போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிலமோசடி.!

திருநெல்வேலி, தென்காசியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மோசடி வழக்கில் 13 பேரை தேடி வரும் 3 பேரை காவல்துறை கைது செய்தனர்.

திருநெல்வேலி, ஆலங்குளத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதன் தலைமையிடம் சென்னையில் செயல்படுகிறது.

அந்த நிறுவனத்தின் தென்காசி மண்டல மாவட்ட மேலாளராக சண்முக சுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர் தென்காசி காவல் ஆணையாளர் சீனிவாசனிடம் புகார் மனு ஒன்று தந்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “பாவூர்சத்திரம் சந்தோஷ்நகரைச் சேர்ந்த சேர்மத்துரை. இவர் அதே நிறுவனத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

எங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவனத்தின் இயக்குநர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேர்மத்துரை, சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கரும், திருவள்ளூர் மாவட்டம் பூம்புகார் நகரைச் சேர்ந்த செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கரும் விற்பனை செய்துள்ளார்.

மேலும் கடையம் பெரும்பத்து கிராமத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் இரண்டு மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன் மற்றும் சார்லஸ், முத்துக்குமார், ஜோசப் பால்ராஜ், மதுரை வழக்கறிஞர் சிங்கார வடிவேல், அருள் செல்வன், அமிர்தராஜ், அமல்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். இந்த மோசடி குறித்து தெரிய வந்த தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. மேலும் சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு திரும்ப நிலத்தை நிறுவனத்திற்கு ஒப்படைத்து விடுவதாகவும், நிறுவனத்திற்கு தர வேண்டியதாக ரூ.66.05 லட்சத்திற்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன்படி சேர்மத்துரை கொடுக்கவில்லை. இதன் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சேர்மத்துரை உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், சேர்மத்துரை, ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 13 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.

கே.என்.நேரு தகவல்: அத்தியாவசியப் பொருட்களை வழங்க 3 ட்ரோன்கள் தயார்..!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்களை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும் இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி,, எம்.பிருதிவிராஜ், வருவாய் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர்பாபு: நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள்..!

நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை. இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.” என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை வெள்ள பாதிப்புகளை, பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக, நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்த புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்திருக்கிறது. பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்குவது வழக்கம். காரணம் இது பள்ளமான, தாழ்வான பகுதி, இங்கு தேங்கக்கூடிய தண்ணீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இந்தப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை துரிதமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை, பால் தேவை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசும், திமுகவும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை.

இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே, குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எங்களது தரப்பில் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதற்கு செவிசாய்த்து, அந்த குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” என சேகர்பாபு தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு..!

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்காக இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசின் மேம்பாலத்தில் ஆய்வு..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதி, சென்னை பேசின் மேம்பாலம் போன்றவற்றை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

சென்னை கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் சென்னை மேயர் பிரியா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்..! 22 மாவட்டங்களில் இன்று கனமழை..!

வானிலை ஆய்வு மையம் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை, இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த 3 நாட்களில் விலகக்கூடும்.

16, 17-ம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். அடுத்த 2 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இது மட்டுமல்லாது தமிழக பகுதிகளின் மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். அதனால் மேற்கூறிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.

தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்..!

கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அதன்பின்னர், எல்.முருகன் நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது எல்.முருகன் பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம். கைத்தறி பாதுகாப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து தெரிவித்துள்ளீர்கள். இது தொடர்பாக ஜவுளித் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.

மித்ரா என கூறப்படும் மெகா 7 ஜவுளி பூங்காவை மோடி கொடுத்துள்ளார். அதில் ஒன்றை விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் இங்கிருந்து ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் பொருளாதார மும் உயரும்.

கைத்தறியில் 70 சதவீத மானியத்தில் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜவுளி தொழில் அந்நிய செலவாணியை ஈட்டித்தருகிறது. 2047-ல் நாம் உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக இருக்கவேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார். அதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படு வோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை..!

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் வருடாந்தோறும் அக்டோபர் 13-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை நினைவு கூறும் வகையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினர் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய பேரிடர் அபாய குறைப்பு செயல்முறை நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் துணை தலைமையிலும் துணை வட்டாட்சியர் கந்தவேல் மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல் வருவாய் ஆய்வாளர் மாலினி கிராம நிர்வாக அலுவலர் சங்கர், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராஜா தாமரை பாண்டியன் உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி மேற்பார்வையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் இயற்கை பேரிடர் மற்றும் அபாய காலங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என நாளை விசிக ஆர்ப்பாட்டம்..!

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் 10-ம் தேதி விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழுகூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள் துரை.ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், முதன்மைச் செயலாளர் பாவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசும், மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசும் முன்வர வேண்டும்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மாநாடு ஒருங்கிணைக்கப்படும். ஒன்றியம் உள்ளிட்ட நிலைகளில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ‘சாம்சங்’ நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அரசு அனுமதிப்பதோடு, அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டு, பாலஸ்தீன மக்களின்கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகள் போன்றவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் SC, ST, OBC பிரிவினருக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.

மாநில SC, ST ஆணையம் அமைத்தது மற்றும் SC, ST துணைத் திட்டத்துக்கான சட்டம் இயற்றியது போன்றவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி. பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எஸ்சி இடஒதுக்கீட்டின் அளவை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும். SC பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையிலுள்ள ‘ன்’ விகுதியை பிற்படுத்தப்பட்டோருக்கு மாற்றப்பட்டது போல ‘ர்’ என முடியும் வகையில் மாற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.