முதல்வரைப் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலையில் திருச்செந்தூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் அவர் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுத்த மாஜிஸ்திரேட், சொந்த ஜாமீனில் விடுவிக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
முதல்வரைப் பற்றி அவதூறான கருத்துகளை பொது மேடையில் பேசியதாக கூறி திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 5 மணிநேரதிற்கும் மேலாக விசாரித்தனர். மாலை 6 மணிக்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த வேளையில் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கடந்த ஜூன் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதோடு, ஒருமையில் பேசியதாக கூறி தவெக நகரச் செயலாளர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆளம் கட்சியினரின் மேல் பொதுமக்களின் அதிருப்தி குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்துப் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதால் தன்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன், அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண மனிதர் கிடையாது. அவர் முன்னாள் அமைச்சர். தற்போது எம்எல்ஏ. அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சற்று நேரத்திலேயே தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்குச் சென்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 5 மணிநேரதிற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வர வேண்டும் என்று கூறி 2 முறை சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவ காரணங்களை காட்டி வரும் 10-ந் தேதி ஆஜராவதாக கூறினார்கள். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதிட்டார்.
அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இந்த வழக்கில் சிறையில் அடைக்க வேண்டிய முகாந்திரம் இல்லை. உண்மையிலேயே அவருக்கு மருத்துவ பிரச்சனை உள்ளது. தற்போது அரசியல் காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தனது சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார். அதன்படி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்த வேண்டும். 10 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
இதுபற்றி அறிந்தவுடன் அங்கு கூடியிருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கைகளை தட்டியும், விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜாமீனில் வெளியே வந்த பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”எந்த காலத்திலும் யாருக்கும் திமுகாரரன் அஞ்சமாட்டோம் என்பதற்கான வரலாறு இது. ஆகவே எந்த வகையிலும் எங்களை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண முடியாது. ஏறக்குறைய 6 மாத காலத்துக்குள் இந்த ஆட்சி வீழ்ந்துவிடும்” என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.