அண்ணாமலை குற்றச்சாட்டு:மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவை மாடுகளுக்கு விற்கும் விடுதி ஊழியர்கள்?

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், இன்றைய தினமலர் இணையவழி செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 – 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும்.

இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு. ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றுடன் முடியும் நிதியாண்டில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை. வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது.

பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு? உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் ராவத்: RSS அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கும்..!”

பிரதமர் நரேந்திர மோடி 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. ஆகையால், பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார் என உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தலைநகரம் மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி RSS தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, RSS அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே RSS தலைமையகத்துக்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

சரத்குமார் அறிவுரை: விஜய் நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும்..!

உலகம் போற்றுகின்ற ஒரு பாரத தலைவரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசிய விஜய்யின் பேச்சை கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”புதிதாக திரு.விஜய் துவங்கியிருக்கின்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து பேசியது விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. பாரத பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக GST வருவாயை வாங்கிக்கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை,

இருமொழிக்கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துக்களை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை. உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறிவரும் நிலையில், விரைவில் 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கும் சூழலில், நமது தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிகரமான முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, சர்வதேச தலைவர்களும் வியந்து பாராட்டி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய பெருமைக்குரிய பாரத பிரதமர் குறித்து எதிர்மறையாக பேசுவதற்கு முன்பாக எதை பேசினாலும், உண்மையை படித்துப்பார்த்து, தமிழ்நாட்டில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன, எதற்காக மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இருக்கிறது, வரிப்பங்கீடு ஏன் குறைகிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை அறிந்து, புரிந்து கொண்டு, ஆராய்ந்து தெளிவாக பேசியிருந்தால், அதுவும் பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

2004-14 காலகட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வு ரூ. 94,971 கோடியாக இருந்தது. ஆனால், 2014-24 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2,92,013 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது 207% அதிகமாகும். 2004-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உதவி மற்றும் அரசின் மானியங்கள் மூலம் ரூ. 57,925 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், 2014-24 காலகட்டத்தில் ரூ. 2,55,875 கோடி வழங்கப்பட்டது. இது 342% அதிகமாகும் என மத்திய நிதியமைச்சர் ஆதாரப்பூர்வமாக பேசியுள்ளதை அவர் படிக்கவில்லை என நினைக்கிறேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியில் தங்க நாற்கரச்சாலை திட்டம் இந்தியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன் முதல் காரணமாக அது அமைந்தது என்பதை நாம் அனைவரும் இன்று வரை உணர்வோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்று நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி என்பதை நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் நெடுஞ்சாலை வசதிகள், சாலை போக்குவரத்து, இரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்பாடு, புதிய விமானநிலையங்கள் உருவாக்கம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, சிலிண்டர் மானியம், பிரதமரின் மருத்துவ காப்பீடு, மக்கள் மருந்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல கோடி கடனுதவித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன்வளர் பயிற்சி, கல்வி மேம்பாடு என எத்தனையோ திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பது மத்திய அரசு என்பதையும் நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.

ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்து கொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவர், உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஏற்கெனவே நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளை பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் ஈடுபடுவீர்கள் என நம்புகிறேன்.” என சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

அண்ணாமலை விமர்சனம்: மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை..!

நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான் என ஆதவ் அர்ஜுனாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, “அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை பேசுகையில், “திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக FIR போட்டு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்? வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான். எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை.

2011 IPS ரேங்க்கில் எனது ரேங்க் 2. நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்” என ஆவேசமாக அண்ணாமலை பேசினார்.

சீமான்: நரேந்திர மோடி என்னை சந்திக்க வரவில்லை..! அதனால் அவரை சந்திக்க போவதும் இல்லை..!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களின் கேளிவிக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.

தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா? நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள்.

யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என சீமான் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

டிடிவி.தினகரன்: திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம்..!

திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி.தினகரன் பதிலளித்தார்.

அப்போது, அமமுக ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.

