கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வயதான தம்பதியினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், மீறி ஊருக்குள் போனால் மிரட்டல் விடுப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம், சாமியார் பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான ராஜ்குமார். இந்த கிராமத்தில் இவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை ராஜகுமாரும், அவரது மனைவியும் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் அந்த ஊரைச் சேர்ந்த நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவரின் உதவியோடு ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரையும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்களாம். இவர்களுடன் யாரும் பேசக்கூடாது, தம்பதி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தக் கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களாக ஊருக்குள் சென்றாலே மிரட்டல் விடுவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணவன்- மனைவி புகார் அளித்தனர். வயதான தம்பதியினர் என்பதையும் பாராமல் 21-ஆம் நூற்றாண்டிலும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உண்டு. ஆகையால் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், தனிநபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதோ முற்றிலும் சட்டவிரோதமானது. இந்திய உச்ச நீதிமன்றம் இத்தகைய கட்டப் பஞ்சாயத்துகளைத் தடை செய்துள்ளது. சமூகப் புறக்கணிப்பு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் ஆட்சியருக்கு உண்டு.
எனவே இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சட்டப்பூர்வமாகப் பாதுகாப்பு பெற உடனடியாக உங்கள் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று, உங்களை ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நேரடியாக எழுத்துப்பூர்வமாகப் புகார் அளியுங்கள். அவர்கள் நேரடியாக கிராமத்தில் ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுவார்கள்.