பெண் ஜிம் பயிற்சியாளருக்கு மயக்க மருந்து கொடுத்து கணவன் பாலியல் பலாத்காரம் செய்தபோது மனைவி வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சுமார் 35 வயது கொண்ட பெண் ஒருவர் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஜிம்மில் ஏராளமானவர்கள் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சத்துவாச்சாரி அன்னை தெரசா தெருவை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வரும் எப்சியா என்ற பெண் ஜிம்மில் சேர்ந்துள்ளார்.
நாளடைவில் தன்னுடைய குடும்ப விவரங்கள் உட்பட அனைத்தையுமே எப்சியா, ஜிம் உரிமையாளரிடம் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகி விட்டார். தன்னுடைய கணவர் மணிவண்ணனுக்கு சரியான வருமானம் இல்லை, குடும்பத்தில் கஷ்டம் அதிகமாக உள்ளது என்றெல்லாம் வீட்டின் சோகக் கதைகளை எப்சிபா சொல்லி தனக்கு ஏதாவது உதவி செய்யுமாறும் ஜிம் உரிமையாளர் பெண்ணிடம், கேட்டுள்ளார்.
நன்றாக பழகிய பெண் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் அவரிடம் ஜிம் உரிமையாளர் இரக்கம் காட்டியுள்ளார். ஒருகட்டத்தில் தங்களின் வீட்டிற்கு வருமாறும் எப்சியா வற்புறுத்த தொடங்கியுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் 20-ந் தேதி தனது மகனின் பிறந்தநாள் விழா என்று சொல்லி, ஜிம் உரிமையாளரை தன்னுடைய வீட்டிற்கு எப்சியா வரவழைத்துள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி உடற்பயிற்சி கூட பெண் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எப்சியா மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிதுநேரத்தில் அந்த பெண் மயக்கமடைந்து உள்ளார்.
அந்த நேரத்தில் எப்சியாவின் கணவர் அந்த பெண் உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை மனைவி எப்சியா வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து, 6 மாதங்களாக அவ்வப்போது அந்த பெண் உரிமையாளரை மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் போன்றவற்றை தம்பதி பறித்து உள்ளனர். ஒரு கட்டத்தில் பெண் ஜிம் உரிமையாளர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்போது ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிம் பெண் உரிமையாளர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கள பிரியா உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார்.
புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து, மணிவண்ணன், அவரது மனைவி எப்சியா 2 பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த தம்பதியினரின் செல்போன்களும் பறிமுதல் செய்து இன்னும் இதுபோல எத்தனை பெண்களை இந்த தம்பதியினர் ஏமாற்றியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் அந்த செல்போனை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.