ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிகர் அகர்வால் (IAS), அவரது மனைவி மூத்த காவல்துறை அதிகாரி பிரஷாகா மாத்தூர் (IPS) இவர்கள் அனந்தா ரிசார்ட்ஸ் நடத்தும் கோயல் பேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து மொத்தம் 40 வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியிருக்கிறது.

சந்தை மதிப்பை விட, மிகக் குறைவான விலைக்கு.. அதாவது ( அடிமாட்டு விலை ) ரூ.15-16.5 லட்சத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. ஷிகர் அகர்வால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த ரிசார்ட் நிறுவனத்திற்கு கட்டுமான அனுமதி, சுற்றுச்சூழல் சான்றிதழ் சரிபார்ப்பில் சலுகை மற்றும் சிறப்பு நிதிச் சலுகைகளை வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சொத்துக்களை வாங்கிய பின்னர்.. அதே நிறுவனத்திற்கு தம்பதியினர் அதை மீண்டும் வாடகைக்கு விட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகை வாங்க வேண்டும் என்பதுதான் இவர்களின் பிளான். இப்படி கச்சிதமாக பிளான் செய்திருந்தும்.. கவனக்குறைவாக செய்த சில விஷயங்களால் சிக்கிக்கொண்டனர்.

அனந்தா ரிசார்ட் நிறுவனத்திற்கு அரசு சலுகை வழங்கிய அதே நாளில், ஆல்வார் பகுதியில் 20 வில்லாக்கள் இந்த தம்பதி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. 2026-ல் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களில் ஐஏஎஸ் அதிகாரி 14 சொத்துக்களை மட்டுமே கணக்கில் காட்டியிருக்கிறார். இவரது மனைவி ஐபிஎஸ் அதிகாரி.. தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து தற்போது ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் இந்த தம்பதியினர் மற்றும் நிறுவன இயக்குநர்கள் மீது தீவிர விசாரணையை தொடங்கியிருக்கிறது.