திண்டுக்கல் சீனிவாசன்: சசிகலாவிற்கு கடவுள் அருள் இல்லை..! முதலமைச்சராக முடியவில்லை..!

கடவுள் அருள் இல்லாததால்தான் வி.கே. சசிகலாவால் தமிழகத்தின் முதலமைச்சராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகிக்க, முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகிக்க திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்து விடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு, `யார் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனீர்கள்? என்று உதயநிதி கேட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியேற்க வைத்தனர். அதன்பிறகு, நானே முதல்வராகப் பதவி ஏற்கிறேன் என வி.கே. சசிகலா தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தெய்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் வி.கே. சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்துவிட்டனர். அதன்பிறகு யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் வி.கே. சசிகலாதான். நீதிமன்றம் தண்டனை விதித்ததால்தான், அவரால் முதலமைச்சராக முடியவில்லை. அவருக்கு கடவுள் அருள் இல்லை. அதன்பிறகு, கடவுள் அருளால் அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தோம். அவர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவிக்கு வரவில்லை. ஒரு பதவிக்கு வரும்போது, மூத்தவர் காலில் விழுவது தவறில்லை. ஆனால், இதை தவறு என்கிறார் உதயநிதி. வயதுக்கு தகுந்தாற்போல அவர் பேச வேண்டும். அவரது தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

கிருஷ்ணசாமி: அருந்ததியர் உள் ஒதுக்கீடு..! 2026 தேர்தலில் திமுக எதிர்வினையை சந்திக்கும்..!

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை நீக்காவிட்டால், 2026 தேர்தலில் திமுக கண்டிப்பாக எதிர்வினையை சந்திக்கும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, புதிய தமிழகம் கட்சி சார்பில் நவம்பர் 7-ஆம் தேதி 6 அம்ச கோரிக்கை குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்.

தமிழகம் சமூக நீதியின் தாயகம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு நீதிக்கட்சி காலத்திலிருந்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இது மிகப்பெரியளவிலான சமூக அநீதியாகும். இதுபோன்ற அநீதி இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழகத்தில் மற்ற சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு தான் வழங்கப்பட்டுள்ளது. உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அருந்ததியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 18 சதவீதம் அப்படியே இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கூட தனி இடஒதுக்கீடு வழங்கவே கூறியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்குமாறு கூறவில்லை.

ஆனால் திமுக அரசு உள் ஒதுக்கீட்டில் குறியாக உள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டால் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட தெரியாமல் போனது வியப்பாக உள்ளது. உள் இடஒதுக்கீட்டை சரி செய்யாவிட்டால் 2026 தேர்தலில் அதற்கான எதிர்வினையை திமுக அரசு கண்டிப்பாக சந்திக்கும் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

“பிங்க் ஆட்டோ திட்டம்” சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆட்டோக்களை பெண்கள் வாங்க 1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ திட்டம் செயல் படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த ஆட்டோக்கள் பெண் ஓட்டுநர்கள் மூலமாக இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டுள்ளன.

எமர்ஜென்சி காலங்களின்போது புகார் பெறப்பட்டவுடன் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் GPS பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுயதொழில் செய்து பெண்கள் முன்னேறும் வகையில் ஊக்கப்படுத்தவும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிங்க் ஆட்டோ ஓட்டுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேம்டும். சென்னையில் குடியிருப்போராக இருக்க வேண்டும். CNG மற்றும் ஹைபிரிட் ஆட்டோ வாங்க சென்னையைச் சேர்ந்த 250 பெண்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாயை வழங்க உள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி தொகைக்கு வங்கிகளுடன் இணைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8 ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நவம்பர் 23 -ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சஞ்சய் ராவத் தகவல்: இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு..!

மகாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20 -ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நேற்று இரவே முடிந்து விட்டதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் இன்று மாலை வெளியாகும் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

3 மாஜி பாஜக MLA -க்கள் JMM கட்சியில் இணைந்தனர்..!

ஜார்க்கண்டில் பாஜக முன்னாள் MLA -க்கள் 3 பேர் உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள் திடீரென ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜகவை சேர்ந்த மூன்று முன்னாள் MLA -க்களான லூயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் துடு ஆகியோர் திடீரென முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று முறை பாஜக MLA -வாக இருந்த கேதர் ஹஸ்ரா, ஏஜேஎஸ்யூ கட்சித் தலைவர் உமாகாந்த் ரஜக் ஆகியோரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்தனர்.

 

பாஜக முன்னாள் MLA லூயிஸ் மராண்டி, கடந்த 2014-ல் நடந்த தேர்தலின் போது தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனை 5,262 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் பதிவில், ‘‘முன்னாள் பாஜக துணை தலைவர் மற்றும் மூத்த தலைவர் மரியாதைக்குரிய லூயிஸ் மராண்டியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குடும்பத்துக்கு வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

கிருஷ்ணசாமி: திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை..! ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை…!

