விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தவெக நகர செயலாளர் கார்த்திக், வடமேற்கு துணைச்செயலாளர் சதீஷ்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த தவெக பிரமுகர் பிரசாத். இவர்கள், அருப்புக்கோட்டையை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவரிடம், விருதுநகர் சூலக்கரை அருகே தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் குடோனில் இருந்து, டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கான டெண்டர் எடுத்து தருவதாக கூறியுள்ளனர். இதற்காக சவுந்தரராஜனிடம் இருந்து மூவரும் ரூ.22 லட்சம் பெற்று டெண்டர் எடுத்து தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதுகுறித்து சவுந்தரராஜன், மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அமைச்சரின் உதவியாளர், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரணை அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தவெக நிர்வாகிகளான கார்த்திக், சதீஷ்குமார் ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பிரசாத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.