திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–2027 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியருக்காக பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நேற்றைய முதல் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்புடன் கல்லூரி மகிழ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி. ராஜாராமன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், மாணவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிங்கப்பெண் அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் எஸ். உஷா தேவி அவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் சட்டங்கள், பெண்கள் பாதுகாப்பிற்காக நடைமுறையில் உள்ள புதிய சட்டங்கள், பெண்களுக்கான டோல்-ஃப்ரீ உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அவருடன் பெண் காவலர்கள் எஸ். பவித்ரா மற்றும் எஸ். சபீனா ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லோ. சதீஷ்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வணிகவியல் துறை பேராசிரியர் என். திலகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் அரசியல் பொருளாதாரத் துறை பேராசிரியர் கிருபாகரன் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர் மற்றும் முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.