இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவினரும் இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதலில் நோட்டாவை வெல்லட்டும் அதாவது பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்..! நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்…!

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்க சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது விவாதம் நிகழ்த்தப்பட்டது. இதில் பேசிய ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதலமைச்சர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.

நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவு கூரப்படும். என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்.., சவால் விடுக்கிறேன்…, அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார். ஜார்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை” என ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

உத்தப்பிரதேசத்தில் மெகா மோசடி: வந்ததும் வந்த அந்த பெண்ணுடன் மாலையை மாத்திட்டு பணம் வாங்கிட்டு போங்க..!

உத்தப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்நிலையில் பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த கூட்டு திருமண நிகழ்வில் திருமணத்தில் ஏழைப் பெண்களுக்கு ரூ35 ஆயிரம் பணம், ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என்று உ.பி உத்தப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்தார்.

ஆனால் இந்த திருமணத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தினர். மேலும், ஏராளமான பெண்கள் ஜோடி இன்றி தனியாக நின்றனர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை, தாங்களே அணிந்துகொண்டனர்.

சிலர் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அந்தப் பெண்களிடமும், இளைஞர்களிடமும் பண ஆசை காட்டி, அவர்களையும் மணமக்களாக நிறுத்தினர். அவர்கள் அங்கு உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மாலையுடன் முன்பின் தெரியாத பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களுக்குத் தாங்களே மாலையை அணிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர். 588 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது போல புகைப்படத்தைக் காட்டி அரசிடம் பணம் பெற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போலி திருமணத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது.

இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அரசு உதவித்தொகையை அபகரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் போலி ஜோடிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட திருமண விழாவின் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக மணப்பெண், மணமகனாக படித்தவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது அம்பலமானது. திருமணம் பார்க்க வந்த சில இளைஞர்களை பணம் கொடுத்து மணமகனாக நடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா ஆரம்பித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் , மோடி ஜி அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார்..!

நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு 2020-ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்ட ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் புகார் கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையே உரசல் அதிகரித்தது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். பதிலுக்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார். அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தன்னை குறி வைத்து சமூக வலைதளத்தில் அட்டாக் செய்வதாக கூறினார்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார்.  இந்தச் சூழ்நிலையில் காயத்ரி ரகுராம் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சியாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில், புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா தேசிய ஜனநாயக கூட்டணி ஆரம்பித்தால், மோடி ஜி அதை அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு அவர்கள் அதை திரும்ப கொடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடியார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும், பாஜக அல்ல. பாஜக தனது கூட்டணியை தேசிய சர்வாதிகாரி கை முறுக்கு கூட்டணி என்று பெயர் மாற்ற வேண்டும் என பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

காவல்துறை காவலரை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த மாநில துணை முதலமைச்சர்களில் ஒருவரான அஜித் பவார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி முடிந்தது மேடையில் இருந்து இறங்கும் புனே கண்டோமன்ட் தொகுதி பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே சற்று நிலை தடுமாறுகிறார்.

துணை முதலமைச்சர் அஜித் பவார் மேடையில் இருக்கையில், கோபமடைந்த கண்டோமன்ட் தொகுதி பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே அங்கு பணியில் இருந்த காவல் காவலரை கன்னத்தில் தாக்கியது தெரிகிறது. தாக்கப்பட்டவர் பண்ட்கார்டன் காவல் நிலைய காவலர் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ சுனில் காம்ப்ளே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக எம்எல்ஏ, “நான் யாரையும் தாக்கவில்லை. நான் இறங்கி வரும்போது யாரோ குறுக்கே வந்தனர். நான் அவர்களைத் தள்ளிவிட்டு முன்னேறி வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்தலா 16 தொகுதிகள் என நாடாளுமன்ற தொகுதி பங்கீடு

மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது.

இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிர்மலா சீத்தாராமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி…! தமிழகம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 29 பைசா..!

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. 2014 – 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி கொடுத்து வருகிறோம்.

