தடா பெரியசாமி தடாலடி: பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதற்கு வேலைகளை செய்துவந்தேன். பாஜகவும் அந்த தொகுதியில் என்னை வேலை பார்க்கச் சொல்லியது. ஆனால், திடீரென வேறு ஒரு வேட்பாளரை அறிவித்தார். அத்தொகுதிக்காக நான் நிறைய வேலைகளை செய்து வைத்திருந்தேன். ஆனால், என்னை கேட்காமல் வேறு வேட்பாளரை நிறுத்தியது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

எனது தொகுதிக்கு வந்தபோதுகூட அண்ணாமலை என்னிடம் இந்த தொகுதியில் நிற்பீர்களா என்று கேட்டார். வாய்ப்பு கொடுத்தால் நிற்பேன் என்றேன். அவர் தான் இந்த தொகுதியில் வேலையை தொடங்குங்கள் என்றார். அவரை நம்பி தொகுதியில் வேலை பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. பாஜக எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.

வாய்ப்பு கிடைக்காத என்னைப் போல் நிறைய பேர் இதே மனநிலையில் உள்ளனர். தற்போது நான் மட்டும் விலகியுள்ளேன். ஒருவாரத்தில் நிறைய பேர் பாஜகவில் இருந்து கட்சி மாறுவார்கள்.” என தடா பெரியசாமி தெரிவித்தார்.

சிவி சண்முகம் தடாலடி: போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி…!

2024 நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பாக்கியராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாக்கிராஜ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாக இருக்கிறது. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை பாஜக உருவாக்கி வருகிறது. நாடு இன்று ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அண்ணாமலை இங்கே மீண்டும் மோடி மீண்டும் மோடி என்கிறார். ஆனால், மக்கள் வேண்டாம் மோடி வேண்டாம் மோடி வேண்டாம் மோடி என்கிறோம்.

போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி என்கிறோம். நீங்கள் ஆண்டதும் போதும்.. மக்கள் கஷ்டப்பட்டதும் போதும். இன்னொரு முறை மோடியும் பாஜகவும் வந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே யாராலும் எந்தத் தொழிலும் செய்ய முடிவதில்லை.

யாராவது பாஜகவை எதிர்த்தால் அவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி நடவடிக்கைகள் பாய்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைப் போல அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்த்துச் செயல்பட்டாலே நடவடிக்கை என்கிறார்கள். பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன உத்தம காந்திகளா..? இன்று பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்குக் கூட வரவில்லை. நமது தயவால் நான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார்.

3-வது முறையாக வாரணாசியில் களமிறங்கும் நரேந்திர மோடி..! 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக..!

2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், இதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை வலுப்படுத்த பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த 29-ம் தேதி டெல்லி கட்சி தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய 5 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதில், கடந்த 2014ல் குஜராத்தின் வதோதரா, உபியின் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வென்ற நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். 2வது முறையாக 2019 தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது 3வது முறையாக வாரணாசியில் களமிறங்குகிறார்.

காயத்ரி ரகுராம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நியமனம்

நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு 2020-ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்ட ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் புகார் கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையே உரசல் மேலும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். இந்த விமர்சங்களுக்கு தனி ஒருவராக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட, காயத்ரி ரகுராம் பாகஜகவிலிருந்து விலகி பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்து காயத்ரி ரகுராம் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சியாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் பாஜகவை தினம், தினம் வாட்டி எடுத்து வந்தார். இந்நிலையில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்: அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல..! அவரது தந்தையே வந்தாலும் முடியாது…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது. நாங்கள் பதிலடி கொடுத்தால் அண்ணாமலை தாங்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். கவுன்சிலர் பதவி கூட அண்ணாமலை ஜெயிக்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் பக்குவம் வரும். இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை,என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

கருப்பு அறிக்கை எங்களுக்கு திருஷ்டி பொட்டு..!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று காலை கருப்பு அறிக்கை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கையை வெளிட்ட சிறிது நேரத்தில் மாநிலங்களவைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஒய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “கார்கே ஜி இங்கே இருக்கிறார்.

ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும், சிறப்பு விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது. அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மல்லிகார்ச்சுன் கார்கே: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே கருப்பு அறிக்கை ..!”

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கருப்பு அறிக்கையை வெளிட்ட மல்லிகார்ஜுன கார்கே, “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்தர மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு நரேந்தர மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்..! அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் நச்சுனு பதிலடி..!

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்: கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது..!

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மக்களவை தேர்தல் பணியை துவக்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோற்கடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதைபோல் 300, 400 இடங்களை பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்க முடியாது.

மேலும் சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்டபோது தமிழக அரசு கேட்ட ரூ.37,000 கோடி நிவாரண நிதிக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. தமிழகத்தில் 3 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி ஆறுதல், உதவி செய்யவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். யாராவது வருவார்களா என்று அதிமுகவினர் கடைவிரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது’ என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நகைக்கடை அதிபர்களிடம் ரூ.20 லட்சம் பாஜவினர் வசூலா..!?

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை குடியாத்தம் உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் நகர பாஜவினர் செய்திருந்தனர். குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையில் நடை பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் ராட்சத பேனர் மற்றும் கொடிகளுடன் கம்பங்கள் நடப்பட்டது. இந்நிலையில், குடியாத்தம் நகர பாஜகவினர், அண்ணாமலை நடை பயணம் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ரூ.20 லட்சம் வரை நன்கொடையாக பெற்றுள்ளார்களாம்.

இதற்கிடையில் பாஜக நகர நிர்வாகிகள், நகர தலைவர் சாய் ஆனந்தனிடம் வசூல் செய்த நன்கொடை தொகையை பிரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் மாவட்டம், மாநில நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவினர் வாட்ஸ் அப் குழு மற்றும் முகநூலில் பணம் வசூல் செய்தது சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு செய்து வருகின்றனர். நகைக்கடை அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது கட்சியினர் மூலமே அம்பலமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.