புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் படிக்கட்டில் காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது. புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி, புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் இந்த மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையின் மாடிப் படிக்கட்டில் காலி மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அங்கு குப்பைகளும் தேங்கி துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனைக்கு சென்ற பொது மக்களும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. துாய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டிய மருத்துவமனை வளாகத்தில், மது பாட்டில்களும், குப்பைகளும் கிடப்பதை பொது மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைகள் முறையான பராமரிப்பின்றி, சேதமடைந்தும் சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைகள் முறையாக தூய்மைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அவை நோய் பரவும் இடமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனை படிக்கட்டில் மதுபாட்டில்கள் கிடப்பது மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி, மருத்துவமனை நிர்வாகத்தின் பராமரிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.