தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி. அதே பகுதியை சேர்ந்த மதன் குமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு சென்று மதன் குமார் பெண் கேட்டுள்ளார்.
ஆனால் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் மதன் குமாருக்கு பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் இன்று காலை ஆசிரியை ரமணி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது .
எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.