திருமாவளவன் சொந்த சாதி மக்களுக்கும் உண்மையாக இல்லை எனவும் கூட்டணிக் கட்சிக்கும் உண்மையாக இல்லை எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு குற்றச்சாட்டியுள்ளார். நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாஞ்சோலை தொழிலாளர் ஆதரவு தெரிவித்தும் புதிய தமிழகம் சார்பாகப் பேரணி நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எல்.முருகனுக்கும் திருமாவளவனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. ‘திருமாவளவன் தலித் மக்கள் அனைவருக்குமான தலைவர் இல்லை. ஆகவே அவர் முதலமைச்சராக முடியாது என மத்திய இணையமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த எல்.முருகன் கருத்திற்கு, ‘முருகன் அருந்ததியர் அல்ல. RSS காரர்’ என தொல் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த திருமாவளவன் கருத்திற்கு எல்.முருகன், ‘RSS காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்’ என பேசி இருந்தார்.

இப்படி இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இரு துருவ மோதலாக மாறி இருக்கிறது. இதனிடையே அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை மு.கருணாநிதி அமல்படுத்திய போது அதை ஆதரித்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் வரை போய் திருமாவளவன் நிற்பது ஏன்? தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்திலிருந்தே அருந்ததியருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டை நான் எதிர்த்து வருகிறேன். அருந்ததியருக்கு அளிக்கப்படும் 3% உள் ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே 18% பட்டியலின மக்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் அருந்ததியருக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் வேலைக்காக 8 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 4 இடங்களை BC மற்றும் MBCக்கு ஒதுக்கிவிட்டனர். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. மீதி இருந்த 4 இடங்களையும் மொத்தமாக அருந்ததியருக்கே அரசு ஒதுக்கிவிட்டது.

அது எப்படி நியாயமாகும்? பறையர், தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 92 இடங்களையும் அருந்ததியச் சமூகத்தினருக்கே அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப் பெறும் ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் பறையர் மற்றும் பள்ளர் வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீட்டின் படிப் பார்த்தால் ஒன்று அல்லது 2 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் கடந்த 14 வருடங்களில் ஒட்டுமொத்த இடங்களும் அருந்ததியருக்கே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்படி எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் நான் தொடக்கத்திலேயே உள் ஒதுக்கீட்டை எதிர்த்தேன். 3% பிரிந்து அருந்ததியருக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 15% என்பது பறையர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கானது. அதில் மீண்டும் ஏன் அருந்ததியரை அரசு நுழைக்கிறது. அது ஒரு அநீதி. அன்று இதை ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறேன் திருமாவளவன் என்கிறார்.

அதையாவது உண்மையாக எதிர்க்கிறாரா? என்று அவர் சொல்லட்டும்? திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. இருக்கும் கூட்டணிக்கும் அவர் நேர்மையாக இல்லை. கருணாநிதி நடத்திய கூட்டத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நீதிமன்றம் திருமா போகிறார். வழக்கு 15 வருடங்களாக நடந்து வருவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? கேட்டால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்கிறார்.

சீராய்வு மனு போடுவதற்கு என்ன அர்த்தம்? எதிர்ப்பதா? ஆதரிப்பதா? காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று எனப் பேசக் கூடாது? வடமாவட்டத்தில் உள்ள பறையர் சமூகத்தினர் மத்தியில் நமக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசத் தயாரா? நம் மக்களுக்காக உண்மையாக இருக்கவேண்டும். திருமாவளவனுக்குப் பதவிதான் பெரிது என்றால் இடஒதுக்கீடு பற்றிப் பேச அவருக்கு உரிமை கிடையாது. அப்படி உண்மையாகவே உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவராக இருந்தால் எங்கள் பேரணியில் கலந்துகொள்வாரா? அதற்குத் தயாரா?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்

சீமானால் கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற இழப்புகள்..! ஒரு பயனுமில்லை..!

கடந்த 15 ஆண்டுகளில்எண்ணற்ற இழப்புகளை சந்தித்து சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம் என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

ரூ. 28 கோடி லஞ்சம் வழக்கில் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி, தஞ்சாவூர் – ஒரத்தநாடு பகுதியில் உள்ள அவரது வீடு, அவரது மகனின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்த நிலையில், அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2011 முதல் 2016 காலக்கட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். சென்னை பெருங்களத்தூரில் 2016-ல் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரியபோது, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பல இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி: ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும்..!

நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி: 50 பைசாவிற்கு ரூ.15,000 ரூபாய் அபராதம்..!

சென்னை பொழிச்சலூர் தபால் நிலையம் 50 பைசா சில்லறையை திரும்பக் கொடுக்க மறுத்ததற்காக, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு நபர் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்ப சென்றபோது, டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தபால் செலவாக ரூ.30 கொடுத்துள்ளார்.

ஆனால், மீதமுள்ள 50 பைசாவை தர மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில், அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் பொழிச்சலூர் தபால் நிலையம் மீது 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.