இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட T – 20 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 22-ந் தேதி நியூசிலாந்தின் தெற்குத் தீவில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஏக்லி ஓவல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் T-20 ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், 24-ந் தேதி நியூசிலாந்தின் வெல்லிங்டனில் அமைந்துள்ள ஹென்றி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T-20 ஆட்டத்தில் இந்தியா மீண்டும் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 3-வது T-20 ஆட்டம் வெலிங்டனில் அமைந்துள்ள ஹென்றி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் சூழலில் இந்தியா களமிறங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய நிலையில் திடீரென்று 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி யாரும் எதிர்பாராத வகையில் தொடக்க வீரராக களமிறங்கி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். தொடக்க வீரராக விளையாடிய வைபவ் சூர்யவன்சி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அணியின் ஸ்கோரை தொடங்கினார். இதனையடுத்து இரண்டாவது பந்து நோ பால் ஆக மாற பிரீ ஹிட்டில் மீண்டும் வைபவ் சூர்யவன்சி சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அதனை பவுண்டரி லைனில் நியூசிலாந்து வீரர்கள் தடுத்து விட்டனர். இதனை பயன்படுத்தி இரண்டு ரன்கள் ஓடி வைபவ் எடுத்தார்.

அதன் பின்பு மூன்றாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரை அடித்த வைபவ் சூர்யவன்சி நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா ஆட்டத்தின் தனது முதல் பந்தை எதிர்கொண்டு தன் பங்கிற்கு அவரும் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் நிலைகுலைந்து போன நியூசிலாந்து வீரர் ஜாக்கப் டாபி முதல் ஓவரின் கடைசி பந்தை ஷார்ட் பாலாக வீச முயன்றார். ஆனால் அது ஓயிடாக சென்று விக்கெட் கீப்பிரையும் தாண்டி பௌண்டரிக்கு சென்றது. இதனால் இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் கிடைத்தது. இதையடுத்து முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் ஷர்மா மீண்டும் ஒரு சிங்கிள் எடுத்தார்.
இதன் மூலம் முதல் ஓவரில் இந்திய அணி 26 ரன்கள் அடித்தது. இந்த ஜோடி நியூசிலாந்து வீரர்கள் வீசிய பந்தை எல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து நொறுக்க நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதன் மூலம் 2.2 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் கடக்க அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்சி உடன் போட்டி போட்டுக்கொண்டு சிக்ஸர் பவுண்டரியை அடித்து நொறுக்கினார். இதில் அவர் 15 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஐந்து ஓவர் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் கடந்த நிலையில் பவர் பிளேல் 2024 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 113 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

6-வது ஓவரில் இந்திய அணி 18 ரன்கள் சேர்க்க பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்களை சேர்த்து புதிய உலக சாதனையை படைத்தது. அது மட்டுமல்லாமல் பவர் பிளேவில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மூன்று இடத்தில் இருக்கின்றார். மேலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி பல உலக சாதனைகளை உடைத்து இருக்கிறார். நியூசிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை இந்தியா 40 பந்துகள் மீதமிருக்க எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. முழு உறுப்பு நாடுகள் மோதிய T-20 வரலாற்றில் 190 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து சேஸ் செய்த புதிய உலக சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 11 சிக்சர்களைப் பறக்கவிட்டார். இதன் மூலம் சர்வதேச T-20 போட்டிகளில் 3 முறை 10 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்த உலகின் முதல் முழு உறுப்பு நாட்டு வீரர் என்ற அரிய சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். மேலும் அபிஷேக் சர்மா ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்த நிலையில் சர்வதேச T-20 அரங்கில் ரோஹித் சர்மாவின் 35 பந்து சத சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த T-20 கிரிக்கெட்டில் தனது 11-வது சதத்தைப் பதிவு செய்த அபிஷேக் சர்மா, விராட் கோலி (10), டேவிட் வார்னர் (10) மற்றும் குயின்டன் டி காக் (10) ஆகியோரை முந்தி புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். தற்போது கிறிஸ் கெயில் (22), பாபர் அசாம் (13) ஆகியோருக்கு அடுத்தபடியாக உலக அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச T-20 போட்டிகளில் இது இவரது 4-வது சதமாகும். இதன் மூலம் சூர்யகுமார் யாதவின் 4 சத சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்தார்.

மேலும் வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 18.13 ரன் ரேட்டில் விளாசி, சர்வதேச T-20 வரலாற்றிலேயே அதிவேகமாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த புதிய உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். அத்துடன் இந்திய T-20 வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனைப் பட்டியலில் முதல் 3 இடங்களையும் (13, 11, 11 சிக்சர்கள்) அபிஷேக் சர்மா தன்வசம் வைத்துள்ளார். இந்த சாதனைகள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத புதிய சகாப்தமாக அபிஷேக் சர்மா உருவெடுத்துள்ளார்.