பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டதாகவும் தவெக பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரி பரபரப்பான குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “பட்டியலின நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நான், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
தமிழக அரசு கடந்த ஜூன் 5-ந் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையே நியமனப்பட்டியல் என்று ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது. இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர்.
தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சி தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், அமைச்சரும் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.
எனவே என்னை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கும், அது தொடர்பான அறிவிப்பாணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேர் கொண்ட விழுப்புரம், திண்டிவனம், வானூர், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியானது. இதில் ஞானசவுந்தரியின் பெயர் இடம் பெறவில்லை. அதோடு நேற்றைய தினம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இணையவழி முறையின் மூலம் உறுப்பினராக இணைந்துள்ள ஞானசவுந்தரி எதிரிகளுடன் சேர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஞானசெளந்தரி பேசுகையில் ,” உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தான் கோரியபடி விண்ணப்பதாரர்களை நேர்காணல் நடத்தி முறையாக தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலித்ததாகவும், தீர்ப்பு நகல் இன்னும் வெளியாகவில்லை. தீர்ப்பு வெளியாகும் முன்பே, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மாவட்ட செயலாளர் குஷி மோகன் தன்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். மற்ற நிர்வாகிகள் தன்னுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அவை தேவையான நேரத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஞானசௌந்தரி தெரிவித்தார்.
மேலும் ஞானசௌந்தரி பேசுகையில், தன்னை நேரடியாக யாரும் விளக்கம் கேட்கவில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலே நடத்தப்படவில்லை.
தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி வருவதால், அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், கட்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்த விவகாரம் குறித்து CBI விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என ஞானசௌந்தரி தெரிவித்தார்.