“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை..!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒரு பக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் போராட்டம்: “நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்..!”

மத்திய இடைக்கால பட்ஜெட்டை 2024 பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு வஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்து அளித்துள்ளார் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஆர் பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு திமுக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.,க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் இந்தியா கூட்டணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நேற்று எழுதியுள்ளார். அதில், பத்தாண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, நியமன பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகார போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மிக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியை தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு.

அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாக பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-ல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றுவதை காண்கிறேன்.

அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள திமுக முதன்மை செயலாளர் – மாநாடுகளை சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேருவும், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது.

எனினும், இளைஞரணியின் 25-ம் ஆண்டினையொட்டி 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்று பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாக கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்பு கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டல்

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் கட்டிடங்களை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது என்றும், உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன் என கூறினார்.

கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது. திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால், வீட்டிற்கொரு பட்டதாரி உள்ளனர். தமிழ்நாடு மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இங்கு புதிதாக கட்டப்படவுள்ள தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைதொடர்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.42 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வணிகவரி துறையின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், வணிகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

இதில் பெரும்பான்மை வழக்குகள் தமிழ்நாடு வணிகவரி சட்டம், மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் நிலுவையில் உள்ளவை. இந்த சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஏற்கெனவே வழக்கில் இருந்த வரிச்சட்டங்களின்கீழ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன.

நிலுவையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு முடிவு காண வணிகர்கள் நீண்ட நாளாக முன்வருகின்றனர். இதைகவனமாக பரிசீலித்து, நிலுவை தொகையை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோல கடந்த காலங்களில் பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50 ஆயிரத்துக்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அரசின் இந்த முடிவால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடியால் பயனடைவார்கள். இவர்களை தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த 4 வரம்புகளில், முதலில் உள்ளவர்கள் மொத்த நிலுவையில் 20 சதவீதம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி, அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி, வழக்கில் இருந்து வெளிவரலாம். இதர 3 வரம்புகளில் உள்ள வணிகர்கள் நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டினால் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவை தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரைஅவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இந்த சமாதான திட்டம் அக்.16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 4 மாதங்களுக்கு, அதாவது 2024 பிப்.15-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசின் முயற்சியை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். நேற்றே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

கொள்ளையடிக்கிறது பாஜக அரசு.. நாம ரூ.1000 போடுறோம்.. அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லைனு பகல் கொள்ளை …

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்து விடக்கூடாது. நாற்பதும் நமதே நாடும் நமதே என நான் முழங்குகிறேன் என்றால் அவை எல்லாம் நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கை தான். இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் உங்களுடைய முக்கியமான முதல் கடமை. நம்முடைய சாதனைகளை தொடர்ந்து நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்களுடைய முக்கிய கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும்.

அதற்கு முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரை பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரி படிவம் உங்கள் கையில் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அச்சிடப்பட்டு சீக்கிரமே உங்கள் கையில் வந்து சேரும். வாக்காளரின் பெயர்; அவருடைய வயது; அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யார் யார்; என்னென்ன படித்திருக்கிறார்கள்; என்ன தொழில் செய்கிறார்கள்; எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.

உங்கள் வாக்குச்சாவடியில் 200 குடும்பங்கள் இருந்தால் அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நிர்வாகிகள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பூத் கமிட்டி முகவர்கள் என்னிடம் புகார் செய்யலாம். நான் நடவடிக்கை எடுப்பேன்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வரவும் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் ஒதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று பிரதமர் கூறினாரே மீட்டாரா? அப்படி மீட்கப்பட்ட கருப்பு பணத்தை இந்திய மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்றாரே.. தந்தாரா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று மோடி சொன்னாரே ஏற்படுத்தி தந்தாரா? படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்க மோடி சொல்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆளுக்கு ரூ.1000 மாதந்தோறும் நாம் கொடுக்கிறோம். அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார ஆட்சியாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. தாய்மார்களின் இந்த கோபம் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கத்தான் போகிறது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சாமிதுரை உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சாமிதுரை நேற்று காலமானார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த நீதிபதி சாமிதுரை. நீதிபதி சாமிதுரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பையும் முடித்தவர்.

1955 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1990 முதல் 94 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 1997 முதல் 2001 வரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார். திமுக அறிவித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் சாமிதுரையும் ஒருவராக இடம் பெற்றார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகன் மணிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நீதிபதி சாமிதுரை கடந்த 2009 விழுப்புரம் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில், உடல் நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நீதிபதி சாமிதுரை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். முதன்முறை உயர் நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்தஅரிய மனிதர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார்.

2018-ம் ஆண்டு தலைவர் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் புரட்சிகரமான பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டதும், அப்போதே என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு, ‘வருங்கால முதலமைச்சர்’ என அழைத்ததும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. ஜஸ்டிஸ் சாமிதுரையை இழந்து வாடும் அவரது கொள்கை வழித்தோன்றல் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி – கேரள மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஜஸ்டிஸ் எஸ்.மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. கே.சாமிதுரை அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அண்ணாமலை: ‘வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார்.

கடந்த 1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவாக ஒப்புக்கொள்கிறார். 1964-க்கு பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகன், பேரன், மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி. பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரம் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புபுயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிட கூடாது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெறத் தெரிந்த திமுகவுக்கு, 1964-ல்புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனித்துறை அமைத்து, பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். காசிபோல ராமேசுவரமும் விரை வில் உலகப் புகழை பெறும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற, பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் திமுககாரர் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கல்வி கொடை வள்ளல் ராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றும் மதுரை சென்றார். நேற்று இரவு முனிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் மதுரை விமான நிலைய சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை சிலைமான் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள முரசொலி மாறன் படிப்பகத்தை பார்வையிட்டு அண்ணா மன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைத்து சிறப்பித்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.