இன்னொன்று, மத்திய அரசு செஸ் வரியை வசூலித்து தமிழகத்துக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்கிறார்கள். பல முறை சொல்லிவிட்டேன். செஸ் வரியை கொண்டு பள்ளிக்கூடம் கட்டுவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. அப்படியாக, தமிழகத்துக்கு மொத்தமாக செஸ் வரி மூலமாக 2014-15 முதல் இன்றுவரை 57,557 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37,965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11,116 கோடி ரூபாயும், கிராமங்களில் வீடுகள் கட்டுவதற்காக 4,839 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம், கிராமங்களில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு 3,637 கோடி ரூபாய் என செஸ் வரியாக வசூல் செய்ததை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி குறித்து எப்போதும் கேள்வி கேட்கப்படுகிறது. தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தமிழகத்துக்கு கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மை இல்லை. மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி முழுமையாக மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. எஸ்.ஜி.எஸ்.டி எனப்படும் ஸ்டேட் ஜி.எஸ்.டி வரி நூறு சதவீதம் மாநிலங்களுக்கே செல்கிறது.

ஐ.ஜி.எஸ்.டியில் 50 சதவீதம் மாநிலத்துக்கும் 50 சதவீதம் பிரித்து வழங்கப்படும். உதாரணத்துக்கு, 2022 -23 மார்ச் 31 வரை தமிழகத்துக்கு எஸ்.ஜி.எஸ்.டி வரியில் 36,353 கோடி ரூபாயும், ஐ.ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு 32,611 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதே ஐ.ஜி.எஸ்.டி வரியில் மத்திய அரசுக்கே 27,360 கோடி ரூபாய்தான். ஆக, மத்திய அரசை விட மாநில அரசுக்கே நிதி அதிகம் கிடைக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இதே நிலைமைதான்.

வரிகளில் இருந்து எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது நிதி ஆணையம்தான். தமிழ்நாட்டின் மேல் விரோத மனப்பான்மை உடன் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்தது இல்லை. ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி சரியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதுதவிர சில மாதங்களில் முன்கூட்டியே நிதி ஒதுக்கப்படுகிறது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஒரு விழாவில் பேசிய கருத்துக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டியில், மத்திய அரசு 2024-15 ல் இருந்து 2022-23 வரை ஏறத்தாழ 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி வசூலித்துள்ளது.

மறைமுக வரி வருவாய் குறித்து எந்த தகவலும் அவர்கள் நம்மிடம் பகிர்நது கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் சொன்னதைபோல, நம்மிடத்தில் இருந்து செல்லக்கூடிய ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் அவர்களிடத்தில் பெறுவது 29 பைசாதான் திரும்ப பெறுகிறோம். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் 2014-2015ல் இருந்து 2022-23 வரை ரூ.2.23 லட்சம் கோடிதான் மத்திய அரசுக்கு வரி வருவாய் மூலம் கொடுக்கிறார்கள் என்றால், மத்திய அரசிடம் இருந்து அவர்களுக்கு வரக்கூடிய பணம் ரூ.15.35 லட்சம் கோடியாகத்தான் சில மாநிலங்களில் இருக்கிறது.

உதாரணமாக உத்தரபிரதேசத்தை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என்பதை 12-வது முதல் 15-வது நிதிக்குழுவின் புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் இந்திய அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 6.124 சதவீதம் வைத்திருக்கும் மாநிலத்திற்கு நிதித்துறையில் இருந்து வெறும் 4.79 சதவீதமாக மட்டுமே கிடைக்கிறது. செஸ், சர்சார்ஜ் மூலம் மாநில நிதியை மத்திய அரசு அபகரிக்கிறது. 2011-12ல் மத்திய அரசின் மொத்த வருவாயில் செஸ், சர்சார்ஜின் பங்கு 10.4 சதவீதமாக இருந்தது.

