கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையுடன் அணுக வேண்டும் என காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள்..!

கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் மனைவி காமாட்சி சுவாமிநாதன் சக்ஷம் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவரான உள்ளார்.

இவர் விடுத்துள்ள அறிக்கையில், அவதூறு வழக்கில் கைதாகியுள்ள நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிரான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி ஆளாக அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்துகொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.

நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான். (Special Mother) எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். இதன் அடிப்படையில் எனக்கும் என்னைப்போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் அவரது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன் என காமாட்சி சுவாமிநாதன் அவர்கள் வெளியிட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தலைமுறைகள் கண்ட முதியவருக்கு 101-வது வயது பிறந்தநாள் கொண்டாடிய கொள்ளு பேரன் பேத்திகள்..!

சிட்டுக்குருவிகள் சிறு கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி, இரை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, தனது சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும் சந்தோஷமே தனி சுகமாகும். அதேபோல நம் மண்ணில் இன்பம், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு கூட்டுக் குடும்பங்கள் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக கொள்ளு தாத்தாவின் பிறந்தநாளை அனைத்து உறவுகளும் சங்கமித்து கொண்டாடும் சுகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு பல தலைமுறைகள் கடந்த பிறந்தநாள் தாராபுரத்தில் கொண்டாட பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வரும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ். அவர் தற்பொழுது ஓய்வு பெற்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் தனது இளைய மகன் மற்றும் மூத்த மகனின் பேரன் மற்றும் பேத்திகளுடன் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 101 வயது கோவிந்தராஜ் அவர்கள் தன்னுடைய பணிகளை இன்றும் தானே செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

தனது கொள்ளு பேரன் பேத்திகளுடன் கோவிந்தராஜ் ஒரு சிறு குழந்தையைப் போல அவர்களுடன் ஆடிப்பாடி விளையாடி தனது உறவினர்கள் உடன் பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பேரன் பேத்திகள் என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். இன்றுடன் தாத்தா கோவிந்தராஜிக்கு 101 வயது நிறைவடைவதை முன்னிட்டு அவரின் மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என 56 பேர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்கள் இணைந்து தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாத்தாவின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வெகு விமரிசையாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈமு கோழி பாணியில் கழுதைப்பால் முதலீடு எனக்கூறி ரூ.100 கோடி மோசடியை ஏப்பம் விட்ட கும்பல்..!

கழுதைப்பால் வியாபாரத்தில் யூடியூப் சேனலில் அதிக ஆர்டர்கள் வருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக திருநெல்வேலியை சேர்ந்த நிறுவனம் மீது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் கிரிசுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை கூட்டாளிகளாக கொண்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்ற ‘டாங்கி பேலஸ்’ என்ற பெயரில் கழுதை பண்ணையை தொடங்கினார்.

இவர்கள் ஈமு கோழி பாணியில், கழுதைப்பால் ரூ.1600 முதல் ரூ.1800 வரை ஒரு லிட்டருக்கு வழங்குவதாக விளம்பரம் செய்து உள்ளனர். இதுமட்டுமின்றி, யூடியூப் சேனல்களில் தனக்கு அதிகளவில் கழுதைப்பால் கேட்டு ஆர்டர்கள் வருவதாகவும், ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு மக்களை நம்ப வைத்துள்ளனர்.

மேலும், கழுதை பால் வியாபாரத்தில் முதலீடு செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இதனை உண்மை என நம்பிய தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலர், அந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் கழுதைப்பால் விற்பனையில் லாபம் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என பல மாநிலங்களில் முதலீட்டாளர்களை கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், கருத்தரங்கு நடத்தியுள்ளார். இவர்களின் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட பலர் இதில் இணைந்தனர். இதற்காக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ரூ.5 லட்சம் வசூலித்துள்ளனர். மேலும் கழுதைகளுக்கு சிகிச்சைக்கான முதலீடு எனக்கூறி ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மேலும், கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் வைத்தால் அது கெட்டுவிடும் என்பதால், அதனை பாதுகாக்க பிரிட்ஜ் வேண்டும் எனக்கூறி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடி என மொத்தம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் பணம் ஈட்டியுள்ளனர். ஆனால் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்..! நிர்வாகிகளை அடிக்க பாய்ந்த சாட்டை துரைமுருகன்..!

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது அவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இத்தனை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என அவரை ஒருமையில் திட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லையே’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்தோணி விஜயையும் நீயும், வெளியோ போ என சீமான் ஒருமையில் திட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் கெட்டவார்த்தையால் திட்டி அவரை அடிக்க பாய்ந்ததால் கூட்டத்தில் சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன், பாளையங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அரசகுமார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர்.

இந்நிலையில், திருநெல்வேலி விகேபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சீமானை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன்பின்னர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றவிடாமல் தடுப்பதற்காக எனது தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மாஞ்சோலைக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்’ என்றார். தொடர்ந்து, நெல்லை ஆலோசனை கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி கேட்டபோது, கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்’ என சீமான் தெரிவித்தார்.

அர்ச்சனா பட்நாயக் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பு..!

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, ஒடிசாவை சேர்ந்த 2002-ஆம் ஆண்டு தமிழக பிரிவு IAS-சான அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பற்றுக் கொண்டார். எனவே தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்..!

ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த காளியப்ப கவுண்டன்புதூர் மற்றும் ஆத்து பொள்ளாச்சி கிராமத்தில் சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் காளியப்ப கவுண்டன்புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமான, மீன்கரை ரோட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஆழியாற்றில் குறுக்கே சுமார் 250 மீட்டர் நீளம்,சுமார் 15 அடி அகலத்தில் தரைமட்ட பாலம் அமைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் சென்று வருவது மட்டுமின்றி, பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ளது.ஆனால், காளியப்ப கவுண்டன்புதூர் மற்றும் அதனை அடுத்த ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்துக்கு செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாற்றில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகன போக்குவரத்து இருப்பதால், சில நேரங்களில் கனரக வாகனங்கள் தரைமட்டபாலத்தில் வேகமாக வரும்போது, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மற்றொருபுறம், ஆழியாற்றில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கும் போது பாலத்தை தொட்டு வெள்ளப்பெருக்கு செல்கிறது. இந்த தரைமட்ட பாலமானது தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால், பருவ மழைக்காலங்களில் ஆழியாற்றில் தண்ணீர் அதிகளவு வரும்போது இந்த தரைமட்ட பாலமானது மூழ்கி விடுவதுடன், அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அந்நேரத்தில், காளியப்ப கவுண்டன்புதூர் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்துக்கு, அம்பராம்பாளையம் அல்லது நல்லூத்துக்குளி வழியாக சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலும் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்துப்பொள்ளாச்சி மற்றும் காளியப்ப கவுண்டன்புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால், இந்த இந்த தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து,பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலத்தில் போக்குவரத்து தடைப்படுவதை தவிர்க்க, அதன் அருகேயே உயர்மட்ட பாலம் கட்ட, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், இந்த தரைமட்ட பாலம் அருகேயே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, காளியப்ப கவுண்டன்புதூர் கிராம மக்கள் எண்ணி இருந்தனர். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும், இந்த வழித்தத்தில் உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான தொகை கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பதிலாக, வேறு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் காளியப்ப கவுண்டன்புதூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆழியாற்றை கடக்கும் தரைமட்ட பாலத்தை அப்புறப்படுத்தி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி விரைவில் மேம்பால பணி மேற்கொள்வதற்கான ஆய்வு பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்லையில், பொள்ளாச்சி திமுக எம்பி ஈஸ்வரசாமி நேற்று முன்தினம், ஆத்துப் பொள்ளாச்சியில் இருந்து காளியப்ப கவுண்டன்புதூர் செல்லும் வழியில் ஆழியாற்றை கடந்து செல்லும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றுவது குறித்து, வரைபடம் வைத்து ஆய்வு பணி மேற்கொண்டார்.

அப்போது அவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டறிந்து, விரைந்து மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய திமுக செயலாளர்கள் வக்கீல் தேவசேனாதிபதி, ஜூமாலயா யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள்…! திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை..!

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என தொல் திருமாவளவன் வேதியியல் முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு நடந்த விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அந்நிகழ்வில் தொல். திருமாவளவன் பேசுகையில், “ஒரு ஊரில் ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது.

அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு. அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றிவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள். இது அண்மைக் காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழலைச் சந்தித்து வருகிறோம். கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம்.

கொடி யுத்தம் என்கிற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுக்கலாம். நான் அடிக்கடி சொல்லுவேன், எனக்குப் பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னைப் பின்னால் கூறுவார்கள். அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள். இதுதான் இந்த மண்ணின் உளவியல் எனக்கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.

ஏன் திரும்பத் திரும்பத் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். நானாகவா சொல்கிறேன்? நீங்கள் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதால் தான் அந்த பதிலைக் கூறுகிறேன். திமுக விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட்னர் என்றால், நாங்கள் மைனர் பார்ட்னராக இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாகச் சென்று திமுகவிடம் டீல் பண்ணவில்லை, காங்கிரஸ் தனியாகச் சென்று கேட்கவில்லை.

நாங்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாக மாறும். திமுகவுக்காக சொல்லவில்லை, அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம். கொள்கை பிடிப்போடு இருக்கிறோம். அங்கே போனால் வளரலாமா, இங்கே போனால் வளரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது எங்களுக்கு தேவை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. கொள்கைப் பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. இது நமக்கு ஒரு பாடம். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு; அது திமுகவுக்கு கிடையாது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். நம் மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது.

ஆனால், 12 மணி… 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்துக் கிடக்கின்றனர். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் என யாரேனும் சொன்னார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது.

இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும்; இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம் நம்மை நோக்கி வரும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தாராபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை சிங்க முகத்துடன் வந்து சூரபத்மனை வதம் செய்த முருகன்!

தாராபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி தன்சுய ரூபத்துடன் வந்த சூரபத்மனை வதம் முருகன் செய்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் சஷ்டி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 7-ஆம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7.30 மணி அளவில் புதிய காவல் நிலைய வீதியில் உள்ள முருகன், கோவில் எதிரே முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து அலங்கியம் சாலை, புறவழிச் சாலை, தெந்தாரை, சர்ச்சாலை, அண்ணாசாலை, பெரிய கடை வீதி, டி.எஸ்.கார்னர், வழியாக அங்காளம்மன் கோவில் சென்றது.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில் கஜமுக வடிவில் வந்த சூரபத்மனை முதலில் முருகன் வதம் செய்தார். பின்பு சிங்க முகத்தில் வந்த சூரபத்மனையும், தொடர்ந்து சுய ரூபத்தில் வந்த சூரபத்மனையும் முருகன் வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை சேவலும், மயிலும் ஆக முருகன் ஆட்கொண்ட நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்ச்சியை காண தாராபுரம் நகர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். இறுதியாக மீண்டும் சுப்பிரமணிய சாமி கோவிலில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

செல்வப்பெருந்தகை: மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான்

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. வேறு கட்சியினரால் இதைக் கூற முடியுமா? காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான்.

கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா எனக் கேட்கிறார்கள். 100 சதவீதம் கிராமக் கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள். அதுபோல எங்களிடம் 100 சதவீதம் கமிட்டி இருக்கும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தலைமை ஏற்க வேண்டும். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்க வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும்” என செல்வப்பெருந்தகை பேசினார்.

எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை..!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.