கே.பி.முனுசாமி: “வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை..!

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், “ஓட்டப் பந்தயத்தில் முன்னணியில் செல்பவர்கள் அடுத்ததாக யார் வருகிறார்கள் என்பதை தான் பார்ப்பார்கள். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

தற்போதைய தேர்தல் களம் என்கிற ஓட்டப் பந்தயத்தில் அதிமுக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் பின்னால் திமுக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுகவை பற்றிதான் பேசி வாக்கு சேகரிப்போம். வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தக் கடைசி இடத்தில்தான் பாஜக உள்ளது.

நேரடி களத்தில் வருபவர்களை பற்றிதான் பேச முடியும். பாஜகவை சரியான நேரத்தில் விமர்சிப்போம். இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. மேலும், தேசிய அளவில் பாஜக பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தையாகும்.

தமிழக மக்களிடத்திலேயே உங்களுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறித்து பிரதமர் மோடி பேசுவது, எங்கள் தலைவர்களை உண்மையாக நேசித்து கூறவில்லை. தமிழக மக்கள், எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் ஈடில்லா அன்பு கொண்டிருப்பதால், அந்த அன்பு உள்ளங்கள் மாறி நமக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற சுயநலத்தோடுதான் மோடி இந்த கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக நகர செயலாளர் வீட்டில் நகை, பணம் பறிமுதல்..!

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா, தாரமங்கலம் சன்னதி தெருவை சேர்ந்த அதிமுக நகர செயலாளர், நகர்மன்ற உறுப்பினரான பாலசுப்பிரமணியம். பாலசுப்பிரமணியம் 2 நகைக்கடைகள் நடத்தி வருகிறார். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வளங்குவதற்காக கோடிக்கணக்கில் பணத்தை பாலசுப்பிரமணியம் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்தின் இரண்டு வீடுகள், நகைக்கடைகளில் சோசாதனை செய்தனர். மேலும் அவரது மகன் பாஸ்கரின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்க பாஜக திட்டம்…! அதிமுக மாநில செயலாளர் குற்றச்சாட்டு…!

புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரி மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அரசு இயந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன. அவரது பிரச்சாரத்தின்போது காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால், இதை தேர்தல் துறை கண்டுகொள்ளவில்லை. தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் வாக்கு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது முகவரி பட்டியலை பாஜகவினர் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வாக்குக்கும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர். இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது.

இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பாஜக வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்தப் பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஆகையால், புதுச்சேரி அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பாஜக வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என அன்பழகன் தெரிவித்தார்.

பழனிசாமி பெருமிதம் தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது…!”

சேலம் மாவட்டம் வீரப்பன்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. இத்தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும், எம்எல்ஏவாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்படி செல்லும்போது அனைத்து இடங்களிலும் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர்.

ஒருசில இடங்களில்தான் எனது பெயர் எழுதப்பட்டுள்ளது. நூற்றுக்கு 90 சதவீதமான இடங்களில் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் அத்தனை பேரும்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். எடப்பாடி என்று சொன்னாலே, அந்தப் பகுதியைச் சார்ந்த அனைவரையும் அந்த பெயர் குறிக்கும். அதிமுகவின் வெற்றி உங்கள் அனைவரையும் சார்ந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அதில், அதிமுக வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தொகுதி சட்டமன்ற தொகுதி எடப்பாடி.

சுமார் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இந்தமுறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தத் தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றித் தந்துள்ளோம். தமிழகத்துக்கே ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்கி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களைச் செய்யலாம், அதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது என பழனிசாமி பேசினார்.

தடா பெரியசாமி தடாலடி: பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதற்கு வேலைகளை செய்துவந்தேன். பாஜகவும் அந்த தொகுதியில் என்னை வேலை பார்க்கச் சொல்லியது. ஆனால், திடீரென வேறு ஒரு வேட்பாளரை அறிவித்தார். அத்தொகுதிக்காக நான் நிறைய வேலைகளை செய்து வைத்திருந்தேன். ஆனால், என்னை கேட்காமல் வேறு வேட்பாளரை நிறுத்தியது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

எனது தொகுதிக்கு வந்தபோதுகூட அண்ணாமலை என்னிடம் இந்த தொகுதியில் நிற்பீர்களா என்று கேட்டார். வாய்ப்பு கொடுத்தால் நிற்பேன் என்றேன். அவர் தான் இந்த தொகுதியில் வேலையை தொடங்குங்கள் என்றார். அவரை நம்பி தொகுதியில் வேலை பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. பாஜக எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.

வாய்ப்பு கிடைக்காத என்னைப் போல் நிறைய பேர் இதே மனநிலையில் உள்ளனர். தற்போது நான் மட்டும் விலகியுள்ளேன். ஒருவாரத்தில் நிறைய பேர் பாஜகவில் இருந்து கட்சி மாறுவார்கள்.” என தடா பெரியசாமி தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பதிலடி “பாமக இல்லையெனில் அதிமுக 36 தொகுதிகளில் வென்றிருக்காது..!”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார். வேடந்தாங்கல் பறவை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் போது வரும். பின்னர் குளத்தில் தண்ணீர் வற்றியதும் சென்றுவிடும். மறுபடி தண்ணீர் வந்ததும் வரும். இது போல தான் பாமக. இவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார்.

