மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பெருந்தன்மையோடு கலந்து கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிகாரிகள், விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது.” போன்ற கருத்துகளை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டு வந்தவர். 1989லேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர். பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவித் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்.” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பிறகு, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற உறுதிபூண்டு, ரூ.1,916.41கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.அதன் தொடர்ச்சியாக திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை வினாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1,065 கிமீ நீளத்துக்கு கொண்டு செல்ல முடியும். நிலத்தடியில் குழாய் பதிந்து கொண்டு செல்லப்படும் இந்த தண்ணீர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகளில் நிரப்பப்படும்.

திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் செயலாளர் க.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோட்டில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கே.இ.பிரகாஷ் எம்.பி.,எம்எல்ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம், சி.சரஸ்வதி, ஈரோடு மேயர் எஸ்.நாகரத்தினம், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில், 1972-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைபட்டிருந்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள்கடந்த 2016-ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன்.

இந்த திட்டத்துக்கான பணிகள் 2019-ல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ரூ.1,916.41 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காமராஜர் தேசியக் கொடி இடத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்கள்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் காங்கிரஸின் பகுதி தலைவர் ஜெ.வாசுதேசன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இது தொடர்பாகச் சிவ.ராஜசேகரன் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தியமூர்த்தி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவாயிலில் சுதந்திர கொடியை ஏற்றிய பிறகு தான் பொதுக்கூட்டங்களுக்கோ, போராட்டங்களுக்கோ செல்வார். நாடு சுதந்திரம் அடையும்போது அவர் உயிரோடு இல்லை. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் பிறக்கும்போது, இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட அந்த கொடிக் கம்பத்தில் அன்று நள்ளிரவில் 12 மணிக்குப் பெருந்தலைவர் காமராஜர் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் பிறக்கும்போது, நள்ளிரவு 12 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருப்பவர் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அவ்வாறு இன்று நான் கொடியேற்றி இருக்கிறேன். 8-வது முறையாக இங்கு நான் கொடியேற்றி இருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என சிவ.ராஜசேகரன் தெரிவித்தார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

மேலும் 2021 – 2022 -ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புறத் திருக்கோயில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் என 2,155 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருவதோடு, முதன் முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, வைப்பு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023-2024 -ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் தமிழ்நாடு 2030 -ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி நிலையை எட்டும்..!

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும். பகலில், சூரிய மின் உற்பத்தி நேரங்களில் நீரை உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்றம் செய்து மின்சார ஆற்றலை சேமிக்கின்றன. இரவு நேரங்களில், மின்சார தேவை அதிகமாக இருக்கும் போது, சேமித்து வைக்கப்பட்ட நீரானது டர்பைன்கள் வழியாக விடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கையின் வாயிலாக, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நீரேற்று புனல் மின் திட்டங்களை செயல்படுத்த ஊக்கு விக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் வரும் 2030-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாக உள்ள அதிகப்படியான பசுமை எரிசக்தியை சமப்படுத்தி மின் கட்டமைப்பில் மின்சாரமாக மாற்றி பயன்படுத்த நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை வழிவகுக்கும்.

மேலும், சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்களாகும். இந்த கொள்கையின் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இந்த சிறிய நீர்மின் திட்டங்கள் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற தூய்மையான மின்சார வளத்தை உருவாக்க இயலும். நிலையான எரிசக்தி இருப்பை உறுதி செய்ய குறைந்துவரும் மரபுசார் எரிபொருளான நிலக்கரி, எரிவாயு போன்ற இருப்புகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.

சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு புனல் திட்டங்களால் கிடைக்கும் நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பின் திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும். சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 1984ம் ஆண்டு முதல் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட காற்றாலைகள் குறைந்த திறன் கொண்ட பழைய காற்றாலைகளாகும். இந்த காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய மூன்று வழிகள் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி மேலும் 25 சதவீதம் அதிகரிக்க இந்த கொள்கை வழிவகுக்கும்.

இந்த மூன்று கொள்கைகள் வாயிலாக, நமது மாநிலத்தின் மாசற்ற, பசுமை எரிசக்தி அதிகரிக்கப்படுவதுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயம் செய்துள்ள 2030 -ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடைவதற்கும் இக்கொள்கைகள் வழிவகை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 15 புதிய தொழில் திட்டங்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் 15 நிறுவனங்கள் ரூ.44,125 கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு பல புதிய முதலீடுகள் வரப்பெறுவதோடு, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இதேபோல், எரிசக்தி துறை சார்பாக தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் – கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் – கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்யாததை..! 4 மாதங்களில் மு.க. ஸ்டாலின் செய்தார்..! மகிழ்ச்சி மழையில் சின்னப்பிள்ளை..!

