கமிஷன், கரப்ஷன், ஊழல் என்று திமுக ஆட்சி செய்தது.. ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் கறைபடிந்து இருந்தது என செங்கல்பட்டில் வைகோ அடுக்கிக்கொண்டே சொல்லும் போது அப்படிப்பட்ட திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப கூட்டணியில் இருந்து கொண்டு பேசுவது அயோக்கியத்தனம் இல்ல.. கூட்டணியில் இருந்துகிட்டே கூட்டணியை அட்டாக் பண்ணுவது என்ன அரசியல் தர்மம் என வைகோ சொன்ன பதில்… ‘எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்’ என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் பிள்ளையான எனக்குள் ஓராயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியானது. சட்டப்பேரவையில் 2012-ஆம் ஆண்டு பால், மின்சார கட்டண உயர்வு குறித்து, தேமுதிகவின் எம்எல்ஏ சந்திரகுமார் கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த கேள்விகளுக்கு பலமுறை விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இருப்பினும், விடாப்பிடியாக, “உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை” என்று சந்திரகுமார் கேள்வி எழுப்ப ஜெயலலிதா ஆவேசமடைந்தார். “விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள்” என்று ஆவேசமாக விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.
அதுவரை அமைதியாக இருந்த விஜயகாந்த், “ஆளும் கட்சி எப்படி இடைத்தேர்தலில் வெற்றிபெரும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறினார். இப்படியாக வாக்குவாதம் தீவிரமடைந்தது. யாரால் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது என்ற பேச்சும் எழுந்தது. ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய ஜெயலலிதா, “தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்கு வருத்தப்படுகிறேன். இனி, அந்த கட்சியுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று ஆவேசமாக கூறினார். பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தேமுதிகவினர் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

‘ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகளின் பாணியில் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் சட்டமன்றத்தின் தாங்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, அதிமுக தனது பலத்தை நிரூபிக்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியுமா என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி சவால் விடுத்த தலைவர்களை கொண்ட தமிழகம்.
இன்று வைகோ அவர்கள் பேசியதை வார்த்தைகள் பார்க்கும்போது யார் மக்கள் நலனுக்காக உழைக்கிறார்கள், யார் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வேடிக்கை காட்டுகிறார்கள் என்பதை எடைபோடுவதில் யார் கோமாளி என்பது புரியாத புதிராக இருக்கிறது.