பழனிசாமியின் விமர்சனத்துக்கு இன்று பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். எங்களின் உயிரை, உழைப்பை கொடுப்போம். அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்போம். ‘10.5 இடஒதுக்கீடு கொடுத்தோம், ஆனால் அவர்கள் எங்களுடன் கூட்டணி வரவில்லை’ என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 2019-ல் அதிமுகவுக்கு நாங்கள் ஆட்சியை கொடுத்தோம். நாங்கள் இல்லையென்றால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தது. எங்களால் தான் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சியும் இருந்தது. எடப்பாடியும் முதலமைச்சராக இருந்தார்.

அந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை 10.5 இடஒதுக்கீடு குறித்தும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் வலியுறுத்தினோம். நேரடியாக சென்று கூறினோம், போராட்டம் நடத்தினோம். ஆனால் தேர்தலுக்கு முன்புவரை இழுத்து, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு கடைசி நாள் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கிறது என்றால் 1 மணிக்கு தான் இடஒதுக்கீடு உத்தரவு வெளிவருகிறது. அதற்கு இடையில் நடந்ததை எல்லாம் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. உண்மையாகவே அவர்கள் மனதில் பின்தங்கிய சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், கொஞ்சம் முன்னதாகவே இடஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி வந்தால் தான் இடஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்கள். அதுவும் அவசர அவசரமாக இடஒதுக்கீடு கொடுத்தது அதிமுக. அதில் அவ்வளவு பிழைகள். நாங்கள் கேட்டது 16 சதவிகித இடஒதுக்கீடு. ஆனால் கொடுத்தது 10.5 சதவிகித இடஒதுக்கீடுதான்.

நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது. நீதிமன்றம் ரத்து செய்த பிறகு மீண்டும் அந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பழனிசாமி எங்காவது ஒரு இடத்தில் பேசியிருப்பாரா… இல்லை. இன்று வரை அவர் அதை பேசவில்லை. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பேச அவருக்கு தைரியம் இருக்கிறதா?. 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக தான் தோற்றதாக அதிமுக தலைவர்கள் பலமுறை சொல்கிறார்கள். 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றிபெற்று இருக்காது. அதிமுக ஆதரவாலும் நாங்கள் 4 தொகுதிகளை வென்றோம். ஆனால் 15 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. கடந்த ஆறு மாதமாக விசிகவையும், சீமானையும் கூட்டணிக்கு அழைத்து கொண்டிருந்தார் பழனிசாமி. அவர்கள் யாரும் வரவில்லை. அதன்பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார்.

இப்படி அவர்களை பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துவிட்டோம். எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் பாமக தனது கொள்கைகளை, சித்தாந்தத்தை விட்டுக்கொடுக்க போவது கிடையாது. ஒரு துளி கூட விட்டுக்கொடுக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சிவி சண்முகம் தடாலடி: போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி…!

2024 நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பாக்கியராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாக்கிராஜ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாக இருக்கிறது. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை பாஜக உருவாக்கி வருகிறது. நாடு இன்று ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அண்ணாமலை இங்கே மீண்டும் மோடி மீண்டும் மோடி என்கிறார். ஆனால், மக்கள் வேண்டாம் மோடி வேண்டாம் மோடி வேண்டாம் மோடி என்கிறோம்.

போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி என்கிறோம். நீங்கள் ஆண்டதும் போதும்.. மக்கள் கஷ்டப்பட்டதும் போதும். இன்னொரு முறை மோடியும் பாஜகவும் வந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே யாராலும் எந்தத் தொழிலும் செய்ய முடிவதில்லை.

யாராவது பாஜகவை எதிர்த்தால் அவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி நடவடிக்கைகள் பாய்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைப் போல அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்த்துச் செயல்பட்டாலே நடவடிக்கை என்கிறார்கள். பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன உத்தம காந்திகளா..? இன்று பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்குக் கூட வரவில்லை. நமது தயவால் நான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார்.

காயத்ரி ரகுராம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நியமனம்

நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு 2020-ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்ட ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் புகார் கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையே உரசல் மேலும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். இந்த விமர்சங்களுக்கு தனி ஒருவராக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட, காயத்ரி ரகுராம் பாகஜகவிலிருந்து விலகி பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்து காயத்ரி ரகுராம் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சியாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் பாஜகவை தினம், தினம் வாட்டி எடுத்து வந்தார். இந்நிலையில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்: அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல..! அவரது தந்தையே வந்தாலும் முடியாது…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது. நாங்கள் பதிலடி கொடுத்தால் அண்ணாமலை தாங்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். கவுன்சிலர் பதவி கூட அண்ணாமலை ஜெயிக்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் பக்குவம் வரும். இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை,என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்..! அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் நச்சுனு பதிலடி..!

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.