மதுரை மாவட்டம், அழகர் கோயில் செல்லும் சாலையில் அப்பன் திருப்பதி என்ற ஊரை அடுத்து உள்ள பில்லுசேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மனைவி சின்னப்பிள்ளை. தனது கிராமத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்துச் சென்று வந்த இவர், வேலை முடிந்ததும் அவர்களுக்கான கூலியை நில உரிமையாளர்களிடம் இருந்து மொத்தமாகப் பெற்று தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து வந்தார்.

எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு இவரது உதவி மிகப்பெரியதாக இருந்தது. விவசாய கூலித் தொழிலாளியான சின்னப்பிள்ளையின் சேமித்து வைத்த பணத்தை சில நிதி நிறுவனங்கள் ஏமாற்றிவிட்டன. ஆகவே விரக்தியிலிருந்த இந்தப் பாட்டிக்கு ‘களஞ்சியம்’ என்ற சுய உதவிக் குழுதான் மறுவாழ்வு கொடுத்தது. கடந்த 2001-ஆம் ஆண்டு ஸ்ரீசக்தி விருது வழங்கப்பட்டது. அதன் பிறகுதான் பில்லுசேரி கிராமத்திற்குச் சாலை வசதியும் பேருந்து வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கு சின்னப்பிள்ளையே முயற்சி மேற்கொண்டார். இப்படி ஊருக்கெல்லாம் பைசா பணம் இல்லாமல் உழைத்த இந்தச் சின்னப்பிள்ளை அவரது மகன் சின்னதம்பியின் வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்து வருவதாகக் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. வரதட்சணைக் கொடுமை, கந்துவட்டியால் பாதித்த பெண்கள், மது போதையால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எனப் பலரது வாழ்க்கையைக் கரை சேர்த்த இவர் கரைசேர முடியாமல் வறுமையில் தத்தளித்து வந்தார்.

மக்கள் சேவைக்காகக் கடந்த 2010 – ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கே இந்த நிலை. அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்தப் பாட்டிக்குப் பொற்கிழி வழங்கி பாராட்டி இருந்தார். இப்போது இந்தத் தள்ளாத 72 வயதிலும் அவர் சமூகசேவை செய்து வருகிறார் இந்த மூதாட்டி. திருப்பம் தந்த திருத்தணி. இத்தனை சேவைகளைச் செய்த இவருக்கு வசிப்பதற்கு ஒரு வீடு இல்லை. அந்தக் கொடுமையான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இந்தப் பாட்டிக்குப் பிரதமர் மோடி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆண்டுகள் 2 ஆண்டுகள் கடந்து அவருக்கு உரிய வீடு வழங்கப்படவில்லை.

அதனால் வருத்தமடைந்த சின்னப்பிள்ளை ஊடகங்கள் மூலமாகத் தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அதனையொட்டி ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு மாத்தூர் ஊராட்சிக்கு விடப்படப் பகுதியில் அரசு நிலமும் உடனடியாக ஒதுக்கித் தரப்பட்டது. அந்த நிலத்தில் இப்போது 3.50 லட்ச ரூபாய் செலவில் மாடி வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வீடு கட்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க. ஸ்டாலின்: கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது..! கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி பயிற்சியின்போதும், அரசு பயிற்சி மையத்தையும் பயன்படுத்திக் கொண்டேன். தற்போது நான் பணி ஆணை வாங்கப் போகிறேன்.

என் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகதான் பணியாற்றினார். என் அப்பா நல்ல துணி போட்டதில்லை, என் வளர்ச்சிக்காக அவர் பலவற்றை இழந்தார். நல்ல உணவு கூட அவருக்கு கிடையாது. என் அப்பா, என் தாத்தா எல்லோரும் தூய்மைப் பணியாளர்களாக இருந்தார்கள். நான் இன்று நகராட்சி ஆணையராகியுள்ள நிலையில், இன்றில் இருந்து எங்கள் தலைமுறையே மாற்றம் காணப் போகிறது. இந்த வாய்ப்பை அளித்த அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி’’ என தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், ‘‘நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியை கேட்டு அக மகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்கா எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து’’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறது..!

திமுக அரசு மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறது..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சாம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ 72.85 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: “நான் முதன் முதலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது, ஆலச்சாம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேலும் பேசிய பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும், சுட்டிக்காட்டியும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற பொம்மை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.

மேலும் பேசிய பழனிசாமி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் இடம் இருக்கும் போது, அதை விட்டு விட்டு மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்த சாலையில், மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.