திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையர் கிருத்திகா, பொறியாளர் வசந்தன், மேலாளர் கோமதி, நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர். எஸ். பாண்டியன், முன்னிலை வகித்தனர். தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தீண்டாமை உறுதிமொழி வாசித்து தீர்மானங்களை படித்தார்.
இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் பேசுகையில், நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தும் பன்றிகள் நிறைய சுற்றுவதால் ஒரு கால அடிப்படையில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் வயதானவர்களை அச்சுறுத்தும் வகையில் தெரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு கோசலைக்கு அனுப்ப வேண்டும். நகராட்சி பகுதியில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து உரிய சிகிச்சை அளித்து விட வேண்டும். மேலும் தெருவிளக்கு உள்ளிட்டவைகளை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

கவுன்சிலர் தாஜுதீன் பேசுகையில், திருத்துறைப்பூண்டியில் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடைகளும் டெண்டர் விடப்பட்டுள்ளன. ஆனால், தரைக் கடைகள் அமைத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆகவே ஆக்கிரமபுகளை உடனடியாக புதிய பேருந்து நிலையத்தில் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த்தை எடுத்துரைத்தார்.
இதேபோல,கவுன்சிலர் எழிலரசன் பேசுகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் உடனடியாக அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்திலும் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்.மேலும் பேருந்து நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள ரயில் நிலையத்தை இணைக்கும் சாலையை நகராட்சியின் மூலம் விரைவில் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நகர மன்ற உறுப்பினர்கள் பேசும்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க குடிநீர் வாரியத்திடம் நகராட்சி வலியுறுத்த வேண்டும். தெருவிளக்கு அமைக்க வேண்டும், மழை நேரமாக இருப்பதால் கொசுமருந்து அனைத்து பகுதிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அடிக்க வேண்டும், நகராட்சி பகுதியில் மழை நீர் தேங்காமல் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் புதிய பேருந்து நிலையத்திற்கு சிசிடிவி கேமரா வைக்க அரசுக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது எனவும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுவதாகவும் விரைவில் முடிவடையும் எனவும், தெருவிளக்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாகவும் கவிதா பாண்டியன் தெரிவித்தார். இந்த கூட்டத்திற்கு, கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் ராஜா, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகோயன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.