திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, திராவிட இயக்கம் கருவான ஊர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் இட்ட ஊர் இந்தத் திருப்பூர்! வந்தாரை வாழ வைக்கும், திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர்வீழ்ச்சியின் எழுச்சியாகவும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கும் நீலகிரி தொகுதியை உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடும், ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்! திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர் – பேச்சாளர் – சிந்தனையாளர்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் “தகத்தகாய சூரியன்” என்றுப் பாராட்டப்பட்டவர்தான், ஆ.இராசா அவர்கள்! பாசிச பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் துணிச்சலாக நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் சிறந்த நாடாளுமன்றவாதி! வாதத்திறமையில் யாராலும் வீழ்த்த முடியாத தலைசிறந்த கொள்கையாளர்! எனது பாசமிகு சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு, நீலகிரி நாடாளுமன்ற மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு சுப்பராயன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக எந்தப் பொறுப்பு வகித்தாலும், பாட்டாளிகளின் தோழராக இருக்கக்கூடியவர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் நிறைந்திருக்கும், இந்தப் பகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, சுப்பராயன் அவர்கள்தான் சரியான போராளி! அண்ணன் முத்தரசன் அவர்களின் ஆதரவைப் பெற்ற, தொழிலாளர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, திருப்பூர் மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இருவரும் அவர்கள் போட்டியிட்ட தேர்தல்களிலேயே, அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? மாபெரும் வெற்றி உறுதி, வேட்பாளர்கள் உட்காருங்கள்!
சுப்பராயன் அவர்கள் தெரிவித்ததைப் போல, இது மிக மிக முக்கியமான தேர்தல்! இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல்! சமத்துவம் நிலைக்க – சகோதரத்துவம் தழைக்க – மதநல்லிணக்கம் செழிக்க – சமூகநீதி கிடைக்க – இந்தியா கூட்டணியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமையவேண்டும்!
நேற்று சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கோவைக்கு வந்திருந்தார்! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்? பார்த்தீர்களா? எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று, பிரமாண்டமாக இருந்ததே? “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்!” சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும்!.
அது மட்டுமா! இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும் – தமிழ்நாட்டு வரலாறும் – தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி – தந்தை பெரியார் – பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். “நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர்” என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
சமூகநீதியை நிலைநாட்டும் நமக்கும் – சமூகப் பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.க.வுக்கும் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதே கருத்துதான் இப்போது சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சிலும் எதிரொலித்திருக்கிறது! திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான், ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 100 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த நாம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்! என மு.க.ஸ்டாலின் பேசினார்.