முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 11 மணி நேர விசாரணைக்கு நடைபெற்றது. இந்நிலையில், விசாரணையின் போது தன்னை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பாரிலானுங் கெடும் என்பதற்கு இணங்க 5 சதவீத வாக்குகளை கூட பெற முடியாமல் நடிகர் விஜய்யும் தோற்று அவரது கட்சியும் தோற்று போகும். மக்கள் மத்தியில் வாக்கு வாங்க முடியாது. உலகத்தில் பிரசித்தி பெற்ற தலைவரை.. காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறார்.
காமராஜரை பெ. சீனிவாசன் தோற்கடித்த போது படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் தோற்கடித்தார் என்று சொன்ன போது, அண்னா சொன்னார்.. படிக்காத காமராஜர் கட்டி வைத்த பள்ளியில் படித்ததினால் பெ. சீனிவாசன் வெற்றி பெற்றார் என்று கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவிற்கு சோதனைகள் கொடுத்தாலும் கூட ஜெயலலிதா தோற்று போன போது கூட.. யானையின் காதுக்குள் சென்ற சிறு எறும்பு என்று நாசுக்காகத்தான் தலைவர் கூறினார்.

ஆனால், சட்டமன்றத்தில் உன் தகப்பனாரை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறாரே” என்று மிகவும் காட்டமாக ஒருமையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இது குறித்து தூத்துககுடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் தாள முத்துநகர் வழக்கறிஞர் விஜி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட் குற்றப்பிரிவு-1, குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி, மார்க்கண்டேயன் மீது U/S 351(3), 352,353(2) BNS ஆகிய பிரிவுளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை அவரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் விசாரணைக்காக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு 11 மணி நேர விசாரணை நடைபெற்றது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, தொடர்ந்து தூத்துக்குடி ஜேஎம் கோர்ட் 1ல் குற்றவியல் நீதித்துறை நடுவர் சுமதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.