“இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை” என தமிழக சட்டசபையில் சோழவந்தான் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழக சட்டசபையில் நேற்று சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நேற்று நடைபெற்றன.

அப்போது கருப்பையா பேசுகையில், “அரசு கல்லூரி சோழவந்தான் தொகுதியில் இல்லை. அதனால் அரசு மகளிர் கல்லூரி வேண்டும். ஒருங்கிணைந்த வாடிப்பட்டி நீதிமன்றம் வேண்டும். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் நிதி இருந்தால் அந்த சர்க்கரை ஆலையை திறந்து இருக்கலாம்.
இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு அந்த பணத்தை, இந்த சர்க்கரை ஆலைக்கு கொடுத்திருந்தால், அந்த சர்க்கரையை திறந்து இருக்கலாம்” என கருப்பையா பேசியிருந்தார். இவ்வாறு ’ஜல்லிக்கட்டு’ இளைஞர்களை சீரழிக்கிறது என பேசுவதா? என தவெக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.