ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் நேற்று உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கொள்கலன் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் உள்ள SMS-2 மற்றும் STC-3 ஆகிய பிரிவுகளில் நேற்று திங்கள்கிழமை பணிகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது மிக அதிக வெப்பநிலையில் உருகிய நிலையில் இருந்த இரும்பை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய கொள்கலன் எதிர்பாராத விதமாக வெடித்தது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பெரிய கொள்கலனில் இருந்த உருகிய இரும்பு குழம்பு ஆலைக்குள் பெருமளவில் கசிந்தது. மிக அதிக வெப்பத்தில் இருந்த இரும்பு குழம்பு தொழிலாளர்கள் மீது பட்டதால், அங்குப் பெரும் பதற்றம் உருவானது. தொழிலாளர்கள் தங்களைக் காத்துக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இருப்பினும், அதையும் தாண்டி அந்த இரும்பு குழம்பில் சிக்கி சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் ஆலையின் நிரந்தர ஊழியர்கள், 3 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். உயிரிழந்த நிரந்தர ஊழியர்கள் தொழில்நுட்ப வல்லுநர் கோந்தினா பானு குமார், மேலாளர்கள் கே. பிரபாகர், கோல்ட் குமார் மற்றும் ஜி.வி. அப்பாராவ், எம். கிருஷ்ணா நாகு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோல இந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரமணா, திரினாத், என். அப்பல ராஜு ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த உடனேயே ஆலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.