காலையில் பிராமணர்கள் போராட்டம்..! மாலையில் திராவிடர்கள் வருணாசிரம எதிர்ப்பு போராட்டம்..!

சென்னையில் ஒரே நாளில் பிராமணர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் போராட்டம் நடத்தியதால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் காலை முதலே பரபரப்பிறகு பஞ்சமில்லாமல் போனது.

பிராமணர்கள் சமூகம் மீதான அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க கோரியும் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை பிராமணர்கள் சமூகம் மற்றும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலடியாக அதே ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பாக ‘திராவிடர் எழுச்சி- வருணாசிரம- மனு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சீமான்: “ஒற்றை பனைமரம்” திரைப்படம் திரையிட அனுமதிக்கக்கூடாது..!

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது  எக்ஸ் பக்கத்தில், ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது!

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.

இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது.

தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் தமிழினத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை. போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இனி செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்..!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். பேச்சை முடிக்கும்போது நான் பேசுவதற்கெல்லாம் தலையாட்டக் கூடாது, ஆடு மாதிரி ஆட்ட கூடாது ஏனென்றால் ஆடு லண்டன் சென்று விட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சுட்டிக் காட்டிய செல்லூர் ராஜு தலையை ஆட்டி கொண்டு இல்லாமல் உண்ணாவிரதத்திற்கு குறைந்தபட்சம் 200 நபர்கள் ஆவது ஒவ்வொருவரும் அழைத்து வர வேண்டும் என செல்லூர் ராஜு பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தெர்மாகோல் விஞ்ஞானி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொடர்ந்து தரம் தாழ்ந்து எங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையிடம், செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால், எந்தவொரு தனித் தகுதியும் இல்லாத நிலையில், ஜெயலலிதாவின் பாதம் பிடித்து அமைச்சர் பதவி பெற்று இன்று வரை, செல்லூர் ராஜூவாகிய நீ வகித்த பதவிகளில் பல கோடிகள் ஊழல் செய்து, தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக் கொள்ளும் உனக்கு, மிக விரைவில் பாஜக சார்பில், நீ செல்லும் இடம் எல்லாம் உனக்கு எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

NLC நிறுவன இரண்டாவது சுரங்கம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு NLC நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்கு வீடு நிலம் கொடுத்து வாரிசு அடிப்படையில் பணிக்கு சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

எனவே தங்களுக்கு நிரந்தர ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்கி சரியான ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சுரங்க வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் non AMC ஒப்பந்த தொழிலாளராக மாற்றி தருவதாகவும் சரியான ஊதியம் வழங்குவதாகவும் NLC நிறுவனம் பேச்சுவார்த்தையில் உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் 10-ம் தேதி முடிவடைந்து ஒரு வார காலமாகியும் இன்றுவரை செயல்படுத்தாததால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் இன்று காலை முதல் மீண்டும் NLC நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமான் கேள்வி: திமுகவுடன் திருமாவளவன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா..?

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

திமுகவுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த அரசு தான் திமுக அரசு என சீமான் தெரிவித்தார்.

கொல்கத்தா போராட்டத்தில் காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி தேசியக்கொடியுடன் நின்ற முதியவர்..!

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ரது.

எம்.எல்.ஏ ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்களை இடமாற்றம் செய்யக்கோரி மருத்துவமனை முற்றுகை

திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்ச மருத்துவ சேவையும் கிடைப்பதில்லை. உள்ளூரைச் சேர்ந்தவர் மருத்துவ அலுவலராக இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. அவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரை பணியிட மாற்றம் செய்து 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநரிடம் எஸ்.சந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் மீது புகார் செய்து, அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை பரபரப்பு ஏற்பட்டது.

இந்து கோவிலுக்கு காவலாக நின்ற முஸ்லிம்கள்..!

வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, வேலைகளில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் சர்ச்சைக்குரிய விவகாரம் வன்முறையாக வெடித்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில், 300 பேர் வரை பலியானார்கள். இதில், கடந்த 5-ந்தேதி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகினார். அவர், பாதுகாப்புக்காக டாக்கா அரண்மனையை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்து உள்ளார். இதன்பின்பும் போராட்டம் தீவிரமடைந்து, பலர் உயிரிழந்தனர். மொத்தத்தில் வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் பரவின என ஒருபுறம் தகவல் பரவியது. இதனால், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், அந்நாட்டின் டாக்கா நகரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தகேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது.

‘அனைத்து மனிதர்களுக்கும் அன்னை’ என்ற பெயர் பெற்ற இந்த கோவிலுக்கு இந்து சமூக உறுப்பினர்கள் பலர் வருகை தருவது வழக்கம். இதன் அருகிலேயே பல மசூதிகளும் உள்ளன. இந்நிலையில், ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர், இந்த கோவிலை பாதுகாப்பதற்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதுபற்றி கோவிலின் முக்கிய பூசாரிகளில் ஒருவரான ஆஷிம் மைத்ரோ கூறும்போது, இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வருகின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது புத்த மதத்தினர் என அனைத்து மனிதர்களுக்கும் அன்னையானவள் தாயாக இருக்கிறாள். அவர்கள் ஆறுதல், வளம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை பெறுவதற்காக வருகிறார்கள் என கூறியுள்ளார்.

இந்த கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது என்றார். ஹசீனா இந்தியாவுக்கு சென்று தஞ்சமடைந்தபோது, கோவிலிலேயே இருந்தேன் என்றும் கோவிலுக்கு யாரும் வரவில்லை என்றும் கோவில் கதவுகள், நுழைவு வாசலை அடைத்து விட்டு கோவில் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளே இருந்தனர் என்றும் காவல்துறையினர் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். அப்போது, உள்ளூர் சமூக மக்கள் உதவியாக இருந்தனர். கோவிலுக்கு வெளியே இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பலர் பாதுகாப்புக்காக காவலுக்கு நின்றனர். இதனால், கோவிலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படவில்லை. மேலும் தடையின்றி தினமும் பிரசாதமும் வழங்கப்படுகிறது என ஆஷிம் மைத்ரோ கூறியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டத்தால் செங்கோட்டையில் பரபரப்பு ..!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட் பாட்டிலை வகுப்பறைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, சென்ட் பாட்டில் கீழே விழுந்து உடைந்துள்ளது. அதில் இருந்து வந்த நெடி காரணமாக 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 7 பேர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், செங்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிகளை பார்க்கச் சென்ற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சில ஆசிரியர்கள், மாணவிகளை கண்டித்ததாகவும், போதைப் பொருளை பள்ளிக்கு கொண்டு வந்தீர்களா எனக் கேட்டு திட்டியதாகவும் தெரிவித்த மாணவிகள், அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக மாதர் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. . இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடிவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

பாமக வேட்பாளர் திலகபாமா போராட்டம்..! காவல்துறையா..! இல்லை ஏவல் துறையா..!

தமிழ்நாட்டில் “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சூடுபிடிக்க தொடங்கிய பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது திண்டுக்கல் புறவழி சாலையில் கொட்டப்பட்டி சாலையில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்கு உள்ளே நுழைந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த விற்பனையாளர்களை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் செய்தியாளர்களிடம் பாமக வேட்பாளர் திலகபாமா பேசுகையில், “இன்று மது விற்பனை செய்யக் கூடாது என்று தெரிந்தும் இங்கு பாருடன் கூடிய விற்பனை நடைபெறுவது காவல்துறைக்கு தெரியுமா.? ஐ.பெரியசாமியின் வீட்டிற்குப் பின்புறம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்று வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி.,க்கு போன் செய்தேன். ஸ்குவார்ட் அனுப்புகிறேன். இப்போது வரை ஒரு நடவடிக்கையும் இல்லை” எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய பாமக வேட்பாளர் திலகபாமா, “காவல்துறையை தனக்கு சாதகமாக ஸ்டாலின் அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இது காவல்துறையா? இல்லை ஏவல் துறையா? என்று கேள்வி எழுப்பினார். இதுபோல எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கடையை மூட வேண்டும் என்று குறிப்பிட்ட திலகபாமா பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.