சீமான் வலியுறுத்தல்: தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக கைவிட வேண்டும்..!

டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழும் தமிழர்கள் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக் காக்கப் போராடும் தமிழ் மக்களை டெல்லி மாநில பாஜக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

ஜங்புராவில் அரசால் இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக 50 கி.மீ. தொலைவிலுள்ள நரேலாவில் வெறும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. டெல்லி மதராஸி கேம்ப் பகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி எனும்போது மக்களின் விருப்பத்திற்கு மாறாக வீடுகளை இடித்து வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். பாஜக ஆளும் வட மாநிலங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் குடியிருப்புகள் தொடர்ச்சியாக இடிக்கப்படும் கொடுங்கோன்மையை உச்சநீதிமன்றமே கடுமையாகக் கண்டித்து, எச்சரித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் அவர்களின் வசிப்பிடங்களிலேயே மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென டெல்லி மாநில பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தமிழர் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் கருத்து: டெல்லியின் அண்டர் தி கண்ட்ரோலில் தமிழ்நாடு உள்ளது..!

பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அண்டர் தி கண்ட்ரோல் தமிழ்நாடு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். இதனையே விஜய்க்கு முன்னர் என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையமால் பிரிந்து இருக்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல பேரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல.. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல.. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான். இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்ற்ன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என சீமான் தெரிவித்தார்.

அண்ணாமலை 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

அண்ணாமலை: 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா , வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், எல்லோருக்குமான கல்வி திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஐசிடி பாடத்திட்டம் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐசிடி அறிவியல் பாடத்தில் ஒரேயொரு சேப்டராக கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மிகப்பெரிய திட்டத்தில் குளறுபடி செய்துவிட்டு, நாங்கள் செய்வது சரி என்று தமிழக அரசு பேசிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதேபோல் பாஜகவை பொறுத்தவரை தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்திருக்கிறார்.

இதனை நான் தேர்தல் களத்தில் எதிர்கொள்வேன். 2026-ல் திமுகவின் அரசியல் பாரம்பரியத்தில் கடைசியாக ஆட்சியில் இருந்த நாளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் தாமரை வேஷத்தில் மட்டுமே இருக்கிறோம்.  தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் இலக்கு பாஜகவின் வளர்ச்சி மட்டும்தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், காலம் இருக்கிறது.

2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தலித் பெண் துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை..!

இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் நண்பருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்ததோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியது மட்டுமல்லாது அவரது ஆடைகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம் பெண் கிராமத்திற்குள் வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இது குறித்து முஸாபஹா நகர் காவல் துறையினர் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்த ஏழு பேரை கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.