கொள்ளையடிக்கிறது பாஜக அரசு.. நாம ரூ.1000 போடுறோம்.. அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லைனு பகல் கொள்ளை …

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்து விடக்கூடாது. நாற்பதும் நமதே நாடும் நமதே என நான் முழங்குகிறேன் என்றால் அவை எல்லாம் நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கை தான். இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் உங்களுடைய முக்கியமான முதல் கடமை. நம்முடைய சாதனைகளை தொடர்ந்து நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்களுடைய முக்கிய கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும்.

அதற்கு முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரை பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரி படிவம் உங்கள் கையில் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அச்சிடப்பட்டு சீக்கிரமே உங்கள் கையில் வந்து சேரும். வாக்காளரின் பெயர்; அவருடைய வயது; அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யார் யார்; என்னென்ன படித்திருக்கிறார்கள்; என்ன தொழில் செய்கிறார்கள்; எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.

உங்கள் வாக்குச்சாவடியில் 200 குடும்பங்கள் இருந்தால் அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நிர்வாகிகள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பூத் கமிட்டி முகவர்கள் என்னிடம் புகார் செய்யலாம். நான் நடவடிக்கை எடுப்பேன்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வரவும் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் ஒதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று பிரதமர் கூறினாரே மீட்டாரா? அப்படி மீட்கப்பட்ட கருப்பு பணத்தை இந்திய மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்றாரே.. தந்தாரா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று மோடி சொன்னாரே ஏற்படுத்தி தந்தாரா? படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்க மோடி சொல்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆளுக்கு ரூ.1000 மாதந்தோறும் நாம் கொடுக்கிறோம். அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார ஆட்சியாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. தாய்மார்களின் இந்த கோபம் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கத்தான் போகிறது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சாமிதுரை உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சாமிதுரை நேற்று காலமானார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த நீதிபதி சாமிதுரை. நீதிபதி சாமிதுரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பையும் முடித்தவர்.

1955 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1990 முதல் 94 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 1997 முதல் 2001 வரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார். திமுக அறிவித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் சாமிதுரையும் ஒருவராக இடம் பெற்றார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகன் மணிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நீதிபதி சாமிதுரை கடந்த 2009 விழுப்புரம் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில், உடல் நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நீதிபதி சாமிதுரை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். முதன்முறை உயர் நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்தஅரிய மனிதர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார்.

2018-ம் ஆண்டு தலைவர் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் புரட்சிகரமான பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டதும், அப்போதே என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு, ‘வருங்கால முதலமைச்சர்’ என அழைத்ததும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. ஜஸ்டிஸ் சாமிதுரையை இழந்து வாடும் அவரது கொள்கை வழித்தோன்றல் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி – கேரள மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஜஸ்டிஸ் எஸ்.மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. கே.சாமிதுரை அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அண்ணாமலை: ‘வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார்.

கடந்த 1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவாக ஒப்புக்கொள்கிறார். 1964-க்கு பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகன், பேரன், மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி. பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரம் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புபுயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிட கூடாது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெறத் தெரிந்த திமுகவுக்கு, 1964-ல்புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனித்துறை அமைத்து, பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். காசிபோல ராமேசுவரமும் விரை வில் உலகப் புகழை பெறும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற, பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் திமுககாரர் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கல்வி கொடை வள்ளல் ராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றும் மதுரை சென்றார். நேற்று இரவு முனிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் மதுரை விமான நிலைய சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை சிலைமான் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள முரசொலி மாறன் படிப்பகத்தை பார்வையிட்டு அண்ணா மன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைத்து சிறப்பித்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி மாறன் 90-வது பிறந்தநாள்….மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

மறைந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கருணாநிதியின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறனின் 90-ஆவது பிறந்தநாள் இன்று. மதுரை சிலைமானில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று.முரசொலி மாறன் புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மின் இணைப்பு… “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்”…

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, சட்டசபையில் உத்தரவிட்டிருந்தார்.

மின்துறை அமைச்சர் இதற்கு பிறகு, மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநிலம் முழுதும், 43,244 கம்பங்களை மாற்றுவது, 20,570 இடங்களில் மின் மின் கம்பியை சரிசெய்வது என்று மொத்தம், 3.89 லட்சம் பணிகள் நடக்க வேண்டும். அவற்றை முறையான திட்டமிடலுடன் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, அதிக நேரம் மின் தடை ஏற்படாமல் செய்ய வேண்டும்.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், வரும் 24ம் தேதி முதல் நடத்த வேண்டும்.. கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று அறிவித்திருந்தார்.

