ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் ஆங்காங்கே மழை பெய்தது. அப்போது பிரதான சாலையான மதுரை – ராமேஸ்வரம் சாலையில் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலை பகுதியில் தவெகவினர் காரில் வேகமாக பேருந்து நிலையத்திற்குள் புகுந்துவிசிலடித்து கூச்சலிட்டு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையில் பேருந்தை பிடிக்க முயன்ற பயணிகள், குறிப்பாக பெண்கள் இதனால் அதிருப்தியடைந்தனர். பின்னர், தவெகவினர் அங்கிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியார் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதிகளில் காரில் விசில் அடித்த படி கூச்சலிட்டு அவசர வேகத்தில் சென்றனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான காவல்துறையினர், தவெகவினரின் காரை விரட்டி பிடித்தனர். காரில் இருந்த அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த கவுதம், கார்த்திக், உதயகுமார், ஆதீஸ்வரன், ஜெயகார்த்திக், பிரசாத், சேது, கவுதம், சிவா, கார்த்திக், கவாஸ்கர் மற்றும் ஹேமநாதன் என தெரிய வந்தது. இவர்கள் 12 பேரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.