கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது மனைவி பாரதி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி இணைச் செயலாளராக உள்ளார்.
கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டில் திடீரென சுரேஷ் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மனைவி பாரதியிடம் பூதப்பாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சுரேஷ் 2 மாதங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும் அவரது மனைவி பாரதி கூறினர். சுரேஷ் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, பிரேத பரிசோதனையில் சுரேஷ் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இதில், “குடிபோதையில் இரவு நேரத்தில் அலைபேசியில் பாலியல் வீடியோக்களை காட்டி துன்புறுத்தியதோடு, உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்தும் கொடுமைப்படுத்தினார்.
இதனால் எனது 14 வயது மகனும் மனதளவில் பாதிக்கப்பட்டான். எனவே, நானும், மகனும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்” என பாரதி கூறியுள்ளார். இதையடுத்து, ரவுடி இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், பாரதி மற்றும் அவரது மகனை நேற்று கைது செய்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.