அமைச்சர் இவ்வாறு அறிவித்திருந்த நிலையில், மின்வாரியமும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டது.. அதன்படி, கடந்த 24ம் தேதி முதல், சிறப்பு முகாம்களையும் நடத்த தயாராகிவிட்டது. “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” கடந்த 24.07.2023 முதல் ஆரம்பமானது.. ஒரு மாதகாலத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி பெயர் மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது என்றாலும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்பட்டு வருகிறது. இந்த மாதம் 11-ம் தேதி வரை, 1.08 லட்சம் பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த முகாம் முடிய இன்னும் ஒருவார காலமே உள்ளது.

வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726/- (ரூ 615+GST ரூ 111) செலுத்தி இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்:

அ) வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை.

(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.

(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.

ஆ) இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

செட்டில்மென்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.

(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.

இ) குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

பில்டர்கள்/டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின் வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் போன்ற ஆவணங்கள் அவசியம் என தெரிவிக்கப்படுள்ளது.

கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடிக்கு முதல் வணக்கம். அதன் நிழலில் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல் வணக்கம்.

இந்திய ஒன்றியத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அண்ணா முதலமைச்சர் ஆன பிறகுதான் 1967, ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. ஒரே ஒரு சங்கரலிங்கனார்தான் உயிரிழந்துள்ளார் என்று நினைப்பீர்களேயானால், 5 உயிர்களைத் தர தயாராக இருக்கிறோம் என தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. சென்னை மாகாணத்தின் பிற மொழி பேசும் எல்லா பகுதிகளும் தனித்தனி மாநிலங்களாக பிரிந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என பெயரிடக்கூடாது என கேட்டவர் பெரியார்.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் 3-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இதற்கான வாய்ப்பை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி.

திருநாவுக்கரசர் சொன்னது: போயஸ் வீட்டில் சேலை இழுப்பு நாடகதிற்கு ஒத்திகை செய்தாராம் ஜெயலலிதா…!

மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொதித்து எழுந்த கனிமொழி எம்பி மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து கனிமொழி இன்று பொங்குகிறாரே, அன்று 1989 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை மறந்துவிட்டாரா…? அவர் அவமானப்படுத்தப்பட்ட போது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா இனி இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என சபதம் போட்டார். அப்படிப்பட்ட திமுக இன்று திரௌபதி குறித்து பேசுகிறார்கள். இது என்ன அநியாயம் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் தகவலுக்கு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் சேலை கிழிப்பு சம்பவம் சட்டசபையில் நடைபெறவே இல்லை. இது ஜெயலலிதா போட்ட நாடகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்காக ஜெயலலிதா தனது வீட்டில் ஒத்திகை பார்த்ததாக அவருடன் இருந்த திருநாவுக்கரசரே தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சேலை இழுப்பு விவகாரத்தில் திருநாவுக்கரசர் கூறியது, எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக கருணாநிதி வந்தார். அப்படி முதலமைச்சரான போது அவரே நிதித்துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டார். 1989 -ம் ஆண்டு மே மாதம் மார்ச் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட் காப்பியை அதிமுக எம்எல்ஏ கிழிக்க முயற்சித்தார். இதை உணர்ந்த கருணாநிதி இரு கைகளை பரப்பி பட்ஜெட் பேப்பரை எடுக்காத வண்ணம் குனிந்தபடியே தடுத்தார். அப்போது அவருடைய கண்ணாடி கீழே விழுந்தது. உடனே திமுகவினர் கருணாநிதியை மூக்கில் குத்தியதால்தான் அவரது கண்ணாடி கீழே விழுந்ததாக சொன்னார்கள்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது அடி விழுந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரான என் மீது அடி விழுந்தது. கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கொறடா பின்னாடி இருந்தார். ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியில் பாதியை நான் வாங்கிக் கொண்டேன். என் உச்சி மண்டை வீங்கியது. ஜெயலலிதா குனிந்து கொண்டு கையை வைத்து படுத்துக் கொண்டார்.

ஓரளவுக்கு மேல் அடிப்பது குறைந்ததும் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறினோம். ஆனால் ஜெயலலிதாவின் சேலையை எல்லாம் உருவினார்கள் என வதந்தி பரவியது. கருணாநிதி முகத்தில் குத்தும் விழவில்லை, ஜெயலலிதாவின் சேலையும் இழுக்கப்படவில்லை. ஆனால் சேலை இழுப்பு விவகாரத்தில் ஜெயலலிதா அவருடைய வீட்டில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததை நானே பார்த்தேன் என திருநாவுக்கரசர் எம்.எல்.ஏவாக இருந்த போது சட்டசபையில் கூறியிருந்தார்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா தலைமுடி கலைந்தபடியே வந்து தனது சேலையை துரைமுருகன் உருவியதாகவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் தன்னை பார்த்து சிரித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தை துரைமுருகன் மறுத்துள்ளார். கடந்த 2003 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் இந்த பிரச்சினை எழுந்தது.

அப்போது பேசிய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதே சட்டசபையில் எம்ஜிஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 இல் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். இதில் என் சேலை கிழிந்துவிட்டது. ஆளும் கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்றார். உடனே துரைமுருகன், நீங்கள் கூறுவது தவறு. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன் என தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.