திருவண்ணாமலையில் தவெக மாவட்ட செயலாளர் சத்யா மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்த பெண் நிர்வாகிகள் நடத்திய போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… பெண்கள், கட்சி அலுவலகத்தையே இழுத்துப் பூட்டிப் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். இந்த விவகாரம் இப்போது விஜய் தலைமையிலான தவெகவுக்கு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரணியில் என்ன நடந்தது?
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சத்யா. இவரது கட்சி அலுவலகம் ஆரணி ஆற்றுப்பாலம் அருகேயுள்ளது. இவர் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண் நிர்வாகிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசுவது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது, சில்மிஷம் செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது பெண்கள் முன்வைத்துள்ளனர். மேலும், ஒரு பெண் நிர்வாகியிடம் பணம் மற்றும் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லை என்றும் புகார் கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த தவெக மகளிர் அணி மற்றும் பெண் நிர்வாகிகள், ஆரணியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய அவர்கள், அங்கிருந்த பேனரில் இடம்பெற்றிருந்த மாவட்ட செயலாளர் சத்யாவின் படத்தில் கருப்பு மை பூசி அழித்தனர். சத்யாவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த ஆரணி டவுன் காவல்துறையினர், புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சத்யா மீது ஆரணி டவுன் காவல்துறையினரும், டிஎஸ்பியிடமும் பெண் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் நிர்வாகி ஒருவர், “அவர் எங்களிடம் பேசும்போதும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தொட்டுப்பேசி தொல்லை தந்தார்.. அவர் நடந்து கொண்ட முறையே தவறாக இருந்தது.. எம்எல்ஏ மூலம் பொதுச்செயலாளரிடம் புகார் தந்தேன். உடனே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை மாவட்ட செயலாளர் மிரட்டினார்.. இதனால், மன உளைச்சல் அடைந்ததால், நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.
இதற்கு பிறகு மாவட்ட செயலாளர் மீது கட்சி தலைமைக்கு மீண்டும் புகார் அளித்தோம். இதனால் ஆத்திரமடைந்த அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்” என கண்ணீருடன் தெரிவித்தார். மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யா பற்றி சொல்லும்போது, அவருக்கு ஆதரவாகவும், அனுசரித்தும் செல்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் மாவட்ட அளவில் பதவிகள் வழங்கப்படுகிறது. பெண் நிர்வாகிகளை இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு ஆபாசமாக வார்த்தைகளில், மெசேஜ் மூலம் பேசி தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருகிறார்” என குற்றம் சாட்டியது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்பத்தியுள்ளது.