திமுகவுக்கு மாற்று தவெக என்று விஜய் கூறியிருப்பது, அவரது விரும்பம் மட்டுமே. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலம், பதவி வெறியாலும், திமுக மீதுள்ள பயத்தாலும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவும், திமுக தேர்தலில் வெற்றி பெற சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது திமுகவினர் பழி சுமத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தார் என்று கூறும் பழனிசாமிதான் உண்மையில் துரோகத்தின் வடிவம். தனியாக கட்சி நடத்துவதால் நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு கேள்வி: விஜய்க்கு ரூ.1000 கோடி வருமானம் வருது சரி.. விஜய் ரூ.220 கோடி வரி ஏய்ப்பு செய்கிறாரா..!?

ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மு.க. முதல்வர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களின் சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். அப்போது, “நம்ம தம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததில் எந்தவொரு தவறும இல்லை. அதை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

ஆனால், அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறாரே புஸ்ஸி ஆனந்த். அவருக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா.. இருவருக்கும் இடையே எத்தனை ஆண்டு பழக்கம் இருக்கிறது என்பது தெரியுமா.. அப்படிப்பட்ட நபரைப் பொதுச்செயலாளராக வைத்திருக்கும் கட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்..

ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று புஸ்ஸி ஆனந்திற்கு போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் தான் அடுத்த முதல்வர் என்றால் என்ன செய்ய முடியும். 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே.

மத்திய வருமான வரித்துறை இதில் நடவடிக்கை எடுக்குமா..? அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். அப்படி பாஜக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்.. பாஜக சொல்லியே இவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர்களிடம் வேறு ஒரு திட்டமும் இருப்பதாகவே தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: வெறுப்பரசியலின் ஆணிவேர் அறிவாலயம்தான்..!

வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம்தான் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பாஜக தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.

இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தொடர்ந்து சொல்லெறிபவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, இந்துக்கடவுள்களைக் கொச்சைப் படுத்தியவர்களைப் பதவியில் அமர்த்திக்கொண்டு, முருகனின் முதற்படைவீடான பரங்குன்ற மலையில் அசைவம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உங்களுக்குத் தானே வெறுப்பரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டும்?

உங்கள் அரசியல் வாழ்வைக் காத்துக் கொள்ள தமிழக மக்களை இனம், மொழி மற்றும் சமூக வேறுபாடுகளால் பிரித்தாள முயற்சிக்கும் உங்களுக்கு, அதை சுட்டிக்காட்டினால் எதற்கு இத்தனைக் கோபம் வருகிறது? மேலும், ஊர் முழுக்க மூன்று மொழிக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளில் “இருமொழி தான் வேண்டும்” என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும் கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என்பதை உங்கள் அறிவாலய அரசே நன்கு உணரும். இந்த அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியாமல், “வக்ஃப் வாரிய திருத்த மசோதா”-விற்கு எதிரான தீர்மானம் என்று நீங்கள் கிளப்ப முயலும் புது புரளியும் கூடிய விரைவில் நீர்த்துப்போகும், நீங்கள் கட்டமைத்த திராவிட மாயைகளிலிருந்து தமிழகம் கூடிய விரைவில் மீளும்! என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: சாத்தியமில்லை…!பிரிந்தது பிரிந்தது தான்..!

ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.

அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பலரும் இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் என்ன ஆளுங்கட்சியா? எங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் அமித் ஷாவிடம் பல்வேறு பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதேபோல் உருட்டல், மிரட்டல் விடுப்பதற்கு நாங்கள் என்ன ஆளுங்கட்சியாகவா இருக்கிறோம். டாஸ்மாக் ஊழல் செய்தது யார்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.

அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில்தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். திமுகவை தவிர்த்து வேறு கட்சியும் எதிரி கிடையாது. அதனால் தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை எங்களுடன் இணைத்து கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் vs யோகி ஆதித்யநாத்: இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி..!

இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி. வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? என யோகி ஆதித்யநாத் விமர்சனத்திற்கு பதிலடி மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பாஜக தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.

இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.