2021-22 ல் மத்திய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் மூலம் கிடைக்கும் வருவாய் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. செஸ், சர்சார்ஜ் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க தேவையில்லை என்பதால் மொத்த தொகையும் மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தொகை வரவில்லை என்று புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. நிதி ஆளுமையை மாநில அரசுகள் இழந்துள்ளன. எனவே இந்த நிதி நெருக்கடியிலும்கூட மக்கள் நலம் காக்கும் ஒரு அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் மத்திய அரசின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.72 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் கொடுப்பதைவிட இரட்டிப்பான தொகையை தமிழ்நாடு கொடுக்கிறது. நகர்ப்புற வாழ்விட பகுதிகளில் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் கொடுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் அதிக நிதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

சென்னை மெட்ரோ-2 ரயில் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை ரூ.63,246 கோடி. இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் 50 சதவீதம் நிதி வழங்க வேண்டும். 2021-22 ல் மத்திய நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டியபோதும் சொன்னார். ஆனால் இன்று வரை அதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.28.493 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் ரூ.17,532 கோடி ஒதுக்கியுள்ளது.

டெல்லி-உத்தரபிரதேசத்தில் ரூ.16,189 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ.13,109 கோடி, குஜராத்தில் ரூ.12,167 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ.11,565 கோடி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.3,273 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் இருந்தே எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கோடி, தமிழ்நாட்டிற்கு ஏன் இவ்வளவு குறைவு என்பதை புரிந்துகொள்ள முடியும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு உறுதி அளித்தபடி இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோன்று ரயில்வே திட்டங்களுக்கும் 2.5 சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ரயில்வே திட்டத்திற்கான கடைசி 5 வருடத்தில் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பி திருப்பி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டு மடங்காக பணம் கொடுத்திருக்கிறோம் என்கிறார். பண மதிப்பையும், விலைவாசி மதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தால், பணத்தின் மதிப்பு இன்று எந்தளவுக்கு குறைந்திருக்கிறது என்று தெரியும். இப்போதும் நமது முதலமைச்சர், வெள்ள நிவாரண உதவி கோரி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும். மிக்ஜாம் புயலுக்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.1,486 கோடியும், தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.541 கோடி என இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரண நிதியாக மக்களுக்கு பணமாக வழங்கி இருக்கிறோம் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவே பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது…!

டெல்லி அரசு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் தனித் தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்தநவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் சம்மன் அனுப்பியது. ஆனால்அதனை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து 3-வது முறையாக கேஜ்ரிவாலுக்கு நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதனையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

டெல்லி ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்த நவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் சம்மன் அனுப்பியது. ஆனால்அதனை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து 3-வது முறையாக கேஜ்ரிவாலுக்கு மீண்டும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதனையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு அர்விந்த் கேஜ்ரிவால் அனுப்பிய கடிதத்தில், “மாநிலங்களவைத் தேர்தல்,குடியரசு தின விழா ஏற்பாடுகள், அமலாக்க துறையின் வெளிப்படைத் தன்மையற்ற மற்றும்பதில் அளிக்காத அணுகுமுறையால் என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனக்கு கேள்விப் பட்டியலை அனுப்பி வைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமலாக்கத் துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானவை என்று வழக்கறிஞர்கள் என்னிடம் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபடுவதை தடுப்பதற்காக பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது. சம்மன்கள் சட்டவிரோத மானவை என்று அமலாக்கத் துறைக்கு நான் கடிதம் எழுதினேன்.

ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சட்டவிரோத சம்மன்களை நான் ஏற்க வேண்டுமா? சட்டப்படி சரியான சம்மன் அனுப்பப்பட்டால், நான் அவற்றை ஏற்று செயல்படுவேன். எனது நேர்மையே மிகப்பெரிய சொத்து. எனது நற்பெயரை கெடுத்து என்னை நிலைகுலையச் செய்ய அவர்கள் விரும்புகின்றனர்.

8 மாதங்களுக்கு முன் சிபிஐ என்னை அழைத்தபோது விசாரணைக்கு ஆஜரானேன். மக்களவைத் தேர்தலுக்கு முன் எனக்கு ஏன் சம்மன் அனுப்பப்படுகிறது? ஏனென்றால் அமலாக்கத்துறை மூலம் பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது என அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.